December 11, 2023 3:39 am

பொருளாதார பாதிப்புக்கு ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும் | விமல் வீரவன்ச

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை குறிப்பிட்டு பொருளாதார பாதிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் இருந்து விடுபட வேண்டாம்.

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் மாத்திரமல்ல தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் கருத்து தெரிவிக்கிறார். சட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை குறிப்பிட்டுக் கொண்டு நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டாம்.

எழுதப்பட்டுள்ள சட்டங்கள் முழுமையாக செயற்படுத்தப்படுவதில்லை என்பதற்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிடுகிறேன். கிரிக்கெட் நிறைவேற்று குழுவை நீக்கி இடைக்காக குழுவை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்தார்.

அமைச்சரால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு தொடர்பில் ஆராய ஜனாதிபதி இடைக்கால குழுவை நியமித்தார். குழுவின் பரிந்துரையை தொடர்ந்து இனி வரும் காலங்களில் அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் இடைக்கால குழுக்களை நியமிக்க முடியாது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட ‘ரூபாவின் பெறுமதியை தளம்பல் நிலைக்கு முழுமைப்படுத்துங்கள் அப்போது தான் இந்தியா அடுத்தக்கட்ட கடனுதவியை வழங்கும் ‘ என்றார் .

இவ்விடயம் தொடர்பில் கோட்டபய ராஜபக்ஷ மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  இந்திரஜித் குமாரசுவாமி  ஆம் ‘ ஏக நல்லம் ‘ என்று குறிப்பிட்டார். இவ்விடயத்தை கோட்டபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை.குறைந்தபட்ச அளவேனும் இருந்திருந்தால் அவர் அதனை  பாராளுமன்றத்துக்கு அறிவித்திருப்பார். ஆனால் அறிவிக்கப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச பிணைமுறியங்களிடமிருந்து 13 பில்லியனுக்கும் அதிகமான கடன் பெற்றார். இதன் தாக்கம் பிற்பட்ட அரசாங்கத்துக்கு செல்வாக்கு செலுத்தியது. ஆகவே பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்களை போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்