Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்! – சு.வேணுகோபால் நேர்காணல்

நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்! – சு.வேணுகோபால் நேர்காணல்

10 minutes read

Su Venugopal

‘எங்கள் தந்தையரான தி.ஜானகிராமனும் கு.அழகிரிசாமியும் தங்களது தோள்களில் எங்களை ஏற்றி உலகைக் காட்டினார்கள். நாங்கள் அடுத்த தலைமுறை. தந்தையர்களை எங்கள் தோள்களில் ஏற்றி இப்போது நாங்கள் அவர்களுக்குப் புதிய உலகைக் காட்டுகிறோம்!’ இப்படியொரு நம்பிக்கையை சு.வேணுகோபாலின் பேச்சில் மட்டுமல்ல, படைப்புகளிலும் பார்க்க முடியும். பத்திரிகையாளராகத் தொடங்கியது அவரது எழுத்துப் பயணம். தற்போது தனியார்க் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர். போடி, மதுரை, கோவை என வாழ்விடங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், மனதுக்குள் இன்னும் அவர் அம்மாப்பட்டி விவசாயிதான். குடியானவனின் வாழ்க்கைப்பாடுகள், வாழ்வில் கெட்டழிந்து பெறுகிற படிப்பினைகள், உயிர்ப்போடு உலவும் பெண்கள், உறவுச் சங்கிலியின் கண்ணுக்குத் தெரியாத கண்ணிகள் என்று இவர் எழுதுபவையெல்லாம் உண்மைக்கு நெருக்கத்தில் உண்மையாகவே நிற்கின்றன. ஜல்லிக்கட்டில் அவர் மும்முரமாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் உரையாடியதிலிருந்து…

உறவுச் சிக்கல்களை எழுதுவது உங்களுடைய அடையாளமாகவே மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சமூகம், கலாச்சாரம் போன்ற கட்டமைப்புகளை மீறுவதால் நேரும் சிக்கல்களைத்தான் அதிகம் பேசுகிறீர்கள். அப்படிப் பேசும்போது காமமும் தவிர்க்க முடியாததாக ஆகிறது. இந்த விஷயங்கள் மீது உங்கள் அக்கறை குவிந்ததற்கு என்ன காரணம்?

குடும்பங்களில் காமம் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. உலகம் முழுக்கவுமே ஆண்-பெண் என்கிற உடைமையாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. கௌரவம் சார்ந்த பிரச்சினையாகவும் அது பார்க்கப்படுகிறது. தன் தங்கை ஒருவனைக் காதலிக்கிறாள் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை கொண்ட நம் சமூகத்தில் ஒருவன் அவனுடைய மனைவி இன்னொருவனைக் காதலிக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன? இந்த மனநிலை நம் பண்பாட்டு மரபோடு பின்னிப்பிணைந்திருக்கிறது; ஒரு சுமையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அதை மீற முடியாது. அப்படி மீறும்போது எப்படி முரண் உருவாகிறது, அதனால் அவர்களுடைய அகங்காரமும் தன்மானமும் எப்படிக் குறைவுபடுகிறது, இந்தச் சிக்கல்களால் அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் எப்படிச் சிதைந்துபோகிறது என்பதைத்தான் நான் சொல்லவருகிறேன். ஆனால், வெறுமனே காமத்தை மட்டும் பேசுகிறேனா என்பது மட்டும் நீங்கள் கவனிக்க வேண்டியதாக இருக்கும். பெரும் நெருக்கடி, ஒருவிதமான மன அழுத்தங்கள், ஒவ்வாமை, காதலற்றதன்மை போன்ற பின்னணிக்கு உள்ளேதான் அந்தக் காமத்தை நான் இயக்குகிறேன். அந்தக் காமத்துக்குப் பின்னால் வன்முறையும் இருக்கிறது. மனிதனுடைய ஆழ் மனதுக்குள் இருக்கும் வன்மங்களையோ பொறாமைகளையோ நான் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறேன். ஒருவகையில் அது கண்டடைதல்தான். ஒரு கதையின் வழியாக, ஒட்டுமொத்தச் சமூகத்துக்குள் காமம் சார்ந்த விஷயங்களில் என்ன ரகசியம் இருக்கிறது, ஏன் இப்படி இருக்கிறார்கள், எதனால் மோதல் உருவாகிறது என்பதைக் கண்டடைவதாகத்தான் பார்க்கிறேன். மனித மனத்தின் சிக்கலான வேர்களை நெருங்கிவிடும் முயற்சிதான் என்னுடைய கதைகள்.

