கிரீஸில் பரவி வரும் கடும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் ஏதென்ஸிற்கு மேற்கே சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள அட்டிகா-போயோட்டியா (Attica-Boeotia) எல்லைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் இறக்கையில் (propellers) மோதியது. இதில் ஒரு ஹெலிகாப்டர் தீப்பற்றி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. மற்றொரு ஹெலிகாப்டர் அருகில் இருந்த பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு விமானியும், கிரேக்க தீயணைப்புத் துறையின் தொடர்பு அதிகாரியும் உயிரிழந்தனர்.
இரண்டாவது ஹெலிகாப்டரில் இருந்த இங்கிலாந்து விமானி மற்றும் மற்றொரு கிரேக்க அதிகாரி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ‘பெல்’ (Bell) வகை ஹெலிகாப்டர்களும் தற்போது தற்காலிகமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன.
கிரீஸில் நிலவும் கடுமையான வெப்ப அலை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் காரணமாகப் பல இடங்களில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்தப் பகுதிகளில் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர்.
தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள் ஆஸ்திரேலிய நிறுவனமான மெக்டெர்மாட் ஏவியேஷனிடமிருந்து (McDermott Aviation) குத்தகைக்கு எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.