Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் | வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்

பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் | வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்

4 minutes read

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதிக்கு அருகே, குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடமொன்றில், கைவிடப்பட்டிருந்த பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட  பெண்னின் சடலம், மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான இரு பிள்ளைகளின் தாயினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.  

அந்த பெண்னின் கணவரும், இரு பிள்ளைகளும் சடலத்தை நேற்று, ராகம வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காட்டியதாக  விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு உறுதிப்படுத்தினார்.

அதன்படி பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர், மாளிகாவத்தை ரம்யா பிளேஸ் பகுதியில் உள்ள  மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் வசிக்கும்  45 வயதான  மொஹம்மட் சாபி பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸின் ஆலோசனைக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சர் அர்ஜுன மாஹிங்கந்தவின் நெறிப்படுத்தலில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ.கே. விஜேதிலகவின் தலைமையிலான குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எல்.அமரசேகர உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் தற்போது,  சடலமாக மீட்கப்பட்ட பெண்  இறுதியாக பயணித்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைத் தேடி விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில்  பொலிஸ் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய சம்பவம் வருமாறு,

சடலம் மீட்கப்பட்ட பின்னணி 

சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாபிம பகுதியை அண்மித்து, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதியிக்கு அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்த நிலையில், அது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவுக்கு பலரும் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்தே நேற்று நண்பகல் அப்பகுதிக்கு பொலிஸார் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது அந்த குப்பை கொட்டப்பட்டிருந்த பகுதியில், சந்தேகத்துக்கு இடமான முறையில், பயணப் பை ஒன்று, பிளாஸ்டிக் பாய் ஒன்றினால் சுற்றப்பட்டு அவ்விடத்தில் கைவிடப்பட்டிருந்துள்ளமையும் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் பொலிஸாரால் கண்டறியப்பட்ட நிலையில், அந்த பயணப் பை சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போதே குறித்த பைக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிவப்பு சட்டை ( கவுன்) அணிந்த பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

சடலம்  உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதுடன் உடனடியாக சடலத்தை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் (4) மாலை அந்த பகுதிக்கு மஹர  பதில் நீதிவான் ரமனி சிறிவர்தன வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை ராகம வைத்தியசாலைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

இந்நிலையில், சப்புகஸ் கந்த பொலிஸ் பிரிவில்  எவரும் காணாமல் போனதாக எந்த முறைப்பாடுகளும் இருக்காத நிலையில்,  அருகில் உள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களில் உள்ள முறைப்பாடுகள் மீது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பியகம பொலிஸ் நிலைய முறைப்பாடு 

நேற்று முன் தினம் (4) இரவு வேளையில், பியகம மற்றும் அதனை அண்டிய இரு பொலிஸ் நிலையங்களில் பதிவாகியிருந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, இருவர் ராகம வைத்தியசாலையின் பிரதே அறைக்கு  பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டிருந்த போதும் அவர்கள் சடலத்தை பார்வையிட்ட பின்னர், அது தமது உறவினர் அல்ல என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே கொழும்பு மத்தி பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையமான மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி பதியப்பட்டிருந்த 45 வயதான பெண் ஒருவரின் காணாமல் போன சம்பவம் குறித்த முறைப்பாடு பொலிஸாரின் அவதானத்துக்கு வந்துள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் நிலைய முறைப்பாடும் அடையாளம் கண்ட நடவடிக்கையும் 

அதன்படி பொலிஸாரின் அறிவுறுத்தல் பிரகாரம், குறித்த முறைப்பாட்டை வழங்கியிருந்த  காணாமல் போன பெண்ணின் கணவரான எம். அமானுல்லாஹ் என்பவரை ராகம வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சடலம் காண்பிக்கப்பட்டுள்ளது. இதன்போதே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர், அந்த பெண்ணின் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டவர் தமது தாயே என்பதை உறுதி செய்துள்ளனர்.

காணாமல் போன பின்னணி 

கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி ரொஷானா எனும் பெண்ணுடன் தனது மனைவி, புளூமென்டல் பகுதிக்கு மற்றொரு நண்பியை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றதாகவும் அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என மாளிகாவத்தை பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே புளூமென்டல் பகுதியில் உள்ள நண்பியின் வீட்டுக்கு நேற்று சென்ற பொலிஸ் குழுவினர் அங்கு விசாரணைகளை முன்னெடுத்தனர். சடலமாக மீட்கப்பட்ட  பாத்திமா மும்தாஸ், வேறு நாட்களில் ரொஷானாவுடன் அவ்வீட்டுக்கு வந்து சென்றுள்ள போதும்,  முறைப்பாட்டில் கூறப்படும் தினமோ அதன் பின்னரோ அங்கு வரவில்லை என  அந்த வீட்டார் பொலிசாரிடம் கூறியுள்ளனர். அப்பகுதியிலுள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை பொலிசார் பரீட்சித்த நிலையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே உடன் சென்றதாக கூறப்படும் ரொஷானா எனும் பெண்ணை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது குறித்த தினம் தானும், பாத்திமா மும்தாஸும்  அடகு வைக்கப்பட்டிருந்த நகை ஒன்றினை மீட்க சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றிலேயே இருவரும் சென்றதாகவும், நகையை மீட்டுக்கொண்டு வரும் வழியே தான் இடையில் இறங்கியதாகவும்,   முச்சக்கர வண்டியில்  மும்தாஸ் தொடர்ந்து வீடு நோக்கி சென்றதாகவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள பாத்திமா மும்தாஸ் காணாமல் போகும் போது, சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான  நகைகளை அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் கூறப்பட்டிருந்தது. எனினும் சடலத்தில் எந்த தங்க ஆபரணங்களும் காணப்படவில்லை. இந்நிலையில் நகைகளை கொள்ளையிட முன்னெடுக்கப்பட்ட கொலையா என்ற கோணத்தில் விஷேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அத்துடன் இந்த  பெண் தான் வசித்த பகுதியில், சூது பந்தயம் தொடர்பில் பேசப்படும்  பெண் எனவும், அவரிடம் அதிகமாக பணம் இருந்ததாகவும் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். எனவே அந்த பணத்தை கொள்ளையிட நடந்த கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாத்திமா மும்தாஸ் இறுதியாக பயணித்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைத் தேடி தற் சமயம் பொலிஸார் வலை விரித்துள்ள நிலையில், சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளைத் தொடர்ந்து இன்று (6) அல்லது நாளை (7) முன்னெடுக்கப்படவுள்ளது. மேலதிக பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More