பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடர்ந்து மேலும் சில காலம் நிலை கொண்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேலும் சிறிது காலம் நிலை கொண்டிருக்க வேண்டும்.
காரணம், அண்டை நாடான பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.
அந்த அணு ஆயுதங்களைப் பாதுகாப்பது நமது கடமை என்றார் அவர். ஏற்கெனவே, பாகிஸ்தானை மிகவும் ஆபத்தான நாடு என டிரம்ப் கடந்த ஆண்டு கூறியது நினைவுகூரத் தக்கது. ஒரு தனியார் வானொலிக்கு கடந்த செப்டம்பர் மாதம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஈரானுக்கு அடுத்தபடியாக உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான். அணு ஆயுத பலமும், சக்தி வாய்ந்த ராணுவத்தையும் கொண்டுள்ள இந்தியா மூலம்தான் பாகிஸ்தானை அடக்க முடியும். அதற்காக நாம் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவைப் பேண வேண்டும் என்றார் டிரம்ப்.