‘கூந்தப்பனை’ நாவலின் நாயகி ஒருகட்டத்தில், கணவன் பார்த்துக் கட்டிவைத்தவனுக்கு நேர்மையானவளாக மாறிவிடுகிறாள். தான் உடைமாற்றுவதைக் காண நேரும் முன்னாள் கணவனிடம் கடுமையாக நடந்துகொள்கிறாள். ஏன் அவளால் இருவருக்கும் நேர்மையாக இருக்க முடியவில்லை?

டால்ஸ்டாய் எழுதிய ‘அன்னா கரீனினா’ நாவலில் அப்படி ஒரு இடம் இருக்கிறது. ஆழ் மனதில் அவள் கணவனையும் நேசிக்கிறாள், காதலனையும் நேசிக்கிறாள் என்பது டால்ஸ்டாய் கண்டடைந்த இடம். ஆனால், ‘கூந்தப்பனை’யில் அவள் தன் முன்னாள் கணவனைத் தொல்லையாகப் பார்க்கிறாள். ‘அன்னா கரீனினா’வில் இரண்டு ஆண்களும் காமத்தை நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘கூந்தப்பனை’யில் ஒருவனால் அது முடியவில்லை. ஒருவேளை அவன் தன்னுடைய நண்பனுக்கு மனைவியைத் திருமணம் முடித்து வைக்காமல் இருந்திருந்தால், அவர்கள் இருவருக்குமிடையே உடல் பரிமாற்றத்துக்கு அப்பால் நேசம் இருந்துகொண்டே இருந்திருக்கக்கூடும். தன் கணவன் ஆண்மையற்றவன் என்பதைப் புரிந்துகொண்டு அவன் ஒரு நண்பன் என்ற அளவுக்குக்கூட அந்த உறவு நகர்ந்திருக்கக்கூடும். “எனக்கு அந்த இச்சை வேணாம். நாம இப்படியே இருந்துரலாம்” என்றுதான் ஆரம்பத்தில் சொல்கிறாள். ஆனால், மறுமணத்துக்குப் பிறகு, புதியவனுடனான உறவுக்குப் பிறகு அவன் மீது கடுமையான எரிச்சலும் வெறுப்பும் அவளுக்கு உண்டாகிறது; இவன்தான் தனக்கு மறுமணம் செய்து வைத்தான் என்பதெல்லாம் தவிடுபொடியாகிவிடுகிறது. காமத்தின் இந்த இடத்தைச் சொல்வதன் வழியாக, தன் மனைவி நன்றாக வாழட்டும் என்று சொல்லக்கூடிய அவனுடைய மகத்தான எண்ணத்துக்கு யதார்த்தமோ அல்லது மனித மன அமைப்போ ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. அதைத்தான் நான் பேச விரும்புகிறேன். இரண்டாவது கணவன் அவளுக்கு ஒரு இனிமையைத் தரும்போது, அதைத் தர முடியாத ஒருவனை ஒதுக்குவதற்கான எண்ணம் அவளுக்கு உருவாகிறது. முன்னாள் கணவன் தொடர்ந்து இங்கே இருந்தால் தன்னுடைய வாழ்க்கையை அவன் கெடுத்துவிடக்கூடும் என்று நினைக்கிறாள். அவள் வேறொரு பெண்ணாக மாறிவிடுகிறாள். ஒரு பெண் வேறொரு பெண்ணாக மாறுவதை நான் சொல்கிறேன். டால்ஸ்டாய் வேறொரு விஷயத்தைச் சொல்கிறார்.

தி.ஜானகிராமன் உங்களுடைய ஆசான் என்பீர்கள். மொழி, கதைக்களம் என எந்த வகையிலும் உங்களையும் தி.ஜா.வையும் ஒப்பிட்ட இடம் இல்லை. மீறலை எழுதுகிறவர் என்ற வகையில் தி.ஜா.வின் தாக்கம் உங்களிடம் இருப்பதாகச் சொல்லலாமா?

