இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடுமின்றி முடிவடைந்துள்ளன. இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் ஆகியோரின் பிரதிநிதிகளுக்கு இடையே சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் இணக்கம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு காடி ஐசன்கோட்டிற்கு அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அவரது கூட்டணிக்கு மேலும் 13 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
இந்நிலையில், இரு தரப்பும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென பெஞ்சமின் நெத்தனியாகு விரும்புகின்றார். இதற்காகப் பிரதமர் பதவியைச் சுழற்சி முறையில் மாறி மாறி வகிக்கும் யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார். எனினும், அவரின் தலைமையின் கீழ் பணியாற்றப் போவதில்லை என காடி ஐசன்கோட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரபுக் கட்சிகள் மற்றும் தீவிர யூத மரபுக் கூட்டணிக் கட்சிகளை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வது மற்றும் பாதுகாப்புத் தொடர்பான முக்கியக் கொள்கைகள் ஆகிய விடயங்களில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன. எவ்வாறாயினும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் என இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
