Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு நீதியா? ஆழி செந்தில்நாதன்

தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு நீதியா? ஆழி செந்தில்நாதன்

8 minutes read
`திராவிட மொழி குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையானது`

“சமஸ்கிருதம் என்றுமே மக்களின் மொழியாக இருந்ததில்லை. அதுவொரு பதிவேட்டு மொழி. ஒரு சமயத்தின் பதிவுகள் உள்ள மொழி,” என்கிறார் மொழி செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்.

மொழி சமத்துவத்திற்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் செந்தில்நாதன் இந்திய மொழிகள் எதிர்கொள்ளும் பிரச்சனை, போராட்டம் குறித்து பிபிசி தமிழின் மு. நியாஸ் அகமதுவிடம் பேசினார்.

நரேந்திர மோதி அரசு பதவியேற்ற பிறகு முழு வீச்சில் இந்தி திணிப்பு நடக்கிறது எனக் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள். ஆனால், மோதி செல்லுமிடமெல்லாம் தமிழின் தொன்மை குறித்து பேசுகிறார். திருவள்ளுவர் குறித்து பேசுகிறார். தமிழ் சமஸ்கிருதத்தைவிடப் பழமையான மொழி என்கிறார். பின் ஏன் இப்படிக் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டிற்குள் உள்நுழைய கடவுச்சீட்டு தமிழ் என்று நரேந்திர மோதியின் தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் கூறியிருக்கலாம். அதனால் அவர் அப்படிப் பேசுகிறார் என நினைக்கிறேன். ஆனால், அவரது செயல்பாடுகள் அவரது பேச்சுக்கு முரணாக இருக்கிறது. இந்தியா பல மொழிகளைப் பேசக்கூடிய ஒரு நாடு. அதற்குரிய உரிமை, சமத்துவத்தை நிலைநாட்டுங்கள் என்றுதான் கூறுகிறோம்.

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழர்கள்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலைமை மாறிவிட்டது. இப்போது இந்திய ஒன்றியம் முழுவதும் பல தேசிய இனங்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட தொடங்கிவிட்டன. எங்களை போன்ற செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல. பல மாநில அரசுகளே தங்களது மொழியை காக்க சட்டம் இயற்றி உள்ளன.

நரேந்திர மோடிக்கான பட முடிவுகள்

2016ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தங்களுடைய மொழியை கற்பிக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றி இருக்கிறார்கள். அரசாணை பிறப்பித்து இருக்கிறார்கள்.

இந்தி திணிப்பின் வேகம் அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது. இந்தி தங்கள் தாயக மொழியை விழுங்கிவிடுமோ என்ற அச்சத்தில்தான் அந்த அரசுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

தமிழ்நாடு 50 ஆண்டுகளுக்கு முன்பே இரு மொழி கொள்கை மூலம் இந்தி திணிப்பை தடுத்தி நிறுத்திவிட்டது. மற்ற மாநில அரசுகளும், இயக்கங்களும் இப்போதுதான் விழித்து கொண்டுள்ளன.

உண்மையில் மோதிக்கு தமிழ் மொழி மீது அக்கறை இருந்தால் இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை கொண்டு வர சொல்லுங்கள். தமிழை மொழியாக ஆக்க வேண்டும் என்று கோருவது ஏதோ வட இந்திய மாநிலத்தில் தமிழை பயன்படுத்த வேண்டும் என்று கோருவது கிடையாது.

சர்வதேச தாய்மொழி தினம்: தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு நீதியா?

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழை பயன்படுத்த வேண்டும் என்பது அதன் அர்த்தம். ஐ.ஐ.டி தேர்வுகள் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் எழுதலாம் என்று உள்ளது. குஜராத்தி ஒரே ஒரு மாநிலத்தின் மொழியாக இருந்தாலும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? மோதியின் தாய்மொழி என்பது மட்டும் தானே? ஏன் தமிழை அதில் சேர்க்கவில்லை?

தமிழுக்கு மட்டும் சொல்லவில்லை. பிற இந்திய மொழிகளுக்காகவும்தான் சொல்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டில் வந்து தமிழில் பேச வேண்டாம், கேரளாவில் போய் மலையாளத்தில் பேச வேண்டாம், ஆந்திராவில் போய் தெலுங்கு மொழியைப் புகழ வேண்டாம்.

பிரதமராக நீங்கள் செய்ய வேண்டியது அனைத்து மொழிகளையும் நீங்கள் சமமாக நடத்துங்கள். தமிழ்பற்றை நிரூபிக்க இதை செய்தால் போதும் இதையெல்லாம் செய்யாமல் தமிழைப் புகழ்வது என்பது தமிழர்களை ஏமாற்றும் வேலை. ஆனால், தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.