அதுவும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். பெண்களையும் காமம் சார்ந்த பிரச்சினைகளையும் அனுதாபத்துக்குரிய விஷயமாக தி.ஜா. பார்க்கிறார். அதற்கு அப்பால் அது சமூகத்தை உலுக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கிறது என்பதாக நான் பார்க்கிறேன். இரண்டு பேருக்கு இடையேயான பிரச்சினையால் ஒரு கிராமத்துக்குள், ஒரு இனக் குழுவுக்குள் உலுக்கல் நிகழ்கிறது. அந்த இடத்துக்கு நான் செல்வதாகப் பார்க்கிறேன். ஜானகிராமன் அப்படியான ஒரு நிலைப்பாடு எடுத்ததற்கு அவருடைய காலகட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உங்கள் படைப்புகள் அனுபவம் சார்ந்தவை என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய அல்லது நீங்கள் கேள்விப்படும் அனுபவங்கள் உங்கள் படைப்புகளில் எப்படி வேலைசெய்கின்றன?

மூன்று, நான்கு வித்தைகள் அதில் இருக்கின்றன. நீங்கள் ஏதோ ஒரு சின்ன சொல்லைச் சொல்கிறீர்கள். அதை ஒரு விதைபோல வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட பின்னணியில் கதையைக் கட்டமைக்கிறேன். இது நூற்றுக்கு நூறு சதவீதம் வேணுகோபால் பார்த்து, வீடியோவில் இருப்பதுபோல் அப்படியே எழுதியது என்று நீங்கள் நம்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அல்லது உங்களை ஏமாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் யதார்த்தத்தை அப்படியே எழுதுகிறேன் என்று சொல்வார்கள். ஆனால், அப்படியல்ல. அது முழுக்க முழுக்கப் புனையப்பட்டது. இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்கி அந்த இடத்தில் கதாபாத்திரங்கள் எப்படி எதிர்வினையாற்றும் என்பதாகப் புனைகிறேன். அந்தக் கதைகளில் வரும் பின்னணிகளை என்னுடைய அனுபவங்களிலிருந்து எடுத்துக்கொள்கிறேன்.

‘வெண்ணிலை’ கதையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அந்தக் கதையில் வரும் அத்தனையும் வரிக்கு வரி அப்படியே நடந்திருப்பதாக எடுத்துக்கொள்வோம். இந்த யதார்த்த அனுபவம் எப்போது கலையாக மாறுவதாக நினைக்கிறீர்கள்?

காண்பவர்களையெல்லாம் காமப்பார்வையோடு பார்க்கும் பருவப் பையன்கள். ஜெராக்ஸ் கடையில் ஓரிரு முறை சந்தித்திருக்கும் பெண் இவர்களைப் பார்க்கிறாள். அவள் காமத்தோடு பார்ப்பதாகவும், அவளைக் கூப்பிட்டால் வந்துவிடுவாள் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், அங்கே வேறொரு உண்மை இருக்கிறது. அவள் அப்பா இறந்துபோயிருக்கிறார். வீட்டுக்கு அழைத்துச்செல்ல யாரேனும் உதவிக்கு வருவார்களா என்பதாகத்தான் அவர்களைப் பார்க்கிறாள். இந்த விஷயத்தை அந்தப் பையன்கள் தெரிந்துகொண்டபோது அவர்களை அந்தத் தருணம் சுழட்டிக் கல்லில் அடித்ததுபோல செய்துவிடுகிறது. இந்த இடம் இருக்கிறதில்லையா? இதைத்தான் முக்கியமானதாக நினைக்கிறேன்.

சின்ன சின்ன விவரங்களும் நுணுக்கமாக உங்களுடைய விவரணைகளில் வெளிப்படுகின்றன. உங்களுடைய உற்று கவனிக்கும் பண்பானது புறச்சித்தரிப்புகளில் எப்படி உதவியிருக்கிறது?

