Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஆடப்போறான் தமிழன்? | ஜூட் பிரகாஷ்

ஆடப்போறான் தமிழன்? | ஜூட் பிரகாஷ்

7 minutes read

எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வரும் தமிழன் ஒருவன் ஆடப் போகிறான் என்ற ஆதங்கம், இன்றும் தீராமல் நம்மவர் மத்தியில் இருந்து கொண்டேயிருக்கிறது.

சில வாரங்களிற்கு முன்னரும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை சேர்த்த மதுஷனும் வியாஸ் காந்தனும், இலங்கை U19 கிரிக்கெட் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்ற செய்தி, மீண்டுமொருமுறை எதிர்பார்ப்பை நம்மவர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது. நம்பி நம்பி ஏமாந்து போன எங்கட சனத்தின் அரசியல் பயணம் போல், இந்த கிரிக்கெட் பயணமும் நம்பி நம்பி ஏமாந்தும் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது.

பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழிருந்த நாட்களிலேயே இலங்கை பிற சர்வதேச அணிகளுடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தாலும், 1975 உலக கோப்பை போட்டிகளில் ஆடத்தொடங்கிய காலமே, இலங்கையின் சர்வதேச கிரிக்கெட்டின் முறையான ஆரம்பம் என்று கருதலாம். 

1982ல் இங்கிலாந்து அணிக்கெதிராக, Tamil Union விளையாட்டுக் கழகத்தின் சரவணமுத்து விளையாட்டரங்கில் அரங்கேறிய முதலாவது டெஸ்ட் போட்டி, இலங்கை அணியை உத்தியோகபூர்வமாக சர்வதேச தராரதரத்திற்கு பிற கிரிக்கெட் அணிகள் ஏற்கத் தொடங்கியதற்கான அங்கீகாரம். 

1960களின் இறுதிப்பகுதியில் அப்போதைய Ceylon கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரன், Dr. C. பாலகிருஷ்ணன், பரி யோவான் கல்லூரி அணியை 1960ம் ஆண்டு தலைமை தாங்கியவர். 1969ல் ஒஸ்ரேலிய அணிக்கெதிரான 3 நாள் போட்டியில், ஒஸ்ரேலிய வேக பந்துவீச்சாளரான Graham McKenzieயின் பந்துக்களை வெளுத்துக் கட்டி 55 ஓட்டங்களை பெற்ற Dr. C. பாலகிருஷ்ணன், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் one of the best Open Batsmanஆக இன்றும் கணிக்கப்படுகிறார். 1970களின் ஆரம்பத்தில் Dr. C பாலகிருஷ்ணன் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து விட்டார்.

1970களில் இலங்கை அணியில் கட்டாயம் இடம்பிடித்திருக்க வேண்டிய இரு யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள், தெய்வேந்திராவும் நகுலேஸ்வரனும் என்கிறார்கள், அந்தக் காலக் கிரிக்கெட் வரலாற்று கரைத்து குடித்த அண்ணாமார். பரி யோவான் கல்லூரியின் மிகச்சிறந்த சகல துறை ஆட்டக்காரன் தான் M. தெய்வேந்திரா. யாழ் மத்திய கல்லூரியின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் நகுலேஸ்வரன்.

1966ல் பரி யோவான் கல்லூரி கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய M.தெய்வேந்திரா, உயர்தர பரீட்சையில் சித்தியெய்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்திற்கு தெரிவாகியவர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் டெஸ்ட் வீரனும் Yorkshire county cricket அணியின் தலைவருமான Brian Close நடாத்திய ஒரு கிரிக்கெட் பயிற்சி பாசறையில் தெய்வேந்திராவும் கலந்து கொண்டார். பாசறையில்  தெய்வேந்திராவின் ஆட்டத்தை கவனித்து விட்டு Brian Close  “Teenage Gary Sobers hails from Jaffna” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினாராம். 

பேராதனை மருத்துவ கல்லூரியில் வெள்ளிக்கிழமை விரிவுரைகளை முடித்துவிட்டு, தனது தம்பியாரோடு ஸ்கூட்டரில் கண்டியிலிருந்து கொழும்புக்கு பயணித்து, P.Sara trophy கிரிக்கெட் விளையாடிவிட்டு, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் ஸ்கூட்டரில் கண்டிக்கு மலையேறிய கதையை Dr.M. தெய்வேந்திரா சொல்ல கேட்க மலைப்பாக இருந்தது. ஒரு seasonல் 500 ஓட்டங்களும் 50 விக்கெட்டுக்களும் எடுத்திருந்தும், அவரை விட சற்றே அதிகமாக விக்கெட்டுக்கள் எடுத்ததால் இலங்கை அணித் தெரிவில் தன்னை DS de Silva முந்தி விட்டதாக பெருந்தன்மையுடன் தெய்வேந்திரா அண்ணை விவரித்தார். 