ஆனால், மோதி தலைமையிலான ஒன்றிய அரசு ஆதிச்சநல்லூரில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கி உள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. பின் எப்படி தமிழர்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று சொல்ல முடியும்?

தொல்பொருள் தொடர்பாகத் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் பல நூறு. அதில் ஏதோ சிலவற்றைக் கிள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

சர்வதேச தாய்மொழி தினம்:

கீழடியைப் பொறுத்தவரை அந்த ஆய்வு தொடரக் கூடாது என்பதற்க்காக எவ்வளவு வேலையை செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கெல்லாம் கடுமையான எதிர்ப்பு வந்தப் பின் இப்போது ஏதோ கிள்ளிக் கொடுக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் இதனையெல்லாம் மத்திய அரசு செய்ய வேண்டாம் என்றுதான் நான் கூறுகிறேன். கீழடியோ, ஆதிச்சநல்லூரோ அகழாய்வுக்கான அதிகாரத்தை தமிழக அரசிடம் கொடுங்கள்.

அவர்கள் செய்யட்டும். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை மட்டும் நீங்கள் வெளியிடுங்கள். கலாசாரம், வரலாறு, மொழி போன்ற துறைகளில் மாநில அரசின் இறையாண்மையை மதியுங்கள். இதுதான் கோரிக்கை. ஏதோ கிள்ளிக் கொடுப்பதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை.

அதுமட்டுமல்லாமல் சிந்துவெளி நாகரிகத்தைச் சரஸ்வதி நாகரிகம் என்று திரிபு செய்யும் வேலையைத்தான் இவர்கள் பார்க்கிறார்கள். என்றுமே மத்திய அரசு தங்களை அனைத்து இந்தியர்களுக்குமான அரசாக கருதியதே இல்லை. அவர்களுக்கு வேத நாகரிகம், வட இந்தியாவின் வரலாறு, ஆரியம் என்ற கருத்தாக்கத்துடன் இணைது போகும் விஷயங்கள்தான் தங்களுடையது எனக் கருதும் மனப்பான்மை இவர்களிடம் உள்ளது.

கீழடிபடத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT

இவர்கள் எப்போதும் சமஸ்கிருதத்தையும், தமிழையும் சமமாக கருதியது இல்லை. மொழிகளுக்கான நிதி ஒதுக்குவதில் கூட எவ்வளவு பாகுபாடு காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள்.

பிற மொழிகளுக்குக் கிள்ளிக் கொடுக்கிறார்கள். சமஸ்கிருதத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதே அளவு முக்கியத்துவத்தை, நிதியைப் பிற மொழிகளுக்கும் தாருங்கள்.

அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழிக்குதானே அதிக நிதி ஒதுக்க முடியும். 20 ஆயிரத்துக்கும் சொச்சம் பேர் பேசும் மொழியை பரவலாக்க வேண்டியது அரசின் கடமைதானே?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். சமஸ்கிருதம் என்றுமே மக்களின் மொழியாக இருந்ததில்லை. அதுவொரு பதிவேட்டு மொழி. ஒரு சமயத்தின் பதிவுகள் உள்ள மொழி. அந்த மொழி என்றுமே அழியாது.

அது செத்த மொழி என்று கூறுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களின் மொழியாக இருந்தால்தானே அது உயிரோடு இருந்ததா அல்லது செத்ததா என்று கூற முடியும். அது Java, C++, HTML போல ஒரு துறைக்கான மொழி. அந்த மொழியில் புதிதாக ஒரு நாவலோ அல்லது இலக்கியமோ படைக்கப்படப் போவதில்லை.

அதில் செய்தித்தாள் நடத்தப் போவதில்லை. அந்த மொழியைக்காக்க மெனக்கெடுங்கள். அதில் எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை. ஆனால், செவ்வியல் மொழியாகவும், வாழ்வியல் மொழியாகவும் இருக்கக் கூடிய மொழிகளுக்குத்தான் அதிக தேவை உள்ளது.

தமிழுக்கு உள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவுக்கு இருக்கிறது. அதற்குதானே அதிகம் செலவு செய்ய வேண்டும். என் வரிப்பணத்தை வைத்துக் கொண்டு எனக்கு எதிராகவே திரிபுகளைச் செய்தால் நான் கேள்வி கேட்பேன்.