ஒரு குருவி தண்ணீரை எடுத்து இன்னொரு குருவி மீது லேசாக ஊற்றிக்கொண்டிருக்கும். ஊர்க்குருவி கண்ணாடியில்போய் கொத்திக்கொண்டே இருக்கும். சில்வர் தட்டில் தெரியும் தன்னுடைய நிழலைப் பார்த்துக்கொண்டிருக்கும். அதைக் கவனிப்பேன். இந்த நுட்பங்களையெல்லாம் சேர்த்து எழுத வேண்டுமென நினைப்பேன். ஒரு வேலிக்கு அந்தப் பக்கம் அருகம்புல் நன்றாகத் தளிர்த்திருக்கிறது. ஒரு ஆடு வந்து நாக்கை நீட்டி வளைத்து அந்தப் புல்லை வெடுக்கென பிடுங்கித் தின்றதைப் பார்க்கிறேன். நாய்க்குட்டிகள் எப்படி படுத்திருக்கின்றன என்பதைக் கவனிப்பேன். நாட்டு நாய் ஒருவிதமாகப் படுக்கும், பொம்மேரியன் நாய் ஒருவிதமாகப் படுக்கும், ராஜபாளையத்து நாய் ஒருவிதமாகப் படுக்கும். ராஜபாளையத்து நாய் ஒருபோதும் வீட்டுக்குள் இறக்காது. இந்த நுட்பங்களையெல்லாம் சேர்த்து எழுத வேண்டுமென நினைப்பேன். காய்ச்சல் காலத்தில் மாட்டினுடைய நாக்கைத் தொட்டுப் பார்த்தீர்கள் என்றால் நொசநொசவென்று இருக்கும்; உங்கள் கையோடு பிய்ந்து வந்துவிடுவதாகத் தோன்றும். ஒரு மாட்டைப் பற்றி எழுதுகிறேன் என்றால் வெறுமனே மாடு வந்தது, அதற்கு ஜொல்லு வடிந்தது என்று எழுத மாட்டேன். கதைக்குள் நான் பார்த்த விஷயங்களையெல்லாம் சேர்த்தே சொல்லிவிடுகிறேன். கிராமம் சார்ந்த வாழ்க்கை இருக்கிறவர்களுக்கே இந்தப் பார்வை வந்துவிடுமோ என்று தோன்றுகிறது. நகரம் சார்ந்தவர்களுக்குப் புறவுலகினுடைய கவனிப்பு குறைவாக இருக்கிறது. ஒரு கள்ளிப்பால் எப்படி ஒழுகுகிறது என்பது கிராமத்தவனுக்குத் தெரியும். கள்ளிச்செடியில் இருக்கும் பூவைக் கரகரவெனச் சுத்தி, அதன் தண்டை ஒடித்துவிட்டுக் கொட்டினால் பத்துச் சொட்டு தேன் கொட்டும். பள்ளிக்குச் செல்லும் பையனைப் பற்றி ஒரு கதையில் பேசுகிறேன் என்றால் அவன் பூவை ஒடித்து, உருட்டி, உள்ளங்கையில் தேனைத் தட்டி அதை நக்கிவிட்டுப்போவான் என்று எழுதுவேன். இது அவனுடைய வாழ்க்கை. கிராமத்தாருடைய வாழ்க்கை புறத்தோடும் ஒரு அங்கமாக இருப்பதால் அதையும் சேர்த்து எழுத ஆசைப்படுகிறேன்.

‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ கதையில் தன்னுடைய புருஷனைக் கொல்வதற்காகக் காத்திருக்கும் வேறொரு சாதியைச் சேர்ந்தவனுடைய வீட்டுக்குச் சென்று, கலவரமான சூழ்நிலையில் தொட்டிலைக் கொடுத்துவிட்டு, பிள்ளைக்குப் பாலூட்டிவிட்டும் வருகிறாள் சுப்பம்மாள். எப்படி அவளால் முடிந்தது?

நான் எழுதவந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் பெரும் கலவரங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. கொலைக்குக் கொலை, வன்புணர்வுக்கு வன்புணர்வு என்று இரண்டு சமூகங்கள் தொடர்ந்து மோதிக்கொண்டே இருந்தன. இப்படியான சூழ்நிலையிலும்கூட இரண்டு முரண்பட்டச் சமூகங்களுக்கு இடையே மேம்பட்ட நல்லுறவும் இருக்கிறது. அதனால்தான், துணிந்துவந்து பால் கொடுத்துவிட்டுப்போகிறாள். மேற்பரப்பில் இவ்வளவு வன்முறைகள் நடந்துகொண்டிருந்தாலும் கீழ்ப்பரப்பில் அன்பு, காதல் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்தச் சிக்கலைக் கதையாக்க நினைத்தேன்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த வீட்டுக் குழந்தைகளுக்கு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ‘தொட்டில் கட்டிப் பாலூட்டுவதான’ இந்தச் சடங்கு முறை வழக்கத்தில் இருந்ததா என்ன?

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பான தொன்மம் இது. இஸ்லாமியருக்கும் இந்து அரசருக்கும் இடையே இந்தச் சடங்கு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தத் தொன்மத்தைக் கதைக்கு ஏற்றவாறு நான் வளைத்துக்கொண்டேன்.

அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் பதிவாகும் இலக்கியங்களை ஆவணமாகவும் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு எனும்போது இதுபோன்ற தொன்மங்கள், சடங்குகள், பழக்கவழக்கங்களை எந்த அளவுக்கு நாம் கதைகளுக்காக வளைத்துக்கொள்ள முடியும்?

வரலாற்றுத் தகவலாக இருக்கும்பட்சத்தில் நாம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கலவரத்தில் இப்படியாக அன்பு மலர்ந்து என்ற விஷயம் வரலாறாக இல்லாமல் சொல்வழிக் கதைகளாகத்தான் இருந்தன. அதற்கு ஒரு புனைவுத்தன்மை வந்துவிடுகிறது. அதைத்தான் நான் வேறொரு புனைவாக மாற்றிக்கொண்டேன்.

‘தொப்புள்கொடி’ கதையில் வரும் புத்தி சுவாதீனமற்ற கார்த்திகா… அவளுடைய குழந்தைக்கு எது நல்லது கெட்டது என்று அவளுக்குத் தெரிவதில்லை. அவளுடன் அந்தக் குழந்தை இல்லாமல் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கும். அதை மறுத்துவிடுகிறாள். தன்னுடன் குழந்தை இருக்க வேண்டும் என்கிற தாய்மையின் ஆதார குணம்தான் அவளிடம் இருக்கிறது. இது பற்றி?

இந்தக் கதைக்குப் பெரிய ரகசியம் ஒன்று இருக்கிறது. மே மாத நீண்ட விடுமுறையொன்று வந்தது. 22 நாட்கள். ஒரு நாளைக்கு ஒரு கதை என்று எழுதினேன். ஒவ்வொரு நாளும் பதிப்பாளர் வசந்தகுமாருக்கு அனுப்பிவைத்துக்கொண்டிருந்தேன். “இந்தக் கதை பரவாயில்லை வேணுகோபால்” என்பார். பரவாயில்லை என்கிறாரே என்று இன்னொரு கதை அனுப்புவேன். “அந்தக் கதையைவிட கொஞ்சம் பரவாயில்லை” என்பார். இன்னொரு கதை இன்னொரு கதை என வேக வேகமாக எழுதினேன். ஒருநாள், “உன்னுடைய கிராமத்துக்கே உரிய அந்த ஃபோர்ஸ் இன்னும் வரவில்லையே” என்றார். அப்போது இரண்டு நாள் விடுமுறைதான் மிச்சம் இருந்தது. “ஒரு கதை எழுதலாம். ஆனால், நான் எழுத நினைக்கும் கதையை ஏற்கெனவே கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார்” என்றேன். வசந்தகுமார், “கி.ராஜநாராயணன் கி.ராஜநாராயணன் கதையை எழுதட்டும். வேணுகோபால் வேணுகோபால் கதையை எழுது” என்றார். அப்போது எழுதியதுதான் ‘தொப்புள்கொடி’. என்னதான் புத்தி சுவாதீனமற்று இருந்தாலும், விலங்காக இருந்தாலும் தன்னுடைய உடலிருந்து உருவாகிவந்த உயிரை ஒருபோதும் எந்த உயிரினமும் விலக்குவதே கிடையாது. அறிவுரீதியான விஷயத்திலிருந்து நீங்கள் விலகியிருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டுவிட முடியாது. தாய்மை என்பது – கொஞ்சம் கூடுதலான வார்த்தையாக இருந்தாலும்கூட அது இயற்கையின் ரகசியம்தான். ஒரு கங்காருவோ, ஒரு சிங்கமோ குட்டிபோடுகிறது என்றால் அது அந்தக் குட்டியிடமிருந்து விலகிப்போகவே போகாது. அந்த உறவானது எல்லா உயிர்களுக்கும் இருக்குமென நம்புகிறேன். அது ஒரு கிறுக்கிக்கும் இருக்கும். உணர்வுபூர்வமான அந்த ஆதி உணர்வை நான் சொல்ல நினைக்கிறேன். தாய்க்கும் பிள்ளைக்குமான இந்த மகத்தான உறவு ஒரு மகத்தான அற்புதம்.

