Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலையின் சமுதாய சமையலறைத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

யாழ். பல்கலையின் சமுதாய சமையலறைத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

3 minutes read

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியில் காணப்பட்டபோது யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு உணவினை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்த இந்த திட்டம், மாணவர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 

இத்திட்டத்தின் மூலம் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பசியினை ஆற்றிச்செல்கின்றனர்.

இந்நிலையில் சமையலறையில் மரக்கறி வெட்டுவதில் இருந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறுவது, பாத்திரம் கழுவுவது என அனைத்து விடயங்களிலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் முழு மனதோடு ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மாணவர்களும் விரிவுரை தவிர்ந்த மற்ற நேரங்களில் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.

விரிவுரையாளர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக சமையலறை உணவுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மேலும் பல விரிவுரையாளர்கள் கைகோர்க்க ஆரம்பித்திருக்கின்றார்கள். 

இந்த சமூக சமையலறை திட்டப் பணிகள் ஏறத்தாழ 4 மாதங்களாக மாணவர்களது பசியினை ஆற்றும் நோக்கோடு இயங்கி வருகிறது.

நாட்டின் பொருளாதார நிலை சுமுகமாகும் வரை தொடர்ந்து இத்திட்டத்தினை முன்னகர்த்த பல்கலைக்கழக பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளின் உதவியே பிரதானமாக காணப்படுகிறது. 

இலங்கையில் எந்தவொரு பல்கலைக்கழகமும் எடுத்திராத மாணவர் நலன்சார் செயற்பாட்டினை யாழ். பல்கலைக்கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கண்டு பாராட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் எந்தவொரு மாணவரும் மதிய வேளையில் பசியுடன் கல்வி கற்காமல், இலவசமாக உணவினை பெற்றுக்கொள்ளக்கூடிய முறையில் இந்த சமுதாய சமையலறை செயற்படுகிறது.

இதில் மாணவர்களின் உணவுக்கான செலவு நாளொன்றில் 50,000ஐ கடந்துள்ள போதும், இச்செயற்பாடு இன்று வரை தொடர்கிறது.

இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்த விரிவுரையாளர்கள், சமுதாய சமையலறை திட்டத்துக்கென கூட்டங்களை ஒருங்கமைத்து முடிவுகளை எடுக்கும் வகையில் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்த குழுவொன்றை அமைத்து, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா செயற்பட்டு வரும் விதம் பாராட்டுக்குரியது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கலைப்பீட மாணவர்கள், இந்த செயற்பாட்டுக்காக துணை நிற்கும் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் இதற்காக காலை முதல் மதியம் வரை உழைத்து வரும் மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் போன்றோரும் பாராட்டப்பட வேண்டியவர்களே என்கிறார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More