June 7, 2023 7:16 am

ஐ.சி.சி. போட்டியை இலங்கையில் நடத்துவதற்கு வாய்ப்பில்லை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையில் சம்பூரண சர்வதேச தரம் வாய்ந்த 5 விளையாட்டரங்குகள் இல்லாததால் ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை எமது நாட்டில் தனித்து நடத்துவதற்கான வாய்ப்பு அற்றுப் போயுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக இரண்டாவது தடவையாக போட்டியின்றி தெரிவான ஷம்மி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் 2023 – 2025 பருவகாலத்துக்கான நிர்வாகிகள் தெரிவும் ஜய்க் ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை (20) முற்பகல் நடைபெற்றது.

நிர்வாக சபை உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்கு ஷம்மி சில்வா தரப்பினர் மாத்திரம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அடுத்த 2 வருடங்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர்கள் அனைவரும் போட்டியின்றி தெரிவானதாக தேர்தல் குழுவின் தலைவர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ‘இலங்கையில் சம்பூரணமான சர்வதேச தரம் வாய்ந்த 5 கிரிக்கெட் அரங்குகள் இல்லாததால் இலங்கையில் உலகக் கிண்ணப் போட்டியை தனித்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே 2026 இருபது 20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் கூட்டாக நடத்த நேரிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்குகளை நிறுவுவதற்கு சரியான திட்டங்களை வகுக்கவும் செயல்படுத்தவும் சிலர் தவறியமையே இதற்கு காரணம்’ என அவர் கூறினார்.

‘தியமகவில் சம்பூரணமான சர்வதேச விளையாட்டரங்கு ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும் யாரோ தலையிட்டு அதனை தடுத்துவிட்டார். மேலும் காலி சர்வதேச விளையாட்டரங்கம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பகல் – இரவு போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் பேரொளி மின்விளக்குள் பொருத்தப்பட வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஆர். பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கு, ஹம்பாந்தோட்டை சர்வதேச விளையாட்டரங்கு, கண்டி – பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கு, ரங்கிரி தம்புளை சர்வதேச விளையாட்டரங்கு ஆகிய 4 அரங்குகளே பேரொளி மின்விளக்குகள் பொருத்தப்பட்ட அரங்குகளாகும்.

இதேவேளை, ‘உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணி, காரோட்டப் பந்தயம், மெய்வல்லுநர் போன்ற விளையாட்டுக்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிதி உதவி வழங்கியுள்ளது. இதுபோன்ற இன்னும் பல விளையாட்டுக்களுக்கு அனுசரணை வழங்குவதற்கு எமது வருவாயை அதிகரிக்க வேண்டும்.

எனவே, சந்தைப்படுத்தலை மேம்படுத்தும் வகையில் கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டங்களை விரைவில் விஸ்தரிக்கவுள்ளோம். இதனை முன்னிட்டு வருவாயை 100 மில்லியன் ரூபா வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்’ என ஷம்மி சில்வா மேலும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் பாடசாலைகளில் பெண்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதார வசதியற்ற பாடசாலைகளில் பொது சுகாதார வசதிகளை செய்துகொடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், ஐ.சி.சி.யினால் இலங்கைக்கு கொடுக்கப்படவுள்ள வருடாந்த நிதி பங்கீடு வர்த்தகத்துறையின் பெறுமதிகளுக்கு ஏற்பவே வழங்கப்படுவதாகவும் அதற்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு அடுத்த 4 வருடங்களுக்கு வருடாந்தம் 27.12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாகவும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக ஐ.சி.சி.க்கு யார் அறிவித்தார்கள் என கேட்டதற்கு, ‘சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பூரண அங்கத்துவ நாடு என்ற வகையில் இலங்கையில் உள்ள நிலைமைகளை பேரவை உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இலங்கையை மட்டுமல்லாமல் ஏனைய அங்கத்துவ நாடுகளையும் ஐ.சி.சி. கண்காணித்துக்கொண்டே இருக்கிறது.

எனவே, இலங்கையின் நிலைமையை அவர்கள் கண்டறிந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஐ.சி.சி. அதிகாரிகள் தங்களது கடமைகளை செவ்வனே ஆற்றுகின்றனர் என்பது இதிலிருந்து புலனாகிறது.

மேலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டவர்கள். இதன் காரணமாக ஐ.சி.சி. எங்களை அங்கீரிக்கிறது’ என பதிலளித்தார்.

இதேவேளை, ‘ஐ.சி.சி.யின் பூரண அங்கத்துவ நாடு என்ற வகையில் அந்த நிறுவனத்துக்கு பதில் கூறவேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு இருக்கிறது. ஐ.சி.சி.யிடம் எங்களது கவலைகளை நாங்கள் தெரிவித்துள்ளோம். பல விடயங்கள் எமது கடமைகளை, அபிவிருத்தி பணிகளை செய்ய விடாமல் தடுத்துள்ளது.

வெளிநாட்டுக்கு வீரர்களை அனுப்பும்போது விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதால் அமைச்சுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்துகிறோம்’ என கௌரவ பொதுச் செயலாளர் மொஹான் டி சில்வா கூறினார்.

புதிய நிர்வாகிகள் (அனைவரும் போட்டியின்றி தெரிவு)

தலைவர்: ஷம்மி சில்வா

கௌரவ செயலாளர்: மொஹான் டி சில்வா

பொருளாளர்: சுஜீவ கரலியத்த.

உதவித் தலைவர்கள்: ஜயன்த தர்மதாச, ரவின் விக்ரமரட்ன

உதவி செயலாளர்: கிருஷான்த கப்புகொட்டுவ.

உதவி பொருளாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர் அதனை வாபஸ் பெற்றதால் புதிய ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்