செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மலைய தலைவர்கள் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே | அருட்தந்தை மா.சத்திவேல்

மலைய தலைவர்கள் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே | அருட்தந்தை மா.சத்திவேல்

2 minutes read

மலையககட்சி தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று புதன்கிழமை (11) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் இலங்கை-இந்திய இரு நாடுகளின் தலைவர்களின் உடன்படிக்கை (1987) யின் மூலம் இனப் பிரச்சனைக்கு தீர்வாக உருவான நாட்டின் அரசியல் யாப்பிற்குள் உள்வாங்கப்பட்ட மாகாண சபையின் அதிகாரங்களை கொடுக்க மறுக்கின்றார்கள்.

அத்தோடு ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடகிழக்கு யுத்தத்தோடு தொடர்புடைய விடயத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என சவால் விட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மலையக மக்களின் வாழ்வு பாதுகாப்பு அபிவிருத்தி விடயமாக ஆட்சிக்கு வரும் முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதோடு மலையக கட்சி தலைவர்களோடு சட்ட பாதுகாப்பற்ற உடன்படிக்கைகளை செய்துள்ளனர். அதனை மக்களிடம் கொண்டு சென்று வாக்கு கேட்க துடிப்பது மலையக கட்சிகளின் சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே அன்றி வேறில்லை.

சிங்கள பௌத்த பேரினவாத நச்சு தலைக்கேறிய ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் கடந்த காலத்தில் தமிழ் தலைவர்களோடு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் கொடுத்த வாக்குறுதிகளையும் மீறியது மட்டுமல்ல 1972 ,1978 யாப்பின் மூலம் தமிழர்களை மைய அரசியலில் இருந்தும் தூக்கி எறிந்தனர்.

அவர்களின் சுதந்திர இலங்கையில் சுதந்திரமாக தமிழர்களுக்கு எதிரான இனவாத தீயை வளர்த்து இன அழிப்பினை பன்முகப்படுத்தியதோடு இனப்படுகொலையை (2009) அரங்கேற்றிய பின்னரும் இனவாத தாகம் அடங்காது இன அழிப்பினை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவற்றிற்கு அங்கீகாரம் அளித்து அமைதி காக்கும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் மலையகம் சார் அரசியல் கட்சிகளோடு அரசியல் உடன்படிக்கை செய்கின்றார்கள் எனில் அது மலையக மக்களின் நன்மைக்காக அல்ல. அவர்களின் நிறைவேற்று அதிகார பதவி ஆசைக்காக மட்டுமே.

தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவோடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்கிரமசிங்க அவர்களோடும் தனித்தனியாக உடன்படிக்கையை செய்துள்ளமை ஊடகம் மூலம் அறிய கிடைத்தது. இவ்வாறே அவர்கள் வேரும் தரப்பினருடனும் உடன்படிக்கைகளை செய்துள்ளனர்.

அவற்றில் மலையக தமிழர்களுக்கு எதிராக நேரடியாகவோ மறைமுகவோ ஏதும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின் அது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். அவற்றின் உள்ளடக்கம் எமக்கு தெரியாது. இந்த உடன்படிக்கைகள் அவரவர் நலன் கருதியும் அவர் சார் சமூக நலன்கருதியும் செய்யப்படுகின்றன என்பதே மட்டும் உண்மை.

மலையக மக்கள் சார்பாக தயாரிக்கப்பட்ட உடன்படிக்கையெனில் உடன்படிக்கையின் உள்ளடக்கம் மலையக சமூகத்தோடு உரையாடப்பட்டதா? அல்லது தங்கள் கட்சி அடிமட்ட தொண்டர்களோடு உறவாடி அவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறப்பட்டதா? இது தொடர்பாக எந்த தகவல்களும் இல்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு மலையக மக்களின் வாக்கு வேண்டும்.

வேட்பாளர்களோடு செய்து கொள்ளும் உடன்படிக்கை கைச்சாத்திடும் முன் வாக்காளர்களோடு கலந்து ஆலோசிக்க தேவையில்லை. அங்கீகாரம் பெற தேவையில்லை எனில் அது 1948க்கு முற்பட்ட பெரிய கங்காணி நினைப்பு எனலாம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது உடன்படிக்கையினை மக்கள் முன் சொல்லாதிருக்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணி தான் சஜித்தோடு செய்து கொண்ட உடன்படிக்கையினை “மலையக சாசன பிரகடன நிகழ்வு” என நாளை 12ஆம் திகதி வியாழக்கிழமை நிகழ்வு ஒன்று மூலம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான ஆயத்தங்களை செய்துள்ளது.

அந்நிகழ்வுக்கான அழைப்புகளில் “இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கை இனத்தினர்” என மலையக தமிழரை விழித்திருப்பது எந்த அளவுக்கு நியாயமானது? “சமீபத்திய” என இவர்கள் குறிப்பிடுவதும் “இந்திய வம்சாவளி” என குறிப்பிடுவதும் யாருக்காக! இது ஒட்டுமொத்த மலையக தமிழர்களையும் அவமானப்படுத்துவதாகவும் அவர்களுக்கான அரசியலை அசிங்கப்படுத்துவதாகவுமே உள்ளது.

இத்தகையவர்கள் மலைய மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து நிலத்திற்கான உரிமைகள் எவ்வகையில் பெற்றுக் கொடுத்த போகின்றனர். பேரினவாத கட்சிகளின் கைக்கூலிகளாகவும் இந்திய அடிவருடிகளாக செயல்படுவதன் அடையாளமே இது.

மலையக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக தான் விரும்பும் வேட்பாளர்களுக்கு மலையக தமிழர்களை அடகு வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்

மலையக தமிழர்கள் 200 வருட வரலாற்றை இந்நாட்டில் தமதாக்கி தனித்துவ தேசிய இனமாக வளர்ந்து வருகின்றார்கள். இவர்களை அசிங்கப்படுத்தி அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாட்டின் பேரினவாத அரசியல் கட்சிகள் மலையக தமிழர்களின் அடையாளத்தை அழிப்பதில் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மலையக மக்களை நில உரிமை அற்றவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களாவுமாக்கி மலையக மண்ணிலிருந்து நாளும் அவர்கள் அகன்று செல்வதற்கான பின்புலத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் அவர்கள் பெயரில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் ஒட்டுமொத்த மலைய சமூகமாக செய்து கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக மலையக மக்களுக்காக இயங்குகின்ற பிரதான கட்சிகள் மலையக மக்களின் நலன் கருதி தமக்கிடையில் புரிந்துணர்வை ஒப்பந்தத்தை செய்து கொண்டால் மட்டுமே எதிர்காலம் சிறக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More