Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது”: மகாதீர் சீற்றம்

“பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது”: மகாதீர் சீற்றம்

4 minutes read

மகாதீர் மொஹம்மத்க்கான பட முடிவுகள்

பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளா.

அவ்வாறு அமைதி காத்தால் இஸ்‌ரேலியர்களால் கொல்லப்படும் பாலத்தீனர்களின் ரத்தமானது நம் கைகளிலும் படிந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.

உலகெங்கிலும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபோதே மகாதீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“நாங்கள் (மலேசியா) கடமை உணர்வுடன் உள்ளோம். தங்களை நீதி மற்றும் சுதந்திரத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலம் மிக்க நாடுகள், அட்டூழியங்கள் நடக்கும் போது அவற்றைக் கண்டு அமைதி காப்பது என்ற வழக்கத்தைப் பின்பற்றும் போது நமது கடமை மேலும் அதிகரிக்கிறது.

“கடந்த ஜனவரி 7ஆம் தேதியன்று, பாலத்தீனிய பகுதியில் 2 ஆயிரம் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிக்கு இஸ்‌ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்தகவலை குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ளது. வேறொரு நாட்டிற்குச் சொந்தமான நிலப்பகுதியில் குடியிருப்புகளை நிர்மாணித்து அது தங்களுடைய பகுதி எனச் சொந்தம் கொண்டாடும் இந்த வழக்கம் உலகின் வேறு எந்த நாட்டின் வரலாற்றிலும் காணப்படாத ஒன்று,” என்றார் பிரதமர் மகாதீர்.

பாலத்தீனக்கான பட முடிவுகள்

“12 ஆயிரம் பாலத்தீன குழந்தைகளை இஸ்‌ரேல் சிறைபிடித்துள்ளது”

கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து இதுநாள் வரை, இஸ்‌ரேல் ராணுவத்தால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீன குழந்தைகள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அக்குழந்தைகள் வளர்ந்து ஆளாகிவிட்ட நிலையிலும், தடுப்புக்காவலில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் வசதிகளுடனேயே வாழ்வதாகச் சுட்டிக்காட்டினார்.

யூனிசெப் உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகள் பாலத்தீன குழந்தைகளுக்கு எதிரான இஸ்ரேலின் அத்துமீறல்கள் குறித்தும், இஸ்‌ரேல் ராணுவ நீதிமன்றங்களால் பாலத்தீன குழந்தைகள் தண்டிக்கப்படுவது குறித்தும் நீண்டகாலமாக ஆவணப்படுத்தி வந்துள்ளதாக மகாதீர் தெரிவித்தார்.

“இவ்வாறு கைது செய்யப்படும் பாலத்தீன குழந்தைகளைப் பயன்படுத்தி, பாலத்தீனத்தால் சிறைபிடிக்கப்படும் தங்கள் வீரர்களை இஸ்‌ரேல் விடுவித்துக் கொள்வது கண்கூடாகத் தெரிகிறது. இவை அனைத்துக்காகவும் இஸ்‌ரேல் கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டும்.

“ஆனால் சுதந்திரம் குறித்தும், சட்டத்தின் ஆட்சி குறித்தும் அதிகம் பேசும் அமெரிக்கா போன்ற பலமிக்க நாடுகளோ, சட்டவிரோதச் செயல்பாட்டை சட்டப்பூர்வமாக்க முனைகின்றன. இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம் என்ற பெயரில் ஜெருசலேமை இஸ்‌ரேல் ஆக்கிரமித்துள்ளதை சட்டப்பூர்வமாக்கி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்,” என்று மகாதீர் அதிருப்தி தெரிவித்தார்.

இது முழுக்க ஒருதலைப்பட்சமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த ஒப்பந்தத்தை உருவாக்கும் நடவடிக்கையில் பாலத்தீனம் நேரடியாக ஈடுபடவில்லை என்றும், குறைந்தபட்சம் இது குறித்து பாலத்தீனத்தை கலந்தாலோசிக்கவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த அமைதித் திட்டமானது பலமிக்க ஆக்கிரமிப்பாளரை அங்கீகரிக்கிறதே தவிர, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை அறவே புறந்தள்ளியுள்ளதாகவும் மகாதீர் சாடினார்.

பாலத்தீனக்கான பட முடிவுகள்

“புனித நகரான ஜெருசலேமை வெள்ளித்தட்டில் வைத்து இஸ்‌ரேலிடம் தருவதற்கு வழி செய்கிறது இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம். இது உலகெங்கிலும் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் உணர்வுகளை முற்றிலும் புறக்கணிப்பதாக உள்ளது. இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்,” என்றார் மகாதீர்.

இந்தப் பரிந்துரை முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும் நியாயமற்றது என்றும் மலேசியா கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், ஏழு தலைமுறைகளாக பாலத்தீன மக்கள் நீதிக்கும் அமைதிக்கும் போராடி வருவதாகத் தெரிவித்தார்.

திட்டத்தை நிராகரிக்க பாலத்தீன மக்களுக்கு உரிமை உண்டு

முன்னதாக கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அமெரிக்கா முன்வைத்த மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை நிராகரிக்க பாலத்தீன மக்களுக்கு அனைத்துவிதமான உரிமைகளும் உண்டு என மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனம் மற்றும் அம்மக்களின் இழப்புக்கு மத்தியில், ஆக்கிரமிப்பாளரான இஸ்ரேலுக்கு மீண்டும் வெகுமதி அளிப்பது போல் இத்திட்டம் அமைந்துள்ளதாகவும் அவர் சாடியிருந்தார்.

“இது பாலத்தீனத்துக்கு நியாயமற்ற திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது என்பதுடன், அவர்கள் நீண்ட காலமாக அனுபவித்த அநீதிகளை மட்டுமே நிலைநாட்டும். இஸ்ரேல்-பாலத்தீன மோதலுக்கு நீடித்த தீர்வைக் காண்பதற்கான உறுதியான மற்றும் நேர்மையான முயற்சிகளுக்கு மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும். சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்பும் பங்கெடுக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

“பாலத்தீனம் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தரப்பு. நீண்ட காலமாக இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்ட தரப்பு,” என்றும் மகாதீர் தெரிவித்திருந்தார்.

மகாதீர் மொஹம்மத்க்கான பட முடிவுகள்

1980 முதல் பாலத்தீனத்துக்காகக் குரல் கொடுத்து வரும் மகாதீர்

கடந்த 1980ஆம் ஆண்டு முதல் பாலத்தீனத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் மகாதீர். அண்மையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் அவரது குழுவினரும் மலேசியாவுக்கு வருகை தந்தனர். அச்சமயம் அக்குழுவினர் மகாதீரைச் சந்தித்துப் பேசினர்.

பாலத்தீனத்துக்கான உதவிகளைச் செய்வதற்கு வசதியாக ஜோர்டான் தலைநகர் அம்மானில் மலேசியா தூதரகம் ஒன்றைத் துவங்க திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபரில் மகாதீர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து மகாதீரின் இந்த திட்டத்தை தீவிர இஸ்‌ரேல் மற்றும் யூத எதிர்ப்புக் கொள்கை என்று இஸ்‌ரேலின் வெளியுறவு அமைச்சு கோபத்துடன் வர்ணித்தது. மேலும் மேற்கு கரை பகுதிக்குச் செல்ல மலேசிய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவும் இஸ்‌ரேல் மறுத்துவிட்டது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More