18 கிராம் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் உயிர்கொல்லி போதைமாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்., ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24, 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கொழும்பிலிருந்து ஒருவர் இவற்றை வழங்கினார் என்று சந்தேகநபர்கள் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.
ஒரு கிராம் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளை 60 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாகவும், அதனை தாம் 85 ஆயிரம் ரூபா வீதம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கைதான இளைஞர்களில் ஒருவர் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர் என்றும் தெரியவந்துள்ளது.
5 கிராம் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தால் சாவுத்தண்டனை என்று அண்மையில் சட்டம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.