இலண்டனில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இரண்டு எதிரெதிர் போராட்டங்களை பிரித்து வைப்பதற்காக சுமார் 45 இலட்சம் பவுண்டுகள் செலவில் பிரம்மாண்டமான காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 43 பேர் கைது செய்யப்பட்டதாக மெட்ரோபாலிட்டன் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இலண்டன் நகரின் மையப்பகுதியில் போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க 4,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். இதில் 660 அதிகாரிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பிற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டனர். பொலிஸார் ட்ரஃபல்கர் சதுக்கம், பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் நாடாளுமன்ற சதுக்கம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு “பாதுகாப்பு மண்டலத்தை” (sterile zone) உருவாக்கி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சந்திக்காதவாறு தடுத்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஈஸ்டன் மற்றும் கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையங்களில் முதன்முறையாக நேரடி முக அங்கீகார (live facial recognition) கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், வான்வழியாக ஹெலிகாப்டர்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த மோதல் போக்குக்குக் காரணமாக இரண்டு முக்கிய பேரணிகள் அமைந்தன. அதாவது தீவிர வலதுசாரித் தலைவர் டாமி ராபின்சன் (உண்மையான பெயர் ஸ்டீபன் யாக்ஸ்லி-லெனான்) ஏற்பாடு செய்த “யுனைட் தி கிங்டம்” (Unite the Kingdom) பேரணி.
1948-ல் பலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதைக் குறிக்கும் “நக்பா” (Nakba) தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பலஸ்தீன ஆதரவுப் பேரணி.
மேலும், அதே நாளில் வெம்ப்லியில் எஃப்ஏ கோப்பை (FA Cup) இறுதிப் போட்டியும் நடைபெற்றதால், பொலிஸாருக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.
கைது செய்யப்பட்ட 43 நபர்களில் 20 பேர் யுனைட் தி கிங்டம் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள். 12 பேர் நக்பா போராட்டத்துடன் தொடர்புடையவர்கள். 11 பேர் எந்தக் குழுவுடனும் தொடர்பு இல்லாதவர்கள் அல்லது உறுதிப்படுத்தப்படாதவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் வெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றங்களுக்காகப் பிடிக்கப்பட்டனர். இதில் ஒன்பது பேர் யுனைட் தி கிங்டம் குழுவையும், இரண்டு பேர் நக்பா குழுவையும் சேர்ந்தவர்கள்.
அதேவேளை, எஃப்ஏ கோப்பை போட்டியின் போது தனியாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு மற்றும் உலோகத் தடுப்புகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளான போதிலும், இரு தரப்பு போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரிய அளவிலான வன்முறை மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
