கல்வியிலும் கொரோனா இடர்காலப் பணியிலும் கலக்கும் லோகநாதன் ஆசிரியர்

மா. லோகநாதன், தமிழகப் பள்ளி ஆசிரியர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர், குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணமானவர். கல்விப் பணியில் மாத்திரமின்றி, கொரோனா இடர்காலப் பணியிலும் மிகவும் உற்சாகமாக இயங்கும் இவரைப் போன்றவர்கள், பாராட்டுக்குரியவர்கள். தமிழ் இலக்கியம் மற்றும் கல்வியியலில் இளநிலை பட்டத்தையும் தமிழில் முதுகலைப் பட்டத்தையும் பெற்ற இவர், மிகச் சிறந்தவொரு ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவரது சாதனைகளை பாராட்டும் வணக்கம் லண்டன் இணையம், அவருடனான இந்த நேர்காணலை பிரசுரிப்பதில் பெருமையடைகிறது. -ஆசிரியர். 

கல்விக்கு தடையேதும் இல்லை என்பதற்கு உங்கள் வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு? உங்களை பற்றி அறிமுகப்படுத்துங்கள்?

எனது பெயர் மா.லோகநாதன் த/பெ அ.மாணிக்கம், தாயார் பெயர்: மா.சரஸ்வதி.என் உடன் பிறந்தவர்கள் 2 அண்ணன்கள்,1 அக்கா,நான் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில்,மாநகராட்சி நடுநிலைப் பள்ளி,காவேரி வீதி பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றி வருகிறேன். நான் 04.04.1984 இல் பிறந்தேன்,நான் பிறந்து மூன்று மாதங்களிலேயே என்னுடைய இரண்டு கால்களும்,இரண்டு கைகளும் போலியோவால் பாதிக்கப் பட்டு என்னால் நடக்க இயலாமல் போனது .3 வயதிலேயே என் உடல் நிலையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக என் பெற்றோர்கள் ஈரோடு C.S.I மாற்றுத்திறனாளிகள் விடுதியில் சேர்த்து எனக்கு தினமும் உடற்பயிற்சி உடன் கல்வி கற்கும் வகைகளில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.என் பெற்றோரின் கடின முயற்சியால் எனது ஒரு கால்,இரு கைகள் சரிவர செயல்பட ஆரம்பித்தது.எனக்கு விடுதியில் ஊன்றுகோல் பயன் படுத்தி நடக்க கற்றுக் கொடுத்ததுடன்,சிறந்த கல்வியும் விலை இல்லாமல் கிடைத்தது.எனது லட்சியமாக நான் வர நினைத்த பணி ஆசிரியர் பணி.கல்வி கற்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை நான் ஆணித்தரமாக கூறுவேன். மா.லோகநாதன் D.T.ED.,B.LIT(Tamil),MA(Tamil).,B. ED.,BA(History) இடைநிலை ஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி,காவேரி வீதி, ஈரோடு-638003.

நான் உடல் ஊனமுற்றவர் என்று ஒரு நாளும் என்னைப் பற்றி நானே இழிவாக நினைக்க மாட்டேன்.என்னால் எதும் செய்ய முடியும் தன்னம்பிக்கை எனக்கு அதிகம் உள்ளது.நான் ஆசிரியர் ஆகவேண்டும் என்று லட்சியம் வைக்க காரணம்.நான் படித்த விடுதியில் அந்த சமயங்களில் எங்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க அதிகம் ஆசிரியர்கள் இல்லை அதனால்,எனக்கு தெரிந்த பாடங்களை அப்போதே என்னுடன் படித்த வர்களுக்கும் கற்றுக் கொடுத்தேன்

ஆசிரியராக மிகுந்த நிறைவோடு பணி செய்கிறீர்கள்? அதை பற்றி?