உங்கள் கதைகளில் வரும் பெண்கள் மிகவும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய விதவிதமான வாழ்க்கை முறை, துயரங்கள், உளச்சிக்கல்களை விரிவாகப் பேசியிருக்கிறீர்கள். பெண்கள் எப்படி இவ்வளவு நுணுக்கமாக உங்களிடம் வெளிப்படுகிறார்கள்?

என்னைத் தூக்கி வளர்த்தது ஒன்றுவிட்ட அக்கா ராஜாத்தி. என்னை உட்கார வைத்து எனக்குப் பேன் பார்த்துக்கொண்டே கதை சொல்வாள். பிற்காலத்தில், ஒரு கிராமச் சண்டையின்போது என்னுடைய 23-25 வயது வரை ஊர் உலகத்துக்குத் தெரியாமல் என்னை மறைத்து வைத்துப் பாதுகாத்தாள். அப்படியெல்லாம் அவள் என்னைப் பார்த்திருக்கவில்லை என்றால் நான் இப்படி ஒரு எழுத்தாளனாக ஆகியிருக்க முடியாது. இது ஒரு விஷயம். பள்ளி முடிந்து வந்தவுடன் களை வெட்டும் பெண்களுடன் சேர்ந்துகொள்வேன். தண்ணீர் பாய்ந்து ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு, களை வெட்ட வெட்ட ஆசையாக இருக்கும். களை வெட்டும்போது பெரியம்மாக்கள், அக்காக்கள், அத்தைகள் அவர்களுக்குள்ளாகக் கதை பேசிக்கொள்வார்கள். இவர்களோடெல்லாம் இருந்ததால் என்னை அறியாமலேயே அந்தப் பெண்களை உற்று கவனித்திருந்திருக்கலாம். எழுதும்போது அது தன்னியல்பாகவே வந்துவிடுகிறது. ஆனால், முதல் நாவலான ‘நுண்வெளி கிரகணங்கள்’ எழுதும்போது அந்தச் சிறு வயதில், ‘ஒரு பெண்ணே பெண்ணைப் பற்றி எழுத முடியாத அளவுக்குப் பெண்ணைப் பற்றி நான் எழுத வேண்டும்’ என்று நினைத்தேன். தோட்டத்தில் வேலை பார்த்த அத்தனை அக்காமார்களும் அண்ணிமார்களும் பாட்டிமார்களும் என்னுடைய ஆளுமையை உருவாக்கியிருக்கிறார்கள் எனலாம்.

பெண்களுக்கு ஆதரவான குரல்தான் உங்களுடையது. ஆனால், ‘நிலம் எனும் நல்லாள்’ நாவலில் வரும் பெண் உங்கள் வழக்கமான நிலைப்பாட்டுக்கு நேரெதிராக நடந்துகொள்கிறாளே?

எல்லாப் பெண்களும் அன்பானவர்களாக, எல்லாப் பெண்களும் கனிவானவர்களாகவெல்லாம் இருப்பதில்லை. ஒரு படைப்பாளியாக அப்படி மட்டும் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன். மூர்க்கமாவும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மூர்க்கமான பெண்களை வேணுகோபால் குறைவாக எழுதியிருக்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

நிலத்துக்கும் வெவ்வேறு தலைமுறைகளுக்கும் இடையேயான பந்தத்தை எழுதியிருக்கிறீர்கள். இன்று அது எப்படி இருக்கிறது?

நிலவுடைமையாளர்களைத் தொடர்ந்து வரக்கூடிய அடுத்தடுத்த தலைமுறைகள் உழைப்பாளிகளாக இல்லை. நிலம் இருக்கிறது, ஆனால் நிலத்துடனான அவர்களுடைய உறவு மெல்ல மெல்லப் பின்னாடிப்போகிறது. இன்ஜினியராக, மருத்துவராக, அதிகாரியாக இந்தத் தலைமுறை மாறிப்போகும்போது அவன் நிலத்திலிருந்தும் விடுபட்டுவிடுகிறான். ஆக, நிலத்தில் கூலி வேலை செய்துகொண்டிருக்கிறான் இல்லையா? அவன்தான் அந்த நிலத்துடன் உறவுள்ள மனிதனாக மாறுகிறான். இந்த உழைப்பாளி நிலம் வாங்கும்போது பழைய நிலவுடைமையாளன் பொறாமைப்படவும் செய்கிறான். ஆனால், நிலத்துடன் யார் நேசம் கொண்டிருக்கிறானோ அவனிடம்தான் நிலம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மண்ணோடு யார் பிணைந்திருக்கிறானோ அவனைத்தான் நான் விவசாயி என்கிறேன். ஆனால், நிலவுடைமையாளரிடமிருந்து நிலத்தை வாங்கி ஏழைகளிடம் கொடுத்தோம் என்றால் அவர்களால் அதில் விவசாயம் செய்து எழுந்திரிக்க முடியாது என்ற வேதனையையும் கூடவே நான் சொல்லிவிடுகிறேன். அவர்களால் நிலத்தில் பாடுபட்டு மேலெழ முடியாத நிதர்சனமும் இருக்கிறது; அவர்கள் தோற்றுப்போக வேண்டியிருக்கும்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக நீங்கள் என்ன யோசனையைச் சொல்வீர்கள்?