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் 1977ம் ஆண்டு கிரிக்கெட் அணித் தலைவரான நகுலேஸ்வரனை, அந்தக் காலத்து Wasim Akram என்று அவர் பந்து வீசுவதை நேரில் பார்த்தவர்கள் வர்ணிக்கிறார்கள். 

1980களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாண கிரிக்கெட்டைக் கலக்கிய மத்திய கல்லூரியின் தோமஸுக்கும் போல் பிரகலாதனுக்கும் பரி யோவானின் வசந்தனுக்கும் இலங்கை U19 கிரிக்கெட் அணியின் கதவுகள் திறக்கப்படவேயில்லை.

ஆனால், 1983ல் ஒஸ்ரேலியாவிற்கு சென்ற இலங்கை U19 அணியில் பரி யோவான் கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளர் P. திருக்குமாருக்கு இடம் கிடைத்தது.  கல்லூரியில் படிக்கும் போதே இலங்கை தேசிய அணியில் விளையாடியதற்காக, பரி யோவானின் அதியுயர் விருதான Johnian Eagle விருதைப் பெற்ற இரண்டாவது மாணவனாக திருக்குமார் சரித்திரம் படைத்த அந்த assembly இன்னும் நினைவில் நிழலாடுகிறது. 

திருக்குமாருக்கு முன்னர், 1970களில் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் தான், Johnian Eagle விருதைப் பெற்ற முதலாவது மாணவன். 1990ல் அதே இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்ட அணியில் இடம்பிடிக்க வேண்டிய பரி யோவான் அணியின் கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட அணிகளின் தலைவரான  T.சதீசனின் வாய்ப்பை, மீண்டும் தொடங்கிய இரண்டாவது ஈழ யுத்தம் தட்டிப் பறித்தது. 

1990களின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்தில் அதிரடி ஆட்டக்காரனாக கலக்கிய பிரஷாந்தன் (petty), யுத்தத்தின் மத்தியிலும், கொழும்பு வந்து, இலங்கை அணியில் இடம்பிடிக்க எடுத்த கடும் முயற்சி விரக்தியில் முடிந்த கதையை அவரது நண்பர்களை கேட்டால் சொல்லுவார்கள். Tamil Union அணியின் First XIல் இடம்பிடித்து, P Sara trophy போட்டிகளில் விளையாடுவதற்கே பிரஷாந்தனிற்கு போதிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லையாம்.  “Eric Upashantha விளையாடிய spot பிரஷாந்தனின் இடமடா” என்று அவரது நண்பர்கள் அங்கலாய்ப்பார்கள். 

1995ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியில் விளையாடும் சந்தர்ப்பம் பரி யோவான் SJC92 நண்பன் சுரேன்குமாரிற்கு வாய்த்தது. இலங்கை பாடசாலை பழைய மாணவர்களிற்கிடையிலான வருடாந்த festival of cricket போட்டியில் வெற்றிவாகை சூடிய பரி யோவான் அணியின் best playerஆக தெரிவான சுரேனிற்கு, கிடைத்த பரிசு, இலங்கை தேசிய அணிக்காக ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட சந்தர்ப்பம். 

2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர், இலங்கையின் U19 கிரிக்கெட் அணியில் ஆட மிக நெருங்கி வந்த முதலாவது கிரிக்கெட் வீரன், பரி யோவானின் சகலதுறை ஆட்டக்காரரான துவாரகசீலன். அவரைத் தொடர்ந்து கடந்த வருடங்களில், பரி யோவானின் ஜெனி ஃப்ளெமிங்கும் கபில்ராஜும் ஜதுஷனும், இலங்கை U19 அணியின் squadகளில் இடம்பிடித்தார்கள், ஆனால் கடைசிவரை அணியில் இடம் கிடைக்கவில்லை. 

எங்களுடைய பெடியள், தேசிய அணியில் இடம்பிடிக்காமல் போவதற்கு போதிய பயிற்சியின்மையும், turf wicketsல் ஆடும் பரிச்சயமின்மையும், சரியான உடல்தகுதி (fitness) இல்லாமையும், கொழும்பிற்கு வந்து தங்கி போக வசதிகள் இல்லாமையும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி, எங்களது பெடியளை அணியில் இணைக்க இன்னும் இனவாதம் தடையாக இருக்கிறது என்று நம்மவர்கள் முடிவிற்கு வருவதில் நிறையவே நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 

இனவாத ஒடுக்குமுறைக்கு ஆளான கறுப்பினத்தவர்களிற்கு, தனது தேசிய கிரிக்கெட் மற்றும் ரக்பி அணிகளில் கட்டாய ஒதுக்கீட்டை அமுல்படுத்திய தென்னாபிரிக்காவை பின்பற்ற இலங்கை கிரிக்கெட் சபை பின்னிற்பதற்கான காரணம் யாவரும் அறிந்ததே. 

