விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஆகியன இணைந்து நடத்திவரும் 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த வாரம் நிறைவுக்கு வருகின்றது.
கொழும்பு சுகததாக விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 24, 25, 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டிகளுடன் 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவுக்கு வருகிறது.
பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகaள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட நிலையில் மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஆடம்பர செலவுகள் உட்பட தேவையற்ற செலவுகளைக் குறைத்துள்ளதால் தேசிய விளையாட்ட விழா என்ற பெயரை மாற்றி தேசிய விளையாட்டுப் போட்டிகள் என அழைக்குமாறு விளையாட்டுத்தறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்கள் உட்பட 9 மாகாணங்களிலிருந்தும் 1,000க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
மெய்வல்லுநர் போட்டியின் கடைசி நாளன்று தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு விளையாட்டு நிகழ்ச்சியிலும் தெரிவான அதிசிறந்த வீர, வீராங்கனைகளுக்கு வெற்றிக் கிண்ணங்களுடன் சான்றிதழ்களுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும்.
மெய்வல்லுநர் போட்டிகளிலும் அதிசிறந்த ஆண் மெய்வல்லநர், பெண் மெய்வல்லுநர் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படும்.
எவ்வாறாயினும் உலக மெய்வல்லுநர் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் தேசிய மெய்வல்லுநர்கள் இந்த மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றுவது உறுதியில்லை.
24ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள முடிவு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.