நேபாள பிரதமர் கே.பி.ஒலி வரும் 20-ம் தேதி முதல் ஒரு வாரம் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின்போது இரு நாடுகளிடையே வர்த்தகம், போக்குவரத்து தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மேலும் சீனாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தொழில்துறை மந்திரி சோம் பிரசாத் பாண்டே கூறுகையில், “பிரதமரின் சீனப் பயணத்தின்போது வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மற்றும் எரிபொருள் இறக்குமதி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எண்ணெய் ஆய்வு தொடர்பாக நேபாளத்திற்கு உதவி செய்வதாக சீனா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும்.
பொகாராவில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது, ஹூம்லா மாவட்டத்தை திபெத்துடன் இணைக்கும் சிமிகோட்-ஹில்சா சாலையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்” என்றார்.
நேபாளத்தின் புதிய அரசியலமைப்புக்கு எதிராக மாதேசி போராட்டக்காரர்கள் 5 மாத காலமாக நடத்திய போராட்டம் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் காரணமாக இந்தியாவுடனான வர்த்தகம் முடங்கி, பெட்ரோலிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.