ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் வெள்ளிக்கிழமை இரவு உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து, இன்னும் சில மாதங்களில் பிரிட்டனில் நடைபெறவுள்ள பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு வழியேற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக கடந்த இரண்டு நாள்களாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உறுப்பு நாடுகளிடையே தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
அந்த அமைப்பின் உறுப்பினராக தொடர்ந்து நீடிக்க, தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என அப்போது பிரிட்டன் வலியுறுத்தியது.
இந்த நிலையில், பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க ஐரோப்பிய யூனியனின் பிற உறுப்பு நாடுகள் சம்மதித்தன.
இதன்மூலம், ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதிலிருந்து 7 ஆண்டுகளுக்கு விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பிரிட்டனுக்கு வழங்கப்படும். துகுறித்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதற்கான சம்மதத்தைப் பெற்றுள்ளேன். இனி சீர்திருத்தப்பட்ட ஐரோப்பிய யூனியனுடன் தொடர்ந்து இணைந்திருப்பதை வலியுறுத்தி மக்களிடம் பிரசாரம் செய்வேன் என்றார் அவர்.
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு, வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என பிரதமர் கேமரூன் அறிவித்தார்.