வட கொரியாவில் பிரசாரப் பதாகையைத் திருடியதாக 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க மாணவரை உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஓட்டோ வார்ம்பியர் (21), வட கொரியாவில் அந்த நாட்டு பிரசாரப் பதாகையைத் திருடியதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்தக் குற்றச்சாட்டை வார்ம்பியர் ஒப்புக் கொண்டதையடுத்து, அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வட கொரிய நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது:
மாணவர் வார்ம்பியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவிலோ, உலகின் எந்த நாட்டிலுமோ சிறைத் தண்டனை விதிக்கப்படாது. எனினும், சிறிய குற்றத்துக்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 15 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மிகவும் கடுமையானதாகும்.
எனவே, மாணவர் வார்ம்பியருக்கு வட கொரியா பொதுமன்னிப்பு வழங்கி, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார் அவர்.