இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக உத்தியோகத்தர்கள் நால்வர் இதுவரை இராஜினா செய்துள்ளனர். இதன் காரணமாக நிருவாக சபை உத்தியோகத்தர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு கோரம் இல்லாமல் போயுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் செயலாளர்நாயகம் இந்திக்க தேனுவர தனிப்பட்ட காரணங்களைக் காட்டி தனது இராஜினாமா கடிதத்தை சம்மேளனத் தலைவர் ஜே. ஸ்ரீ ரங்காவிடம் சமர்ப்பித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து உப தலைவர்களான சி. தீபிகா குமாரி மற்றும் சமன் தில்ஹான் நாகஹவத்த ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.
இது இவ்வாறிருக்க, நிதி சார்ந்த முக்கிய பொருளாளர் பதவியிலிருந்து டி சுதாகரும் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாகஇராஜினாமா கடிதத்தை சம்மேளனத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவ் வருடம் ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபை உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் தேர்தலில் தெரிவான ஸ்ரீ ரங்கா தரப்பைச் சேர்ந்த நால்வர் இராஜினாமா செய்துள்ளதை அடுத்து கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயற்பாடுகள் கேள்விக் குறியாகியுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக சபை உத்தியோகத்திர்களின் எண்ணிக்கை 11 ஆகும். ஆனால், உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தாலும், ஜனவரி 14ஆம் திகதி நடைபெற்ற நிருவாக சபை உத்தியோகத்தர்களுக்கான தேர்தலின்போது 8 பேர் தெரிவானதுடன் பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்க உறுப்பினர் இயல்பாக உள்வாங்கப்பட்டார். எனினும், 4 நிருவாக சபை உத்தியோகத்தர்கள் இராஜினாமா செய்துள்ளதால் நிருவாக சபைக் கூட்டத்தை நடத்துவதற்கு குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையான 6 உறுப்பினர்களுக்கான கோரம் இல்லாம் போயுள்ளது.
இதன் காரணமாக பொதுச் சபையைக் கூட்டி வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யவேண்டிய கட்டாயம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்திடம் முறையான செயல் திட்டம் இருப்பதாக சம்மேளனத்தின் தலைவர் ஜே. ஸ்ரீரங்கா கூறிவருகிறார். எனினும் பீபா தடை விதித்துள்ளதால் சர்வதேச மட்டத்தில் எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் மட்டப் போட்டிகளை நடத்துவதாக இருந்தாலும் தற்போது பொருளாளரும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதால் தேவையான நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.