
இலங்கைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய ஓமான் அரசாங்கத்திடம் கடன் உதவிகளை கேட்டுள்ளதாகவும், அதேபோல் நிதி அமைச்சின் மூலமாக இதற்கான நிவாரணகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அடுத்த இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் விலை அதிகரிக்காது எனவும் கூறியுள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் யுத்தம் செய்ய முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவது குறித்த குற்றச்சாட்டுக்கள், எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்,
அவர் மேலும் கூறுகையில்,
இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஆனால் இந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொள்கின்ற நிலையில் நாம் ஒன்றுமே செய்ய முடியாது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் மிகவும் தெளிவாக இந்த உடன்படிக்கை கூறப்பட்டுள்ளது. இணை அபிவிருத்து திட்டமாக இது முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை செய்த வேளையில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் அடிப்படையில் இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இந்தியாவின் அழுத்தத்தில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது, ஒரு பக்கம் விடுதலைப்புலிகளை இந்தியாவால் பயிற்ச்சியளிக்கப்பட்டு, இலங்கை அரசாங்கத்தை அடி பணிய வைத்து பலாத்காரமாக இந்திய -இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் மூலமாக இந்தியாவிற்கு தேவையான நகர்வுகளை செய்துகொண்டுள்ளனர்.
அதில் சிக்குண்ட விடயமே திருகோணமலை எண்ணெய் குதங்கள் ஒப்பந்தம். இன்றும் அந்த சூழ்ச்சியில் நகர்த்தப்படுகின்றது.இந்தியாவிடம் இலங்கையை அடிமைப்படுத்தவே முயற்சித்தனர்.
இப்போதும் எமக்காக இந்த நிலத்தை மீளவும் பெற்றுக்கொள்ளவே நாம் முயற்சித்துக்கொண்டுளோம். எம்மிடம் இருக்கும் ஒரு நிலத்தை மீளவும் எமக்கு பெற்றுக்கொள்ள போராட வேண்டிய அவசியம் இல்லை.
ஆகவே இந்தியாவின் ஆதிக்கமே இன்னும் திருகோணமலை எண்ணெய் குதங்களை நிருவகிப்பதில் உள்ளது. அவ்வாறான நிலையில் இலங்கையை விடவும் இந்தியா சிறிய நாடென்றால் எம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும், ஆனால் இந்தியா மிகப்பெரிய பலம்பொருந்திய நாடு, அவர்களுடன் யுத்தம் செய்து எம்மால் எமது வளங்களை ஆக்கிரமிக்க முடியாது. இராஜதந்திர ரீதியிலேயே இவற்றை எம்மால் கைப்பற்ற முடியும்.
அதேபோல் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து பேசுபொருளாக மாறியுள்ளது, எரிபொருள் விலையை அதிகரிக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு, ஆனால் நிதி அமைச்சர் இது குறித்து மௌனம் காக்கின்றார், அமைச்சரவையில் இது குறித்து பேசிய வேளையிலும் அவர் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. இந்நிலையில் தான்ஓமானிடம் கடன் கேட்டுள்ளோம்,
ஒரு வருடத்திற்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு இந்த கடந்த கேட்கப்பட்டுள்ளது, ஐந்து ஆண்டுகளுக்கு நிவாரணமும், அதன் பின்னர் 20ஆண்டுகளில் கடன்களை செலுத்தி முடிப்பதை போன்று ஒரு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது, இந்த பேச்சுவார்த்தை இன்னும் இறுதிப்படுத்தவில்லை, அந்த கடன் கிடைத்தால் எரிபொருள் விலை அதிகரிக்காது.
ஓமான் அரசின் கடன் கிடைக்காது போனால், திறைசேரியில் நிவாரணம் கிடைக்காது போனால் வேறு சில முயற்சிகளை முன்னெடுக்கின்றோம், அதிலும் தோல்வி கண்டால் எரிபொரு விலை அதிகரிக்கும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் விலை அதிகரிக்காது, அதேபோல் விலை அதிகரித்தாலும் அதிக விலையாக அது அமையாது, எனவே மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.