செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மனிதப் புதைகுழிகள் தொடர்பில் டக்ளஸிடமும் விசாரியுங்கள்! – சிறீதரன் வலியுறுத்து

மனிதப் புதைகுழிகள் தொடர்பில் டக்ளஸிடமும் விசாரியுங்கள்! – சிறீதரன் வலியுறுத்து

2 minutes read

“1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளிலிருந்து இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எண்பதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும், மண்டைதீவு, செம்பாட்டுத் தோட்டம் – புனித தோமையார் தேவாலய வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியுடன் தொடர்புடைய கொலைகள் பற்றியும் இலங்கை இராணுவத்தின் துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை விசாரணை செய்ய வெண்டும்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவராக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும் போதே சிறீதரன் எம்.பி. இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்த விடயம் சார்ந்து, வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பித்ததோடு, அதனை மேற்கோள் காட்டி அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

“கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் காரணமாக காணமல் ஆக்கப்பட்டவர்களும், படுகொலை செய்யப்பட்டவர்களும் மனித எலும்புக்கூடுகளாகவும், எச்சங்களாகவும் புதைகுழிகளிலிருந்து மீட்கப்படுவதை தாங்களும் அறிவீர்கள். அந்தவகையில் மண்டைதீவு, செம்பாட்டுத் தோட்டம் – புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழமுனை, கொக்குத்தொடுவாய், செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளின் வரிசையில் தற்போது யாழ்ப்பாணம், அரியாலை – சித்துப்பாத்தி பகுதியிலிருந்தும் மனித என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இவை முழுமையாக தமிழ் மக்களுடையவைதான் என்பது தெளிவாகின்றது.

குறிப்பாக செம்மணிப் புதைகுழிக்கு அருகிலுள்ள அரியாலை – சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது மீட்கப்பட்ட கைக்குழந்தைகள், பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியரது என்புக்கூடுகள் எந்த ஆடைகளுமற்று அடித்து நொறுக்கி, சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்களின் என்புக்கூடுகள் என்பதையே நீதித்துறையும், தடயவியல் நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் மனிதப் புதைகுழிகள் மலிந்த இடமாகவே வடக்கு, கிழக்கு பகுதிகள் உள்ளன என்பதை நீதி அமைச்சர் அறிவாரா?

தற்போது யாழ்ப்பாணம், அரியாலை – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தோண்டி எடுக்கப்படும் மனித என்புக்கூடுகள் தொடர்பில் பக்கச்சார்பில்லாத – நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுமா? இதற்கு முன்னர் நடைபெற்ற முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதா என்பதையும், அது சார்ந்து நீதித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா?

மண்டைதீவு, செம்பாட்டுத்தோட்டம் – புனித தோமையார் தேவாலயப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியில், 1990 களில் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களுமே புதைக்கப்பட்டார்கள் என வடக்கு, கிழக்கு மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. இது சார்ந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை நீதி அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா?

3 ஆம் வட்டாரம், மண்டைதீவைச் சேர்ந்த திருமதி.சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் 2025.04.30 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதன் பிரதியை எனக்கும் கிடைக்கச் செய்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகளோடு காத்திருக்கும் இந்தத் தாய்மாருக்கு நீதி அமைச்சரின் பதில் என்ன?

திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலை எப்போது வெளிவரும் என்பதை அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிக்க வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.