நான் (01.03.2008) இல் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளி,பட்டுதுறை ஒன்றியம்,மூலனூர், ஈரோடு மாவட்டம். அங்கு தான் முதன் முதலில் ஆசிரியர் பணிப் பொருப் பேற்றேன்.என் வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் 2 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தகவலை அறிந்ததும் உடனே உயர் அதிகாரிகள் அவர்களிடம் கேட்டேன் சார் எனக்கு பக்கத்தில் எதாவது பள்ளியில் வேலை போட்டுக் கொடுங்கள் என்று கேட்டேன் ஆனால் அதிகாரிகள் வேலை வேண்டும் என்றால் நாங்கள் உங்களுக்கு போட்ட பள்ளிக்கு போய் வேலை செய்யுங்கள் இல்லை என்றால் வேலை வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டுப் போங்கள் என்றார். உடனே நான் இல்லை சார் நான் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ண த்துடன் படித்தேன், நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நீங்கள் வேலை போட்ட இடத்துக்கே நான் போறேன் என்று கூறி விட்டேன். நான் ஆசிரியராக சென்ற பள்ளி பகுதி கிராமம்.எனக்கு மிகவும் அந்த பள்ளி பிடித்து இருந்தது.நான் அந்த ஊரிலே ₹ 150 வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மிகவும் சிரமப் பட்டேன்.இருப்பினும் என் விருப்ப பணி என்பது மட்டும் என் மனதிற்குள் ஒலிக்கும் போது நான் படும் சிரமம் பெரிதாக தெரியவில்லை எனக்கு,நாங்கள் 3 ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றிநோம்.தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியை அவர்கள் இருவரும் 6 to 8 ஆம் வகுப்பு,நான் 1 முதல் 5 ஆம் வகுப்புகளை கவனித்துக் கொண்டோம்.என்னிடம் கல்வி பயின்ற குழந்தைகள் அனைவருக்கும் தனித்தனி கோப்புகள் வைத்து பராமரிப்பு செய்து வந்தேன்.

கல்வி உடன் வில்லுப் பாட்டு,பொம்மலாட்டம்,முகமூடி,தனி நடிப்பு என குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து குழந்தைகளின் திறமைகளை வளர்த்தேன்.ஒருநாள் திடீர் என மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் எங்கள் பள்ளியை பார்வையிட வந்தவர் எனது வகுப்பறை பார்வை இட்டு மிகவும் அருமையாக கல்வி பணி ஆற்றி வருகிரீர் வாழ்த்துக்கள் என்று கூறி.உங்கள் வீடு எங்க உள்ளது என்று கேட்டார் நானும் ஐயா என் வீடு ஈரோடு ல உள்ளது என நடந்த விபரங்களை கூறினேன்.Deo ஐயா அவர்கள் உடனே தலைமை ஆசிரியர் அவர்களை சந்தித்து என்னைப் பற்றி விபரங்கள் கேட்டுள்ளார்.அவரும் கூறியுள்ளார்.சிறிது நாட்களை எனக்கு மாறுதல் ஆணை தயார் நிலையில் உள்ளது என deo ஐயா அவர்கள் கூற,எனக்கு குழந்தைகளை விட்டு போக மனமில்லை, ஊர் மக்களும் என்னை அனுப்ப தயாராக இல்லை,நான் வாடகைக்கு வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் சார் நீங்க இங்கேயே இருந்து எங்க குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள் இந்த வீட்டை உங்களுக்கு சொந்தமா நான் எழுதி வைக்கிறேன் என்றார்.

நான் deo ஐயா அவர்களை சந்திக்க சென்ற போது தான் ஐயா அவர்கள் சொன்னார்கள் கண்ணு உன்னுடைய நலனுக்காக தான் உன் சொந்த ஊரிலேயே உன் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் பள்ளியில் ஆணை போட்டு இருக்கேன் என்று கூறியவர்.17.06.2008 அன்று அவரது ஜீப்பில் என்னை அழைத்து வந்து நான் தற்போது பணி புரிந்து வரும் காவேரி வீதி,மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அவர்களிடம் இவர் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர் நல்ல படியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி கண்ணு உனக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் என்னை வந்து பார் என்று சொல்லி விட்டு என் புதிய பள்ளியில் விட்டுச் சென்றார் அவர் என் மீது அன்று வைத்த நம்பிக்கையை இன்று வரை காப்பாற்றி வருகிறேன்.17.06.2008 இந்த பள்ளியில் எனது கல்வி சேவையை மீண்டும் சிறப்பாக தொடர்ந்தேன்.

