அமெரிக்காவில் 95 ஆண்டுகளுக்கு முன் நடுக்கடலில் மாயமான போர்க் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமெரிக்க கடற்படை வரலாற்றில் மிக நீண்ட காலமாக நீடித்து வந்த மர்மம் விலகியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 1921-ஆம் ஆண்டு, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான “யு.எஸ்.எஸ். கோனஸ்டோகா’ கப்பல் சான் ஃபிரான்ஸிஸ்கோ துறைமுகத்திலிருந்து ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் மாயமானது.
காணமல் போனபோது அந்தக் கப்பலில் 56 பேர் இருந்தனர்.
அந்தக் கப்பல்தான், போர் நடைபெறாத நேரத்தில் அமெரிக்கக் கடற்படை இழந்த கடைசி கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அந்தக் கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது இத்தனைக் காலமும் மர்மமாகவே இருந்து வந்தது.
மாயமான போர்க் கப்பலைத் தேடும் பணிகள் ஹவாய் தீவைச் சுற்றியே நடைபெற்று வந்த நிலையில், பியர்ல் ஹார்பருக்கு 3,860 கி.மீ. தொலைவில் அந்தக் கப்பல் கடந்த 2009-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், அது கனெஸ்டோ போர்க் கப்பல்தான் என்பது நவீன ஆய்வுகள் மூலம் அண்மையில்தான் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், “காணாமல் போன’ கப்பல் “கண்டுபிடிக்கப்பட்டதாக’ அமெரிக்கக் கடற்படை புதன்கிழமை அறிவித்தது.
புயலில் சிக்கிய அந்தக் கப்பலை பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்ல மாலுமிகள் திசை திருப்பியிருக்கலாம் எனவும், அந்த முயற்சி தோல்வியடைந்து கப்பல் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.