October 4, 2023 1:21 pm

பொம்மை போல் என்னைப் பாவித்தார்கள்! – விக்கி சீற்றம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“தமிழ்க் கட்சிகள் சில என்னைப் பொம்மை போல் பாவித்து தாங்கள் நினைத்ததைச் செய்வதற்கு முயற்சித்தார்கள் போல் தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன்.”

– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்தார்.

யாழ்., நல்லூரில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அங்கு வந்திருந்து அதனை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்ட போதும் பல விடயங்கள் முரண்பாட்டைத் தோற்றுவித்தன.

ஐந்து கட்சிகளின் கூட்டணியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த போது இன்றைய கூட்டத்தில் எமக்குத் தெரியாமல் திடீரென புதிதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியை அழைத்து வந்திருந்தனர்.

ஐனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன். விடுதலைப்புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும், தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதையும் நாம் அறிய வேண்டும். அவர்களை ஆறாவது கட்சியாகக் கூட்டணிக்குள் இணைக்கும் முடிவை ரெலோ, புளொட் தரப்பினர் தன்னிச்சையாக எடுத்தார்கள். ஆனால், நாம் அதனை ஏற்றுக்கொண்டோம்.

கூட்டணியின் பெயராக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எனக் கட்சியின் பெயரைத் தெரிவித்து அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், கூட்டணியின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்திருந்தோம். எனினும், சின்னம் அல்லது கட்சி செயலாளர் பதவியையாவது எமது கட்சிக்குத் தருமாறு கோரினோம். அவர்கள் அதற்கு மறுத்ததால் நாம் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ‘மான்’ சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடும்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்