அதேவேளை தேசிய U19 அணியிலோ இல்லை U23 அணியிலோ ஏன் மாகாண மட்ட போட்டிகளில், ஏதோ ஒரு மாகாண அணியிலோ, வடக்கிலிருந்தோ கிழக்கிலிருந்தோ திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களிற்கு விளையாட, இலங்கை கிரிக்கெட் சபை வாய்ப்பளிக்கலாம், வாய்ப்பளிக்க வேண்டும்.

போன கிழமை இந்திய U19 அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விழுந்த ஏழு விக்கெட்டுக்களில் நாலு விக்கெட்டுக்களைச் சாய்த்து, நமக்கெல்லாம் பெருமை தேடித் தந்தான் மத்திய கல்லூரித் தம்பி வியாஸ்காந்தன். அவனும் மதுஷனும் கடந்த மார்ச் மாதம் பலமான பரி யோவான் அணியை விழுத்தி, மத்திய கல்லூரியின் Big Match வெற்றிக்கு வித்திட்ட பொழுதுகளை மறக்க முடியாது. இந்திய அணிக்கெதிராக நாலு விக்கெட்டுக்கள் எடுத்த வியாஸ் காந்தன், முதலாவது U19 டெஸ்ட் போட்டியில் அணியில் விளையாடுவான் என்று எதிர்பார்த்தால், ஏமாந்து பழகிய எங்களிற்கு மீண்டும் ஏமாற்றம் தான் கிடைத்தது. 

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த கிழமை, ஹம்பாந்தோட்டையில் நடக்கிறது. மத்திய கல்லூரியின் புதல்வன், திறமான சுழற்பந்து வீச்சாளரான வியாஸ் காந்தன், அந்த அணியில் இடம்பெற வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக நண்பர்கள் நம்புகிறார்கள். மீண்டுமொரு நம்பிக்கையோடு காத்திருப்போம்.

எங்கள் மண்ணின் மைந்தன் ஒருத்தன் தேசிய அணிக்கு விளையாடும் வரை, எல்லாவற்றையும்  இழந்தாலும் நாங்கள் இதுவரை இழக்காமல் இருக்கும், நம்பிக்கையோடு காத்திருப்போம். 

—————————————————-

பதிவு தரவேற்றிய பின்னர், பதிவை வாசித்த அண்ணாமாரிடம் இருந்து கிடைத்த மேலதிக தகவல்கள். 

1. 

There are two cricketers who were very closes to playing for Srilanka Senior team were , Jaffna Centralites Donald Ganeshakumar and K.M.Shanthikumar  Donald toured to Australia with Srilanka All schools team in 1964 and and he was known as Juinor Wesly Hall.

K.M.Shanthikumar Played for Srilanaka All schools team In 1972 and he was mentioed by Australian cricket manager as the best paceman they have encountered in Srilanka Shanthi was in the Srilanak national squad for more than 5 years.

2.

பரியோவான் கல்லூரி 94 இல் Festival of Cricket, மத்திய கல்லூரி தொடர்ந்து நான்கு  தடவைகள் வென்றதன் தொடர்ச்சியாக வென்ற பரியாவான் கல்லூரியின் சுரேன்குமார் இலங்கை அணிக்கு எதிரான practice match க்கு   festival  of Cricket selected team  க்கு விளையாட அழைக்கப்பட்டார். அந்த அணியில் மத்திய கல்லூரியின் போல் பிரகலாதனும் அங்கம் வகித்தார். ஆனால் match விளையாட முடியாதபடி மழை  பெய்திருந்ததால் match நடைபெறவில்லை.

3.

Jaffna Central Naguleswaran represented  U25 Srilanka which toured India in 1981 and was in theSri Lankan National pool of 25 in 1983. 

4.

I have admired Dayalan an outstanding all rounder. He played football for Sri Lankan Schools. Another one was Raveendran. He was also an outstanding all rounder. He shined in athletics on national stage. Vijayakulasingam was another all rounder to mention. Dayalan played against touring Pakistan U19 team in 1976 I guess. 

  • ஜூட் பிரகாஷ்

ஜூட் பிரகாஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் எழுதிய இக் கட்டுரையை முக்கியம் கருதி மீள் பிரசுரம் செய்கிறது வணக்கம் லண்டன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More