செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சுறா தாக்குதலில் கை துண்டிப்பு; ‘எனக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளது’ – பெண்ணின் உருக்கமான பதிவு

சுறா தாக்குதலில் கை துண்டிப்பு; ‘எனக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளது’ – பெண்ணின் உருக்கமான பதிவு

1 minutes read

இவ்வாண்டின் தொடக்கத்தில் சிட்னியின் பிரபல கடற்கரையில் சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கான ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் குஜி (Coogee) கடற்கரையில் காலை வேளையில் நீந்திக் கொண்டிருந்த 35 வயதான லியா ஸ்டீவர்ட் (Leah Stewart) என்ற ஒரு குழந்தையின் தாய், சுறா மீனின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காகச் செயற்கைக் கோமா நிலைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்குப் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டது.

திங்கள்கிழமை இணையத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமக்காக 5,50,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் அதிகமான நிதியைத் திரட்டி ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தனது மீட்சிப் பயணம் மிகவும் கடினமாக இருந்தபோதிலும், தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த சில மாதங்கள் மிகவும் கடினமாக அமைந்த போதிலும், சுயமாக இயங்கும் அளவுக்கு நான் முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை துயரங்களுக்கும் பிறகு இறுதியில் ஒரு நல்ல வெளிச்சத்தைக் காண்கிறேன்” என்று தாக்குதலுக்குப் பிறகு வெளியிட்ட முதல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “எனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாக உணர்கிறேன்; அதை நான் வீணடிக்க மாட்டேன். உறவினர்கள், நண்பர்கள் மட்டுமன்றி முன்பின் அறியாத அந்நியர்களும் வழங்கிய ஆதரவு என்னை நெகிழ வைத்துள்ளது. இந்த அன்பும் ஆதரவும்தான் என்னை இன்னும் வலுவாக மீண்டெழ வைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்காக நடத்தப்பட்ட இணையவழி நிதி திரட்டல் தற்போது நிறைவு செய்யப்படுவதாக அறிவித்த அவர், திரட்டப்பட்ட நிதி தான் வீட்டிலிருந்தே தொடர்ந்து சிகிச்சை பெறவும், எதிர்கால மருத்துவச் தேவைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இவ்வாண்டு சுறா தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் இரண்டு நாட்களில் நான்கு தாக்குதல்கள் இடம்பெற்றதுடன், அதில் 12 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். மே மாதம் குயின்ஸ்லாந்தில் ஒருவரும், மேற்கு ஆஸ்திரேலியாவில் 4 மீற்றர் நீளமுடைய சுறா தாக்கியதில் இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.