இங்கும் குழந்தைகளுக்கு வில்லுப்பாட்டு,பொம்மலாட்டம்,முகமூடி,வகுப்பறை நூலகம், சேவை உண்டியல் திட்டம்,பிறந்தநாள் திட்டம்,முதலுதவி, தொடுதிரை பயன் படுத்தி கற்பித்தல்,குழந்தைகளுக்கு தினமும் வீட்டுப் பாடங்கள் அனைத்தும் Whatsapp மூலம் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கும் புதிய முறை பயன்படுத்துதல், பெற்றோர் இல்லாத குழந்தைகள் அனைவரின் நலனுக்காகவும் பெற்றோரா வழிகாட்டும் அறக்கட்டளை (PG Trust) 15.07.2015 தோற்று வித்தேன். தமிழக அரசு 2018 இல் எனக்கு கனவு ஆசிரியர் விருது மற்றும் ₹10.000 வழங்கினார்கள்.எனக்கு தமிழக அரசு வழங்கிய விருது தொகை ₹10.000 ஐ பெற்றோர் இல்லாத குழந்தைகள் நலனுக்காக வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஈரோடு ரோட்டரி அரிமா சங்கம் மூலம் மாணவர்கள் அனைவரும் தேர்வு செய்த சிறந்த ஆசிரியர் விருது எனக்கு வழங்கப் பட்டது.குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான கல்வி பணி வழங்க வேண்டும் மற்றும் மக்கள் அனைவருக்கும் என்னால் இயன்ற சேவைகள் செய்ய வேண்டும்.

நான் என் மனசாட்சிக்கு உண்மையாய் பணியாற்ற வேண்டும் என்று மட்டுமே இன்றுவரை பணியாற்றி வருகிறேன்.என்னிடம் கல்வி பயிலும் குழந்தைகள் அனைவரும் அவரவருக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என்ற உணர்வுடன் வளர்த்து வருகிறேன்.

வகுப்பறையில் உங்களை பாதித்த ஒரு நிகழ்வு எது?

எனது 13 ஆண்டு பணிக்காலத்தில் என் மனதை இன்றுவரை பாதித்து இருக்கும் நிகழ்வு அது.

கல்வி ஆண்டு 2019- 2020 என் வகுப்பில் கல்வி பயின்ற குழந்தை M. தேஜா ஸ்ரீ 29.10.2019 அன்று மருத்துவ மனையில் மரணம் அடைந்த நிகழ்வு என்னால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை, விபரம்: என் வகுப்பு குழந்தை தேஜா ஸ்ரீ தீபாவளி பண்டிகைக்கு முன்பு சனிக்கிழமை பள்ளி விடுமுறை நாளில் தன் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் தன் தம்பியை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்.தன் தம்பி தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது இவர் தீ குச்சி உரசி விளையாடிக் கொண்டிருககையில் அருகில் யாரும் இல்லை விளையாட்டு வினையானது தீக்குச்சி பொறி உடையில் பட்டு தீ மல மல வென பற்றியது. உடனே அருகில் இருந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதித்தனர்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் போனது,மருத்துவர்கள் சேலம் கொண்டு செல்லுங்கள் என்று கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர் தகவல் எனக்கு தெரிந்த மறு நிமிடமே சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் அலைபேசி எண் பெற்று குழந்தை தேஜா ஸ்ரீ முழு விபரங்களையும் கூறி ஐயா நீங்கள் என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்றேன்.தினமும் என் குழந்தைஇடம் நான் அலைபேசியில் பேசி ஆறுதல் படுத்தி வந்த நிலையில் 2 அறுவை சிகிச்சை வெற்றி பெற்று 3 ஆம் அறுவை சிகிச்சை நடை பெற்றபோது என் குழந்தை தேஜா ஸ்ரீ உயிர் பிரிந்தது.29.10.2020 அன்று என் குழந்தை இயற்கை எய்தினார்.நான் அன்று ஒருநாள் என் குழந்தையின் முகத்தை பார்ப்பதற்காகவே விடுப்பு எடுத்து 18 கிலோ மீட்டர் கடந்து எனது வாகனத்தில் சென்று மயானத்தில் என் குழந்தையின் முகத்தை பார்த்து கனத்த இதயத்துடன் அழுது வந்தேன்.எத்தனை நாள் ஆனாலும் என் குழந்தையின் இறப்பு என் இதயத்தில் ஏற்பட்ட வலி.என் மனதை மிகவும் பாதித்த நிகழ்வு என் வகுப்பு குழந்தை தேஜா ஸ்ரீ இறப்பு.

