1963 ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீதேவி தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், 1976இல் வெளியான ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர் பல பிரபலங்களோடு நடித்து வெற்றி வாகை சூடினார்.
இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை 1996இல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி, 1997இல் வெளியான ‘ஜூடாய்’ எனும் இந்தி திரைப்படத்தில் நடித்த பின்னர் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். அதன் பின் 2017இல் வெளியான ‘மம்’ எனும் இந்தி திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்தார். அது அவரது 300வது திரைப்படமாகும்.
மாரடைப்பினால் இறந்த ஸ்ரீதேவியின் பிரிவு திரை உலகத்திட்கு பெரும் இழப்பு என திரை உலகத்தினர் மிகுந்த சோகத்தில் கருத்து தெரிவித்தனர். ஸ்ரீதேவி உடனான கடைசி சந்திப்பு உள்ளிட்ட அவருடனான மகிழ்ச்சியான தருணங்கள் தமக்கு நினைவில் வருவதாகவும் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


