செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். மாநகர சபை தமிழரசு வசம்: சகலருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்!

யாழ். மாநகர சபை தமிழரசு வசம்: சகலருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்!

2 minutes read

“யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் மாநகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழரசுக் கட்சியே பெற்றுக்கொண்டது. இதனடிப்படையில் மேயர் மற்றும் துணை மேயரை நிறுத்தி வெற்றியையும் பெற்றுள்ளோம். .

இதற்கு ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

இந்த உள்ளூராட்சி சபைகளில் எந்தத் தரப்பினர் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்களோ அவர்களே ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே நாங்கள் கூறியிருந்தோம்.

அந்தக் கோட்பாட்டுக்கு அமைவாக யாழ். மாநகரத்தில் நாங்கள் செயற்பட்டிருக்கின்றோம். இந்தக் கோட்பாட்டுக்கு வேறு சில கட்சிகளும் இணங்கியிருந்தன. எங்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் அவர்கள் அதனைத் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்தக் கோட்பாட்டை அவர்கள் தற்போது மீறியுள்ளனர்.” – என்றார்.

மாநகர மேயராக மதிவதனி!
துணை மேயராக தயாளன்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. அந்தக் கட்சியின் உறுப்பினர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையின் மேயரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

யாழ். மாநகர சபை 45 உறுப்பினர்களைக் கொண்ட சபையாகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஓர் ஆசனங்களையும் பெற்றுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மேயர் பதவிக்குத் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜாவின் பெயரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சார்பில் மேயர் பதவிக்குக் கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மேயர் பதவிக்கு எவரும் பரிந்துரைக்கப்படவில்லை.

மேயர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. அதன்போது, தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருமதி. மதிவதனி விவேகானந்தராஜாவுக்கு வாக்களித்தனர். அதன்மூலம் அவர் 19 வாக்குகளைப் பெற்று மேயராகத் தெரிவானார்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சார்பில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட கனகையா ஶ்ரீ கிருஷ்ணா 16 வாக்குகளை மாத்திரம் பெற்றார். அவருக்கு ஆதரவாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அதேவேளை, துணை மேயருக்கான வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இம்மானுவேல் தயாளன் 19 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார்.

மேயர், துணை மேயர் தெரிவுகளுக்கான பகிரங்க வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியினர் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.