காசல்ரீ மண் தந்த கல்விமான் லெனின் மதிவானம்

லையகத்தில் பிரசித்தி பெற்ற காசல்ரீ மண் தந்த கல்விமான் லெனின் மதிவானம் மறைந்த செய்தி வேதனையை தந்தாலும், அவரின் சமூகப் பற்றும் மண்வாசனை நிறைந்த எழுத்துகளும் என்றென்றும் நிலைத்திருக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,   

காசல்ரீ தோட்டம் சட்டத்தரணிகளையும் நீதிவானையும் கல்விமான்களையும் உருவாக்கித் தந்த பெருமைக்குரியது. அங்கு பிறந்து வளர்ந்து கல்வி கற்று உயர்வடைந்த லெனின் மதிவானம் ஆசிரியராகவும், ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும் கடமையாற்றியதோடு, சிறந்த இலக்கிய விமர்சகராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் பன்முகத் திறமை கொண்ட ஆளுமை மிக்க சமூக செயற்பாட்டாளராகவும் வாழ்ந்து காட்டியுள்ளார்.

இடதுசாரிக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட அவரது தந்தையார் தமது புதல்வர்களுக்கு புரட்சிகரமான பெயர்களை சூட்டி மகிழந்தது போல அமரர் லெனின் மதிவானம் தமது பெயருக்கேற்ப, புரட்சிகரமான சிந்தனை உடையவராகவும், மனித நேயமிக்க பணிவு நிறைந்த பண்பாளராகவும், தற்பெருமை இல்லாத தன்னம்பிக்கை நிறைந்த மனிதராகவும், மற்றவர்களின் திறமைகளை மதித்து, ஊக்குவித்து வந்ததோடு, ஆணித்தரமான கருத்துகளை அஞ்சாமல் வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவராகவும் திகழ்ந்தார்.

அன்னாரின் பிரிவால் துயர்கொண்டுள்ள துணைவியார், மகன் மற்றும் குடும்பத்தாருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்