அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, இரண்டு புதிய ஏவுகணைகளை ஈரான் புதன்கிழமை பரிசோதித்தது.
இதுகுறித்து ராணுவ துணைத் தளபதி ஹுசேன் சலாமி கூறியதாவது:
நீண்ட தொலைவு பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்குக் கூடிய காதர்-ஹெச் மற்றும் காதர்-எஃப் ஆகிய இரண்டு ஏவுகணைகள் வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன.
1,400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை அந்த ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி அழித்தன என்றார் அவர்.
ஈரானின் அல்போர்ஸ் மலைப்பகுதியில் இரண்டு ஏவுகணைகள் செலுத்தப்படும் காட்சி, அந்த நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
முன்னதாக, ஈரான் ராணுவம் மேற்கொண்ட போர்ப் பயிற்சியின்போது பல ஏவுகணைகள் பூமிக்கடியிலிருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதாக அந்த நாட்டின் அரசுச் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை அந்த நாடு உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்வதற்குமான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கையெழுத்தானது.
அதையடுத்து, ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொண்ட அமெரிக்கா, அந்த நாட்டின் ஏவுகணைத் திட்டங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இந்தச் சூழலில் ஈரான் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.