புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்

வங்கியியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தின் கீழ் நடாத்தப்படவுள்ள இந்த இரு கற்கைநெறிகளினதும் அறிமுக நிகழ்வு இன்று 3 ஆம் திகதி, சனிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கற்கை நெறிகளை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பாலசுந்தரம் நிமலதாசன், வங்கியலும் நிதியும் டிப்ளோமா கற்கைநெறி இணைப்பாளர் பேராசிரியர் திருமதி எல். கெங்காதரன், தொழில்சார் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி இணைப்பாளர் கலாநிதி மு. சண்முகநாதன், பேரவை உறுப்பினர்கள், இலங்கை வங்கியின் உதவிப் பொது முகாமையாளர், வங்கிக் கிளைகளின் முகாமையாளர்கள், பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கற்கை நெறிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கற்கைநெறிகளுக்கான வளவாளர்களாக அந்தந்த துறைகளில் தேர்ச்சி பெற்ற தொழில்சார் வல்லுனர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சமூகத்தின் தேவையைச் செவ்வனே உணர்ந்து, அச்சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் ஒரு செயற்பாடாக இந்த இரு டிப்ளோமா கற்கைகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இந்தக் கற்கைநெறிகளின் முக்கியத்துவம், அதை எவ்வாறு சமுகப் பெறுப்புணர்வுடன் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது, கற்கைநெறிகளின் முடிவில் மாணவர்கள் பெறக் கூடிய நன்மைகள் என்பவற்றைக் குறித்துரைத்திருந்தார். நாட்டின் பொருளாதார நிலை, அதற்காக நாம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய பங்களிப்பு, பற்றியும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தியிருந்தார்.

ஆசிரியர்