ஐந்து ஏக்கரில் நான் வேலைபார்க்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வெள்ளாமை எடுத்து முடிப்பதற்கு நான்கரை மாதம் ஆகும். ரூ.60 ஆயிரம் நான் செலவழித்திருந்தால் எனக்குக் கிடைக்கக்கூடிய தொகை ரூ.55 ஆயிரம்தான். ரூ.5 ஆயிரம் நஷ்டம் ஒருபுறம் இருக்கட்டும்; நான்கரை மாதங்களும் ராத்திரி பகலாகத் தண்ணீர் ஊற்றியிருக்கிறேனே அந்த உழைப்புக்குக் கூலி எங்கே? ஒரு காவலாளியாக நான் வேலை பார்த்திருந்தால் மாதம் ரூ.10 ஆயிரம் கிடைத்திருக்கும் இல்லையா? விவசாயியின் முதலீடும் உழைப்பும் கடைசியில் இப்படி ஆவதுதான் விவசாயி தோற்றுப்போவதற்கான காரணம். வெங்காயம் அதிக விலையில் விற்றபோது ஒரு விவசாயியாக நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால், ஆறேழு ஆண்டுகள் பட்ட நஷ்டத்தை அந்த வெங்காயம் ஏதோ ஒருவகையில் தூக்கிவிட்டிருக்கிறது. இது எப்போதாவது நடக்கும் விஷயம். பொதுவாக, உற்பத்திக்குரிய விலை இல்லை. நீங்கள் தக்காளி போடுகிறீர்கள் என்றால் அது ரூ.15-க்கு விற்றால்தான் கட்டுபடியாகும். அதை ரூ.5-க்குக் கேட்கும்போது அந்த விவசாயி அதைப் பறிக்காமலே விட்டுவிடுவான். தோட்டம் பூராவும் தக்காளியாக நசிந்துபோய்க் கிடக்கும். விவசாயம் பார்ப்பதற்கான செலவு அதிகரித்திருக்கிறது. ஆனால், அதிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானமானது செலவு அதிகரித்திருப்பதற்கு நிகராக உயரவில்லை. என்ன நடந்திருக்க வேண்டும் என்றால் உற்பத்திக்கான விலை உயர்ந்திருக்க வேண்டும்.

‘நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்’ என்று சொல்கிற நபர் நீங்கள். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?

ஆமாம், நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம். மஞ்சள் விளைவிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது ஒன்பது மாத வெள்ளாமை. 21-வது நாளில் அது முளைவிடும். மெல்ல மெல்லக் களை வெட்டி, உரம் போட்டு அந்தப் பயிரை உருவாக்கிக்கொண்டே வருகிறீர்கள். அது நன்றாக விளைந்து முழு ஆற்றலோடு நிற்கும்போது உங்களால் வீட்டுக்கு வர முடியாது. பருவப் பெண்ணான பதினெட்டு வயது பேரழகியைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கும்! நல்ல விளைச்சலைக் காணும் மகிழ்ச்சி இருக்கிறதல்லவா? என்னைப் பொறுத்தவரையில், அந்த மகிழ்ச்சிக்கு ஈடான ஒன்றை ஒரு நாவலோ ஒரு சிறுகதையோ தராது. ஜெகஜெகவென ஜொலிக்கும் விளைச்சலை இரவு நேரத்தில் கட்டி அணைத்துக்கொள்வேன். அதன் கால்களுக்கெல்லாம் முத்தம் தருவேன். ஒரு கதைக்கு முத்தம் கொடுக்க முடியுமா?

நன்றி – தி இந்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More