செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சங்குக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்!

சங்குக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்!

1 minutes read

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் ஒருவர், கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவரிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அறிவுறுத்தலுக்கு மாறாகச் செயற்பட்ட கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் மார்க்கண்டு குமாருக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் நா.இரட்ணலிங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், “இன்று நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவின் போது கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் எதிர்த்து வாக்களித்துள்ளீர்கள். ஆகையால் உடனடியாக அமுலுக்கு வரும்படியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீங்கள் இடைநிறுத்தப்படுகின்றீர்கள்.

தங்களது இந்த நடவடிக்கை சம்பந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்துக்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள்.” – என்றுள்ளது.

இன்று இடம்பெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவின்போது தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சண்முகநாதன் ஜெயந்தனும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் தர்மலிங்கம் சுப்பிரமணியம் நந்தகுமாரும் முன்மொழியப்பட்டனர்.

இதன்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் மார்க்கண்டு குமார், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தவிசாளர் வேட்பாளரான சண்முகநாதன் ஜெயந்தனுக்கு வாக்களித்திருந்தார்.

பின்னர் அவர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் சென்று தான் தவறுதலாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்து விட்டதாகவும், தனது வாக்கை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினருக்கு மாற்றுமாறும் கோரினார். எனினும், குறித்த வாக்கு பதியப்பட்டுவிட்டதாகவும், அதனை மாற்ற முடியாது எனவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவநந்தினி பாபு தெரிவித்தார்.

இதேவேளை, உப தவிசாளர் தெரிவின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக மார்க்கண்டு குமார் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.