December 11, 2023 3:19 am

மாவீரர் வார நினைவேந்தலை தடை செய்யக்கோரி பொலிஸாரால் வழக்கு தாக்கல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நடத்த தடைவிதிக்கக் கோரியே மல்லாகம் நீதிமன்றில் மானிப்பாய் பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை (17) மல்லாகம் நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நடைபெற்றது.

பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்த எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணிகள், இறந்த உறவினர்களை நினைவு கூறுவது எவ்விதத்திலும் பயங்கரவாத செயலாகாது. பொலிஸாரின் செயற்பாடு கார்த்திகை விளக்கீட்டையும் பயங்கரவாதமாக சித்தரிக்கும்.

பொலிஸாரின் கட்டளை வழங்கப்பட்டால் நவம்பர் 26ம் திகதி கார்த்திகை விளக்கீட்டை அனுஷ்டிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். கடந்த காலங்களில் இறந்தவர்களின் நினைவேந்தலை அரசாங்கங்கள் அனுமதித்திருந்தது.

மேலும் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி மானிப்பாய் பொலிஸாரின் தடைக் கோரிக்கையை நிராகரிக்குமாறு கோரினர்.

விசாரணைகளை அடுத்து விண்ணப்பம் தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. எதிர்மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்