பங்களாதேஷில் 13ஆவது பாராளுமன்றத் தேர்தலும் ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பான பொதுவாக்கெடுப்பும் சில வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே வியாழக்கிழமை நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆரம்ப கட்ட முடிவுகளின்படி முன்னாள் பிரதமர் காலீதா ஸியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி முன்னிலை வகித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்று 18 மாதங்கள் கடந்த நிலையில் இந்த பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதால், தேர்தலில் பிஎன்பி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
300 தொகுதிகளைக் கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றத்தில், ஒரு வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 299 தொகுதிகளில் காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
வன்முறைச் சம்பவங்கள் சில இடங்களில் பதிவானாலும், அவை தேர்தல் செயல்முறையை பெரிதும் பாதிக்கவில்லை.
வாக்குப்பதிவு முடிந்ததும் இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் மக்களிடம் நன்றி தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் பரஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தத் தேர்தலை பாதுகாப்பாக நடத்த சுமார் 10 இலட்சம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தபோதிலும் குல்னாவில் ஏற்பட்ட மோதலில் பிஎன்பி நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார். கோபால்கஞ்சில் வெடித்த நாட்டுவெடிகுண்டு சம்பவத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்தனர்.