September 22, 2023 1:56 am

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” – தொடர் -8 | வதிலைபிரபா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கட்டுரையாளர் வதிலைபிரபா

“துட்டிலக்கியம்” மற்றும் “சிற்றிதழ் மோசடிகள்” மகாகவி இதழில் பெரும் தாக்கத்தையும், அதிர்வுகளையும் தந்திருந்தன. வட்டமேசை’ பகுதியில் இடம்பெற்ற விவாதங்கள் மற்றும் வாசகர் கடிதங்கள் இதழெங்கும் பற்றியெரிந்தன.
இதற்கிடையே முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். “உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதினும் என்று மொட்டையாக விடுவதில் அர்த்தமில்லை. ‘அச்சமில்லை’ என்று சேர்த்தால்தான் பொருள் உண்டு” என்றார். எத்தனையோ விவாதங்களைத் தந்த மகாகவிக்கு இந்தக் கடிதம் பெரும் தாக்கத்தைத் தந்தது. அடுத்தடுத்த இதழ்கள் “மிடிமையில் அழிந்திடேல்” எனும் பாரதியின் ஆத்திச்சூடி தாங்கி வெளிவந்தன. எந்தக் கருத்தையும் அல்லது எதிர்வினையையும் ஏற்றுக்கொண்டு தனக்குள் விவாதித்துத் தீர்வு காண்கிற நிலை மகாகவிக்கு இருந்தது. ஒரு சிற்றிதழுக்கான சரியான திசைவழியில் மகாகவி தொடர்ந்து பயணப்பட்டது. சுயவிமர்சனம் மகாகவிக்குப் புதிதல்ல.. ‘வட்டமேசை’ கூட அதைத்தான் செய்தது.

இந்நிலையில் 1996ம் ஆண்டில் துவங்கி வெளியான 41 சிற்றிதழ்களில் சிறந்த இதழாக ‘மகாகவி’ தெரிவு செய்யப்பட்டது. சிற்றிதழ் சேகரிப்பாளர் பொள்ளாச்சி நசன் மற்றும் வாரமுரசு இதழாளர் ராஜா சொர்ண சேகர் இருவரும் மகாகவிக்கு சான்றிதழும், ஊக்கத் தொகையும் வழங்கினர். இனி.. சொல்லவா வேண்டும். 41 சிற்றிதழ்களில் மகாகவி சிறந்த இதழ் என்றால் சும்மாவா? இன்னும் இன்னும் உத்வேகத்துடன் தனது பயணத்தைத் தொடர்ந்தது மகாகவி. சிற்றிதழ்களுக்கிடையே பீடுநடை போட்டு நடந்தது மகாகவி.

“தமிழில் நாவலில்லை, சிறுகதையில்லை, கவிதையில்லை, ஹைக்கூ இல்லை என்ற வரிசையில் தற்போது தமிழில் சிற்றிதழ்கள் இதுவரை வெளிவரவில்லை’ என்ற இவரின் (மௌனதீபனின் சிற்றிதழ் மோசடிகள்) பித்துக்குழித் தனத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று ‘அக்கினிக்குஞ்சு’ இதழாளர் இதயகீதன் எழுதியது நினைவில் வந்து சென்றது. சுய அரிப்பை விரும்பாத ஒருவனால்தான் சுய பரிசோதனை செய்ய முடியும். மகாகவியும் தொடர்ந்து சுய பரிசோதனை செய்து வந்தது.

“இன்றைக்கு இலக்கிய உலகில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பலரும் ஒரு காலத்தில் பெரிய ஏடுகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள்தான். ஆரோக்கியமான இலக்கியங்கள் யாரிடமெல்லாம் அவர்களையெல்லாம் சிற்றிதழ்கள்தான் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது” என்று கடமலைக்குண்டு இரா. தங்கப்பாண்டியன் எழுதியதில் வியப்பொன்றுமில்லை.

“விமர்சன அரிப்பை” சொரிந்துவிடும் வேலையை இனியாவது ‘மகாகவி’ விட்டொழிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும் என ‘யுகம்’ – ஆசிரியர் அ. உமர் பாரூக் எழுதியதையும், “கடிதப் பகுதியில்கூட விமர்சனங்களை எழுப்பும் எத்தனையோ கருத்துக்கள் வரும் சிற்றிதழ்களில் கிறுக்கல்கள் படைப்புகளாகிறது என்ற தன் மேதாவித்தனமான கருத்துக்கள் மூலம் தன்னை தனி ஆவர்த்தனம் செய்ய முயன்றிருக்கிறார் கட்டுரையாளர்” என்று பா. கவிதாகுமார் எழுதியதையும் மகாகவி ஒருபோதும் பிரசுரிக்கத் தவறவில்லை.

இன்னொரு மகுடம் மகாகவிக்குக் காத்திருக்கிறது என்றறியாமல் மகாகவி தொடர்ந்து நடை போட்டது.. அது ராஜ நடையாக இருந்தது…!

வதிலைபிரபா. எழுத்தாளர் மற்றும் சிற்றிதழ் ஆசிரியர்.

முந்தைய தொடர்கள்

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” – தொடர் -7 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -6 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -5 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -4 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் – 3 | வதிலைபிரபா

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 2 | வதிலைபிரபா

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 1

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்