பாகிஸ்தானுக்கு 860 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. அதில் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வாங்குவதற்கு 265 மில்லியன் டாலர்கள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அணு ஆயுதங்களைப் பாதுகாக்க, இந்தியா உடனான உறவை வளர்ப்பதற்கு, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்த நிதி உதவும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் பராக் ஒபாமா முன்மொழிந்த பட்ஜெட்டில் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி தன்னுடைய பட்ஜெட் முன்மொழிவில் பாகிஸ்தானுடனான உறவை வளர்க்கும் பொருட்டும், இடையூறுகளை அகற்றுவதற்காக, தீவிரவாத குழுக்களை தோற்கடிக்கவும் பாகிஸ்தானுக்கு 859.8 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நிலைத்தன்மையை அதிகப்படுத்த, ஆற்றல் சக்தியை பெருக்க, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜான் கெர்ரி கூறினார்.