June 8, 2023 6:34 am

55 ரூபாவுக்கு முட்டையை பெற்றுக்கொள்ளலாம் 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படவும் விலை அதிகரிக்கப்படவும் வர்த்தக அமைச்சரின் நடவடிக்கையே காரணமாகும்.  

முட்டை உற்பத்தியை பாரிய விபாரிகளின் கைகளில் வைத்துக்கொள்வதற்கான சதித்திட்டமே இடம்பெற்று வருகின்றது. அத்துடன் கடைகளில் 55ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்துக்கு குறைந்த விலையில் முட்டை விநியோகத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு முட்டைக்கான உற்பத்தி செலவு 48ரூபாவாக இருக்கும் நிலையில் வர்த்தக அமைச்சர் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையாக 38ரூபா என தெரிவித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

இதற்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் சென்றிருந்தோம். அமைச்சரின் வர்த்தமானி அறிவிப்பு காரணமாக முட்டை உற்பத்தி செய்துவந்த சிறிய உற்பத்தியாளர்கள் இந்த தொழிலை கைவிட ஆரம்பித்தனர். 

அதன் காரணமாகவே சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாட்டில் 11 விவசாய மத்திய நிலையங்கள் இருந்தபோதும் அமைச்சரின் வர்த்தமானி அறிவிப்பை அடுத்து அது தற்போது 6ஆக குறைந்துள்ளது.

அதனால் நாட்டில் பாரியளவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என காண்பிப்பதற்கு அமைச்சரே திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருந்தார். 

இதனை கட்டுப்படுத்தவே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். முட்டை விலையை 50ரூபாவுக்கு குறைய விற்பனை செய்ய நுகர்வோர் அதிகாரசபையுடன் நாங்கள் கலந்துரையாடியிருந்தோம். 

ஆனால் இடைத்தரகர்களாக செயற்படும் கறுப்புக்கடை  வியாபாரிகள் வியாபாரிகளிடமிருந்து குறைந்த விலைக்கு முட்டையை பெற்றுக்கொண்டு 70, 80ரூபா வரை விற்பனை செய்துவந்தனர். 

இதனை கட்டுப்படுத்தவே பிரதான நகரங்களில் நாங்கள் லொறிகளில் 55ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். ஆனால் கடை வியாபாரிகளிடமிருந்து எங்களுக்கு பல முறைப்பாடுகள் வந்ததால், கடைகளுக்கே இதனை விநியோகிக்க தீர்மானிதோம்.

அதன் பிரகாரம் நாட்டில் இருக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு 53ரூபாவுக்கு முட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து, தற்போது விநியோகித்து வருகின்றோம். கடை உரிமையாளர்கள் அதனை 55ரூபாவுக்கு விற்பனை செய்யவேண்டும் என தெரிவித்திருக்கின்றோம். 

அல்லது வியாபாரிகள் வடமேல் மாகாணத்துக்கு வந்து முட்டை பெற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்களுக்கு 50ரூபாவுக்கு வழங்குவோம். அவர்கள் 55ரூபாவுக்கு விற்பனை செய்யலாம். அடுத்த மாதமாகும்போது 50ரூபாவுக்கு குறைவாக முட்டையை நுகர்வோருக்கு வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய தற்போது தீர்மானித்திருக்கின்றது. இது வர்த்தக அமைச்சரின் நீண்டகால எதிர்பார்ப்பாகவே இருந்தது. அதற்காகவே சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை அதிகரிப்பு ஏற்பட நடவடிக்கை எடுத்திருந்தார்.  

அரிசி விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் தங்களின் கைகளில் எடுத்திருப்பதுபோல் எதிர்காலத்தில் முட்டை உற்பத்தியையும் பாரிய விவசாயிகள் தங்களின் கைகளில் வைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். அமைச்சருக்கு நெருக்கமான ஒருசிலரே இதில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சரும் அதற்கு உடந்தையாக இருக்கின்றார் என்றார்.

(படப்பிடிப்பு, ஜே.சுஜீவகுமார்)

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்