May 28, 2023 5:04 pm

எனக்கு எவரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை! – வடக்கு ஆளுநர் சண்டித்தனம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“வடக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். எனக்கு எவரும் வகுப்பெடுக்கக் கூடாது.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் இன்று அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஆளுநர் தான் நினைத்தபடி நியதிச் சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி வெளியிடுகின்றார் என என் மீது குற்றம் சாட்டி, சிலர் தம்மை மக்கள் மத்தியில் தலைவர்களாகக் காட்ட முயல்கின்றனர்.

வடக்கு மாகாண சபை செயற்பாட்டில் இல்லாத காலத்தில் மக்கள் நலன் சார்ந்த பல நியாதிச்ச சட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தாமல் உள்ளது.

ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் 154C மாகாண சபையொன்றுக்கு நியதிகளை இயற்றும் அதிகாரம், அவற்றில் உள்ள விடயங்கள் தொடர்பான நிறைவேற்று அதிகாரம், அந்த மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்ட மாகாண ஆளுநரால் நேரடியாகவோ அல்லது அமைச்சர்கள் சபையின் அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது கீழ்நிலை அதிகாரிகள் மூலமாகவோ செயற்படுத்தப்படும்.

பிரிவு 154F அதைத்தான் அரசமைப்புச் சட்டம் சொல்கின்ற நிலையில் ஒவ்வொரு சட்டமும் மாகாண நிர்வாகத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது.

பல சட்டங்கள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிலருக்கு மறுபரிசீலனை தேவைப்படுகின்றதோடு தமது அதிகார வரம்பு தெரியாமல் பேசுகின்றனர்.

அரசமைப்பில் எழுதப்பட்ட மாகாண அதிகாரங்கள் பல தமது செயற்பாடுகளைச் செய்யாத நிலையில் அவை ஒவ்வொன்றாகச் சரிபார்க்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

நிர்வாக ரீதியாகவும் இடைவெளிகள் உள்ளதோடு அதிபர், ஆசிரியர்களின் இடமாற்றங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சாதகமான கொள்கையைக் கொண்டிருந்தன.

கடந்த காலங்களில் மாகாண அரச சேவை சில வட்டத்துக்குள் முடக்கிவிடப்பட்ட நிலையில் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் இலகுபடுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, ஆளுநர் என்ற வகையில் வடக்கு மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள உரிய சட்ட திட்டங்களைச் செயற்படுத்துவேன். யாரும் எனக்குக் கற்பிக்க வேண்டாம் ” – என்றுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் தான் நினைத்தவாறு நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானி அறிவித்தல்களை விடுத்துள்ளார் எனக் கூறி அதற்கு எதிராகத் தான் ஜனாதிபதியிடம் முறையிடத் தீர்மானித்துள்ளார் என்று வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நேற்றுமுன்தினம் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்