சர்வதேச அளவில் 7000 மொழிகள் உள்ளதாகவும், அதில் சரிபாதி இந்த நூற்றாண்டுக்குள் அழியலாம் என்றும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் பல மொழிகளின் நிலை அப்படிதான் இருப்பதாகவும் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன. மொழிகளை காப்பதற்கான செயற்பாடுகள் எப்படி உள்ளன?

சர்வதேச தாய்மொழி தினம்:

சூழலியலில் உயிரினப் பன்மயம் குறித்த புரிதல் கடந்த இருபது ஆண்டுகளாகத்தானே அனைவருக்கும் வந்துள்ளது. அதுபோல மொழி பன்மயம் குறித்த புரிதலும் இப்போதுதான் வந்துள்ளது. ஒவ்வொரு மொழியுமே ஓர் அறிவு களஞ்சியம். ஒவ்வொரு மொழியிலுமே மக்களின் தொன்மையான அறிவு புதைந்துள்ளது.

ஒரு மொழியை காக்க வேண்டும் என்பது அந்த மொழி பேசுபவர்களின் பொறுப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு அது. எல்லா மொழிகளையும் காக்க வேண்டியது உலக நாகரிகத்தின் பொறுப்பு.

ஒரு மொழியற்றுப் போவது ஓர் உயிரி அற்றுப்போவதை போல, ஓர் இனமே அழிந்து போவது போல. இந்த புரிதல் இப்போது பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் ஒடிசாவில் அங்குள்ள பழங்குடி மக்களின் மொழிக்கு அகராதி உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். சத்தீஸ்கரில் அதன் அரசு அங்குள்ள பழங்குடி மக்களின் மொழியை பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுப்போன் என்று முடிவு எடுத்துள்ளது.

தமிழ்நாட்டிலும் தமிழ் மட்டும் கிடையாது. படுக, தோடர், நரிகுறுவர், இருளர் மொழிகள் என அனைத்தையும் காக்க வேண்டும். தமிழ்நாட்டில் நாம் மொழி உரிமைக்காக போராடியது தமிழுக்காக மட்டுமல்ல மற்ற மொழிகளையும் நாம் காக்க வேண்டும்.

திராவிட மொழி குடும்பத்திலேயே பழமை வாய்ந்த 'தமிழ்' மொழி: ஆய்வு சொல்லும் உண்மை என்ன?

ஓர் உதாரணம் சொல்கிறேன். சந்தாலி மொழி அட்டவணை 8இல் இடம்பெற வேண்டும் என நீண்ட நாட்களாக போராடி வந்தார்கள். சமீபத்தில் அந்த அங்கீகாரத்தை கொடுத்தார்கள். விக்கிபீடியா இந்திய மொழிகளுகளில் கட்டுரையை உருவாக்க வேண்டும் என போட்டி வைத்தார்கள்.

அதில் முதல் இடம் பெற்றது தமிழ், இந்தியைவிட அதிகமான கட்டுரையை பிரசுரித்தது சந்தாலி மொழி. இது எப்படி சாத்தியமானது. அந்த மொழிக்கான அங்கீகாரம் கொடுக்கும் போது அது நடந்தது. இதுதான் நடக்கவேண்டும் என விரும்புகிறோம்.

வடமாநிலங்களில் அதிகமானோரால் இந்தி பேசப்படுகிறது என்கிறது அரசு. இது பகுதி உண்மைதான். போஜ்பூரி, அங்கீகா, கோசாலி, கோண்டி, பகேரி, அவதி, கார்வாலி பல மொழிகள் இங்கு உள்ளன.

இந்த மொழிகளை இந்தியின் உள்ளூர் பேச்சுவழக்கு என்று அங்கீகரிக்காமல் அரசு வைத்திருக்கிறது. இது குறித்து அந்த மொழி பேசும் மக்களிடன் பேசும் போது அவர்கள் கொதிக்கிறார்கள். இந்தியைவிட பழமையானவை எங்கள் மொழி. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியம் தங்கள் மொழியில் இருப்பதாக சான்ரு தருகிறார்கள். அதன்பின்தான் தமிழ் சந்திக்கும் பிரச்சனைகளைவிட இவர்கள் மோசமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என புரிந்துகொண்டேன். அவர்களுக்காகவும் போரட்டங்களை ஒருங்கிணைக்கிறேன்.

மொழிக்காக தமிழர்கள், மராட்டியர்கள், கன்னடர்கள், வங்காளிகள் போராடினார்கள் என்பது பழைய செய்தி. போஜ்பூரி போராடுகிறது, கோசாலி போராடுகிறது என்பதுதான் புதிய செய்தி. தங்கள் மொழிகளின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். போராட தொடங்கிவிட்டார்கள்.

நன்றி- பிபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More