ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சின்போது தமிழ்க் கட்சிகளால் விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் அதனைப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
“13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றனர். இதனைக் கலந்துரையாடி செயற்படுத்த இருக்கிறோம். இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம்” என்று ரணில் குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் கடந்த 10 ஆம் திகதி தமிழ்க் கட்சித் தலைவர்கள் பேச்சு நடத்தினர். இதன்போது, அரசமைப்பிலுள்ள இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத அதிகாரப் பரவலாக்க விடயங்களை முழுமையாக ஒரு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்தினாலேயே மீண்டும் பேச்சுக்கு வருவோம் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தின் காணி, பொலிஸ் உட்பட பல விடயங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனையே நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் கோரியிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த மேலும் சில ஆண்டுகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். இதன் ஊடாக தமிழ்க் கட்சிகள் விதித்த ஒரு வார காலக்கெடுவை அவர் நிராகரித்துள்ளார்.
இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் குறிப்பாக சிங்கள மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வறுமை, பட்டினி, தொழிலின்மை என்பன தமிழ், சிங்கள மக்களுக்கு மட்டுப்படவில்லை. அனைவரும் கஷ்டப்படுகின்றனர். அனைவரும் இணைந்துதான் கரைசேர வேண்டும்.
வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் ஆராய வேண்டி இருக்கின்றன.
மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கட்சித் தலைவர்களையும் அழைத்து இரண்டாம் கட்டப் பேச்சு நடத்த இருக்கின்றோம். மலையகத் தமிழ் மக்களை எமது சமூகத்துக்குள் உள்வாங்கி ஏனைய மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரும் அவர்களை ஒதுக்க முடியாது. அதன் பின்னர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேச இருக்கின்றோம். முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்களையும் அழைத்துப் பேச வேண்டியுள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஓரங்கட்டப்பட்ட கிராமங்கள் உள்ளன. அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. குலபேதம், வறுமை காரணமாக ஒதுக்கப்படும் நிலை உள்ளது. கிறிஸ்தவ மக்களுக்கு தமது பாதுகாப்புத் தொடர்பில் சந்தேகம் உள்ளது. அவை குறித்து ஆராய சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்க இருக்கின்றோம்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இலங்கையர் என்ற தனித்துவத்தை உறுதிப்படுத்துவோம். இவை அனைத்தையும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம்” – என்றார்.



