செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு புனித பேதுருவானவர் அணியை பிரமிக்கவைத்து அபார வெற்றியீட்டியது மருதானை ஸாஹிரா

புனித பேதுருவானவர் அணியை பிரமிக்கவைத்து அபார வெற்றியீட்டியது மருதானை ஸாஹிரா

2 minutes read

மருதானை ஸாஹிரா என்றால் கால்பந்தாட்டத்திற்கு பெயர் பெற்ற பாடசாலை என்றுதான் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். பல தசாப்தங்களாக கால்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஸாஹிரா இப்போது, றக்பிக்கு பெயர்பெற்ற பாடசாலைகளை எல்லாம் பிரமிக்கச் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது.

எழுபதுகளுக்கு முற்பட்ட காலத்தில் றக்பி விளையாட்டில் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்தி எண்ணற்ற றக்பி வீரர்களை உருவாக்கிய ஸாஹிரா, இப்போது மீண்டும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் ஆரம்பமான டயலொக் பாடசாலைகள் கிண்ணப் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியை ஸாஹிரா வெற்றிவாகையுடன் தொடங்கியுள்ளது.

முதலாம் சுற்றில் தோல்வி அடையாத அணியாக இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய முன்னாள் சம்பியன் பம்பலப்பிட்டி புனித பெதுருவானவர் அணியை அதன் சொந்த மைதானத்தில் அதிரவைத்து 38 – 34 என்ற புள்ளிகள் கணக்கில் ஸாஹிரா  வெற்றி  ஈட்டியது.

சில வாரங்களுக்கு முன்னர் மற்றொரு முன்னாள் சம்பியனான றோயல் அணியை 63 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக வெற்றிகொண்ட ஸாஹிரா அணி, அந்த வெற்றி அதிர்ஷ்டகரமாக வந்ததல்ல, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கூட்டுமுயற்சி ஆகியவற்றின் வெளிப்பாடு என்பதை புனித பேதுருவானவர் அணியுடனான வெற்றி மூலம் நிரூபித்தது.

ஒரே பருவகாலத்தில் இரண்டு பிரபல றக்பி பாடசாலைகளை வெற்றிகொண்ட ஸாஹிரா, மற்றொரு முன்னாள் சம்பியனான வெஸ்லியை வெற்றிகொள்ளும் குறிக்கோளுடன் இந்த வார இறுதியில் களம் இறங்கவுள்ளது.

ஸாஹிரா கல்லூரி கடைசியாக 1998ஆம் ஆண்டு ரியாஸ் ஹானிஸின் தலைமையில் லோங்டன் பிளேஸில் புனித பேதுருவானவர் அணியை வெற்றிகொண்டிருந்தது.

இந்த வருடப் போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையில் இறுக்கமாக அமைந்ததுடன் எந்த அணி வெற்றிபெறும் என்ற சொல்ல முடியாத அளவுக்கு கடும் போட்டித்தன்மை நிலவியது.

போட்டியின்  முதலாவது பகுதியின் இரண்டு கட்டங்களில் ஸாஹிரா 10 – 3 எனவும் 17 – 15 எனவும் முன்னிலையில் இருந்தது. ஆனால் இடைவேளை நெருங்கியபோது புனித பேதுருவானர் 20 – 17 என முன்னிலை அடைந்தது.

இடைவேளைக்குப் பின்னர் போட்டியில் சூடுபிடிக்கத் தொடங்கியது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்த சற்று நேரத்தில் புனித பேதுருவானர்  27 – 17 என முன்னிலை அடைந்தது.

ஆனால், 46ஆவது நிமிடத்திலிருந்து 10 நிமிட இடைவெளியில் ஸாஹிரா 3 ட்ரைகளுடன் மேலதிகப் புள்ளிகளையும் பெற்று 38 – 27 என முன்னிலை அடைந்து புனித பேதுருவானர் அணியை பிரமிக்க வைத்தது.

எனினும் புனித பேதுருவானர் மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் புள்ளிகள் நிலையை 34 – 38 என ஆக்கியது.

இதனைத் தொடர்ந்து கடைசி 12 நிமிடங்கள் இரண்டு அணிகளும் புள்ளிகளைப் பெற கடுமையாக போராடின.

இறுதியில் ஸாஹிரா 38 – 34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது.

ஸாஹிரா சார்பாக இமாத் இனாம் (ட்ரை), ஷய்புல்லா சுல்பிகார் (2 ட்ரைகள், ஒரு பெனல்டி, 5 கொன்வேர்ஷன்கள்), அஹமத் ரியாஸ் (ட்ரை), லிசத் பத்திரண (ட்ரை) ஆகியோரும் புனித பேதுருவானவர் சார்பாக எம். நிதுசன் (2 ட்ரைகள்), ஜமால் வஹாப் (ட்ரை), லக்கிந்து ரணசிங்க (ட்ரை), ரஷ்பின் சபார் (ட்ரை), அஷோக் கிரிஷான் (ஒரு பெனல்டி, 2 கொன்வேர்ஷன்கள்), ஜியோன் ரஜித் (ஒரு கொன்வேர்ஷன்) ஆகியோரும் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.