இஸ்ரேலுக்கு வெளியே அதிக யூத மக்கள் வாழும் நாடுகளில், கடந்தாண்டில் இங்கிலாந்தில்தான் யூதர்களுக்கு எதிரான சம்பவங்கள் மிக அதிகமாக உள்ளதாக புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.
ஜே7 நாடுகளின் பணிக்குழு வெளியிட்ட குறித்த அறிக்கையில், கடந்த 30 ஆண்டுகளில் 2025ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு வெளியே வாழும் யூதர்களுக்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 07 நாடுகளிலும் யூதர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் 2022ஆம் ஆண்டிலிருந்து 136% அதிகரித்துள்ளன.
இதில் இங்கிலாந்தில் மட்டும் கடந்த ஆண்டை விட 5% உயர்வு பதிவாகியுள்ளது. இது ஏனைய 06 நாடுகளை விட அதிகப்படியான வளர்ச்சியாகும்.
2025ஆம் ஆண்டில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர். இது 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.
ஆஸ்திரேலியா, சிட்னியின் பொண்டி கடற்கரையில் ஹனுக்கா திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இது இந்த நூற்றாண்டின் மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் தொழுகை இல்லத்தில் நடந்த தாக்குதலில் மெல்வின் கிராவிட்ஸ் மற்றும் ஏட்ரியன் டால்பி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா, வாஷிங்டன் டிசியில் உள்ள யூத அருங்காட்சியகத்தில் இரண்டு தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் கொலராடோவில் பணயக் கைதிகளுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் ஒரு மூதாட்டி கொல்லப்பட்டார்.
வன்முறைத் தாக்குதல்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் வெறுப்புப் பேச்சுகளில் இருந்தே தொடங்குகின்றன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவை தனிநபர்களைத் தீவிரவாதப் பாதைக்கு இட்டுச் செல்லப் பயன்படுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் யூதர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தெரிவித்துள்ளார்.
யூத சமூகத்தைப் பாதுகாக்க பொலிஸிக்கு உதவுவதற்காக £251 மில்லியன் நிதியுதவியை அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் யூத எதிர்ப்பு குறித்த ஒரு சுயாதீன ஆய்வு இந்த இலையுதிர் காலத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இங்கிலாந்து யூதர்களின் பிரதிநிதிகள் குழு, சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பரவும் வெறுப்புப் பேச்சுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.