இப்போது கொரோனா காலத்தில் எப்படியான தொண்டுகளை செய்கிறீர்கள்?

கொரோனா வைரஸ் தொற்று பெருமளவில் பரவி வருவதால் முதலில் லாக் டவுன் செய்யபட்டப் பகுதி ஈரோடு மாவட்டம். ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் ஆசிரியராக நான் என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைத்து முதலில் நான் தன்னார்வலராக எனது பெயரை ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் வழங்கினேன்.பிறகு எனக்கு வழங்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு பணி.எனக்கு வழங்கப்பட்ட இடம் : கமலா நகர் மெயின் ரோடு நான் மேற்கொள்ளும் பணிகள்: 09.04.2020 முதல் 28 நாட்களுக்கு தொடர்ந்து எனக்கு வழங்கப்பட்ட பகுதி மக்களுக்கு சளி,இருமல்,தொடர் சளி,மூச்சடைப்பு,தொண்டை வலி,BP பிரச்சினை,sugur பிரச்சினை,0 to +5 குழந்தைகள்,கர்ப்பிணிப் பெண்கள் விபரம் என அனைத்தையும் சேகரிதுள்ளேன்.

தினசரி எனக்கு வழங்கப்பட்ட பகுதி மக்களை சென்று பார்த்து அவர்களின் உடல் நலன் கண்காணித்து மக்களுக்கு குறைகள் இருந்தால் உடனே மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கு தகவல் கொடுத்து வீடுகளுக்கு நேரடியாக சென்று உரிய சிகிச்ைமருத்துவர்கள் வழங்குவார்கள்.தன்னார்வ லர் சேவை பணிக்கு என நான் யாரிடமும் இதுவரை எந்த தொகையும் பெறவில்லை,என் வீடு இருக்கும் பகுதிக்கும் நான் சேவை பணியாற்றும் பகுதிக்கு இடைப்பட்ட தூரம் 26 கிலோ மீட்டர்,என் வாகனத்தில் தினமும் எனது சொந்த பணத்தை பயன் படுத்தியே செல்கிறேன் மேலும் என் சகோதரர்கள் மூலம் இதுவரை ₹12000 மதிப்பில் 30 வீடுகளுக்கு மாற்றுத் திறன் உடையவர் மற்றும் முதியோர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை அவர்கள் இல்லங்களிக்கே நேரடியாக சென்று வழங்கினேன்.அனைவருக்கும் என்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.என்னால் முடிந்த உதவிகளை இன்று வரை மகிழ்வாக செய்து வருகிறேன். இன்னொரு பிறவி நான் பிறக்கப் போகிறேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது ஆனால் மனிதனாக பிறந்த இப்பிறவியில் என்னால் இயன்ற உதவிகளை அனைவருக்கும் செய்து விட்டு போகனும் என்று நினைக்கிறேன்.

ஈழம் பற்றிய உங்கள் மனப்பதிவு என்ன?  

ஈழம் – மனிதம் காப்போம் என்ற உணர்வு ஒன்று மட்டும் அனைத்து மனிதர்களிடம் இருந்தால் போதும் அனைத்து மக்கள் வாழ்வும் வளம் பெறும்.

நேர்காணல் – பார்த்தீபன்

ஆசிரியர்