October 2, 2023 9:15 am

புனித சூசையப்பர் 18ஆவது தொடர்ச்சியான தடவையாக சம்பியனானது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுத்துறை சங்கத்தினால் கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட 48ஆவது வருடாந்த அகில இலங்கை பாடசாலைகள் வயது நிலை நீச்சல் போட்டியில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி சிறுவர்கள் பிரிவிலும், கொழும்பு விசாகா வித்தியாலயம் சிறுமிகள் பிரிவிலும், வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை கலப்பு  பிரிவிலும் ஒட்டுமொத்த சம்பியனாகின.

இப்போட்டிகளுக்கு 30ஆவது தடவையாக நெஸ்லே லங்கா பி.எல்.சி. நிறுவனத்தின் மைலோ அனுசரணை வழங்கியமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட ஆகிய இரண்டு பிரிவுகளிலும் புனித சூசையப்பர் கல்லூரியும் விசாகா வித்தியாலயமும் சம்பியனாகின.

இந்த வருடம் நீச்சல் போட்டிகளில் சிறுவர்களுக்கான கனிஷ்ட பிரிவில் 271 புள்ளிகளையும் சிரேஷ்ட பிரிவில் 299 புள்ளிகளையும் பெற்று இரண்டு பிரிவுகளிலும் சம்பியனான புனித சூசையப்பர் கல்லூரி மொத்தமாக 570 புள்ளிகளைப் பெற்று 18ஆவது தொடர்ச்சியான தடவையாக  சிறுவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியனானது.

சிறுமிகளுக்கான கனிஷ்ட பிரிவில் 171 புள்ளிகளையும் சிரேஷ்ட பிரிவில் 252 புள்ளிகளையும் பெற்று இரண்டு பிரிவுகளிலும் சம்பியனான விசாகா வித்தியாலயம் மொத்தமாக 423 புள்ளிகளைப் பெற்று 2ஆவது தொடர்ச்சியான வருடமாக சிறுமிகள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியனானது.

இரு பாலாருக்குமான கலப்பு பிரிவு பாடசாலைகளில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 557 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சம்பியனானது.

14, 16, 18, 20 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆகிய பிரிவுகளில் சம்பியன்களான வீர, வீராங்கனைகளுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

தனிநபர் சம்பியன்கள் – சிறுவர்கள்

14 வயதின் கீழ்: ஏ.ஐ.எம். ஹாதிம் (3 புதிய சாதனைகள் – புனித பேதுருவானவர்)

16 வயதின் கீழ்: எம். எவ். மொஹமத் (2 புதிய சாதனைகள் – மருதானை ஸாஹிரா)

18 வயதின் கீழ்: ஆகாஷ் ப்ரபாஷ்வர் (மருதானை புனித சூசையப்பர்)

20 வயதின் கீழ் கிறிஸ் பவித்ர (ஒரு புதிய சாதனை – புனித பேதுருவானவர்)

சிறுமிகள்

14 வயதின் கீழ்: யுனாயா பெரேரா (கம்பஹா லைசியம் ச.பா.)

16 வயதின் கீழ்: யஹன்மி காரியவசம் (காலி சங்கமித்தா பெண்கள் வித்தியாலயம்)

18 வயதின் கீழ்: ஜெசி செனவிரட்ன (2 புதிய சாதனைகள் – திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை)

20 வயதின் கீழ்: ட்ரிசியா டி ரோஸ் (ஒரு புதிய சாதனை – ஸ்டஃபர்ட் ச.பா.)

அணி நிலை சம்பியன்கள் – சிறுவர்கள்

10, 12, 14, 16. 18, 20 ஆகிய 6 வயதுப் பிரிவுகளில் நீச்சல் போட்டிகளில் சம்பியனான பாடசாலை அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

சிறுவர்கள்

 

10 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (76 புள்ளிகள்)

12 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (128 புள்ளிகள்)

14 வயதின் கீழ்: புனித பேதுருவானவர் (76 புள்ளிகள்)

16 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (84 புள்ளிகள்)

18 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (154 புள்ளிகள்)

20 வயதின் கீழ்: ஆனந்த (141.5 புள்ளிகள்)

சிறுமிகள்

10 வயதின் கீழ்: கம்பஹா லைசியம் ச.பா. (58 புள்ளிகள்)

12 வயதின் கீழ்: விசாகா வித்தியாலயம் (85 புள்ளிகள்)

14 வயதின் கீழ்: கம்பஹா லைசியம் ச.பா. (106 புள்ளிகள்)

16 வயதின் கீழ்: சிறிமாவோ பண்டாரநாயக்க பெ.வி. (72 புள்ளிகள்)

18 வயதின் கீழ்: கொழும்பு மகளிர் கல்லூரி (99 புள்ளிகள்)

20 வயதின் கீழ்: விசாகா (138 புள்ளிகள்)

250 பாடசாலைகள், 6000 போட்டியாளர்கள்

ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இந்த வருட நீச்சல் போட்டிகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி 27ஆம் திகதி (5 தினங்கள்) நிறைவடைந்தது.

சில நாட்களில்  இரவு 11 மணி வரை போட்டிகள் நடத்தப்பட்ட போதிலும் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்குபற்றியதுடன், பெற்றோர்கள் அவர்களை ஊக்குவித்த வண்ணம் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

அடுத்த வருடம் இப்போட்டியை 6 தினங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் ப்ரேமஜயன்த பிரதம அதிதியாகவும் நெஸ்லே லங்கா பி.எல்.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பேர்னார்ட் ஸ்டெஃபான், நெஸ்லே லங்கா பி.எல்.சி. நிறுவனத்தின் கூட்டாண்மை மற்றும் ஒழுங்குபடுத்தல் பிரிவுக்கு பொறுப்பான உதவித் தலைவர் பந்துல எகொடகே, கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் உபாலி அமரதுங்க ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்