Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா “மூன்றாக பிரிகிறது காஷ்மீர் மாநிலம்… ரத்தாகிறது சிறப்பு அந்தஸ்து?” – ஆபரேஷன் `ஆகஸ்ட் 15′

“மூன்றாக பிரிகிறது காஷ்மீர் மாநிலம்… ரத்தாகிறது சிறப்பு அந்தஸ்து?” – ஆபரேஷன் `ஆகஸ்ட் 15′

4 minutes read

‘காஷ்மீர்’ இந்தியாவின் தலைப்பகுதி… இந்தியாவுக்குத் தலைவலியாக இருக்கும் மாநிலமும் இதுவே. சுந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் இணைந்த மாநிலம். வரும் சுதந்திர தினத்தன்று மீண்டும் ஓர் அதிர்ச்சியைச் சந்திக்க உள்ளது இந்தக் கலவர பூமி.

காஷ்மீர் மாநிலம்

‘காஷ்மீர்’ இந்தியாவின் தலைப்பகுதி… இந்தியாவுக்குத் தலைவலியாக இருக்கும் மாநிலமும் இதுவே. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் இணைந்த மாநிலம். வரும் சுதந்திர தினத்தன்று மீண்டும் ஓர் அதிர்ச்சியைச் சந்திக்க உள்ளது இந்தக் கலவர பூமி. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் தனிப் பிரதேசமாக இருந்தது. இந்தியாவுடனும் இணையாமல், பாகிஸ்தானுடனும் இணையாமல் தனித்துவமாகச் செயல்பட விரும்புவதாக அந்தப் பிரதேசத்தை அப்போது ஆட்சி செய்துவந்த மன்னர் ஹரிசிங் அறிவித்தார்.

மன்னர் ஹரிசிங்

மன்னர் ஹரிசிங்

ஆனால், 1947 அக்டோபர் 22-ம் தேதி பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து அந்தப் பிரதேச பகுதிகளை ஆக்கிரமித்தன. இதனால், மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாட, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை முறியடித்தது. அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகள் இப்போதும் ‘ஆசாத் காஷ்மீர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்ற, இந்தியாவுடன் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்து மன்னர் ஹரிசிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ‘காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு’ ஆகிய மூன்று விஷயங்களை மட்டும் இந்தியா கவனித்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு, இந்தத் தன்னாட்சி அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. சட்டவிதி 370-ன்படி இந்திய அரசியல் அமைப்பில், ஜம்மு மற்றும் காஷ்மீருக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிதி மாநில அரசாங்கம் தனக்கேற்ற சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், மாநிலத்தின் தனிப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

அதேபோல், 35ஏ சட்டவிதியும் உருவாக்கப்பட்டது. இதன்படி, காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மட்டுமே அங்கு சொத்துகள் வாங்க முடியும். வெளிநபர்கள் சொத்துகள் வாங்க முடியாத நிலையும் உள்ளது. இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என பி.ஜே.பி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 35 ஏ சட்டத்தை இந்திய அரசியல் பிரிவிலிருந்து நீக்க 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒருதரப்பு வழக்கு போட்டது. அந்த வழக்கில், இதுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது. அதேநேரம், பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையிலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஆக்ஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அறிவிக்க உள்ளார். இந்த நிலையில், நேற்று காஷ்மீரில் தங்கியிருந்த அமர்நாத் யாத்ரிகர்களை உடனடியாக வெளியேறும்படி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்துக்குள்ளாகவே காஷ்மீர் விவகாரத்துக்கு முடிவுகட்ட மத்திய அரசு முடிவு செய்துவிட்டது.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் போராட்டம்

காஷ்மீர் பிரிவினைவாதிகள் போராட்டம்

ஏற்கெனவே காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று தினமும் காஷ்மீர்ப் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்நிலையில் சட்டத்தை மட்டும் ரத்து செய்தால், மீண்டும் காஷ்மீர் கலவர பூமியாக மாறிவிடும் என்பதால், மற்றொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவுள்ளது. அதாவது, காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்முவைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாநிலமும், லடாக் மற்றும் காஷ்மீரைத் தனி யூனியன் பிரதேசங்களாகவும் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதனால் காஷ்மீர் மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கும் அந்த மாநிலத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கும் சிக்கல் ஏற்படும். ஒரே பிரதேசம் மூன்றாக உடைந்தால், எந்தப் பகுதிக்காகப் போராட முடியும் என்கிற கேள்வி எழும். மேலும், அந்த மாநிலத்தில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளும் மூன்றாகப் பிரியும் நிலையும் உள்ளது. இந்த நடவடிக்கை மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு நாள்களாகவே காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மூன்று தலைநகரங்களோடு, காஷ்மீர் மாநிலம் உருவாகவுள்ளது. ஆனால், இந்த அறிவிப்புக்குப் பிறகு, காஷ்மீரில் மிகப்பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் இப்போதே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.

பிரதமர் மோடி

‘‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவால், அது உலகளாவிய பிரச்னையாக மாறும் அபாயம் உள்ளது” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். ஆனால், காஷ்மீரில் நீடித்துவரும் பிரச்னைக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்து ஆட்சியில் இருந்த மெக்பூபா முக்தியின் ‘காஷ்மீர் ஜனநாயக கட்சி’ உள்ளிட்டவை இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த எதிர்ப்பு வந்தாலும் இந்த அறிவிப்பை வெளியிடும் முடிவில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அசுர பலத்தோடு மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பி.ஜே.பி அரசு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துவிட முடிவு செய்துள்ளது. சுதந்திர தினத்தன்று பிரதமர் அறிவிப்புக்குப் பிறகு காஷ்மீரில் என்ன நடக்கப்போகிறது என்பதே பலரது கவலையாக உள்ளது.

அ.சையது அபுதாஹிர். நன்றி: விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More