செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 40 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 40 | பத்மநாபன் மகாலிங்கம்

17 minutes read

1945 ஆம் ஆண்டு உலகமகாயுத்தத்தின் போது அமெரிக்கா, யப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாக்கி என்ற இடங்களில் வீசிய அணுக்குண்டுகளாலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தாக்குதலாலும் யப்பான் மிகப்பெரிய அழிவை சந்தித்திருந்தது. ஆனாலும் யப்பான் நாட்டு மக்களின் கடின உழைப்பாலும் தலைவர்களின் புத்திசாலித்தனமான அணுகு முறைகளாலும் வளர்ந்து அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் அடுத்த படியாக மூன்றாவது பொருளாதார சக்தியாக வளர்ச்சியடைந்தது. யப்பான் தேசம் சாம்பல் மேட்டிலிருந்து மீண்டெழுந்த அதிசயம் இது.

யப்பான் நாட்டு மக்கள் மனதிற்குள் கவலை இருந்த போதும், அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணி, அமெரிக்காவின் ஆசியா உதவித்திட்டத்தை (US aid Asia) முழுமையாக பயன்படுத்தி முன்னேறியது. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்குமிடையே இருந்த பனிப்போரின் (Coldwar) காரணமாக, யப்பான் சோவியத் யூனியன் பக்கம் ஈர்க்கப்படுவதை தடுப்பதற்காகவும், யப்பன் மக்கள் ஏழ்மையினால் கொம்யூனிஸத்தின் பக்கம் போவதைத் தடுப்பதற்காகவும் அமெரிக்கா யப்பானுக்கு பொருளாதார வளர்ச்சிக்கான உதவிகளை செய்தது.

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் அமெரிக்க—சோவியத் யூனியன் பனிப்போர் நிறைவு பெற்ற காலம் வரை (1945—1991) யப்பானில் ஏற்பட்ட பொருளாதார அதிசயத்தை நான்கு படிமுறைகளாக பிரிக்கலாம். மீண்டு வருகை (1946—1954); உயர் அபிவிருத்தி (1955—1972); நிலையான அபிவிருத்தி (1972—1992); குறைந்த அபிவிருத்தி (1992—2017)

மீசாலையிலிருந்து கடல் வழியாக வந்து, காட்டில் தங்கி, காடு வெட்டி, கழனியாக்கி, கிராமத்தை உருவாக்கி, வளர்த்தெடுத்த மக்களின் பரம்பரையில் வந்த பெரியபரந்தன் மக்கள் தமக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பை எண்ணி கவலைப்பட்டாலும் துவண்டு விடவில்லை. பீனிக்ஸ் (Phoenix) பறவைகள் போல மீண்டு எழ கடுமையாக உழைத்தார்கள்.

ஆம்பிளையள் குழுக்களாக பிரிந்து கிணறுகளையும் பூவல்களையும் இறைக்கத் தொடங்கினார்கள். ஒரு பெரிய ஐந்து மூலைக்கடகத்தில் நான்கு மூலைகளில் கயிற்றைக்கட்டி நாலு கயிறுகளையும் கயிற்றுக்கொருவர் பிடித்துக் கொள்ள நீந்தக் கூடிய ஒருவன் இறங்கி கடகத்தில் நீரை கோலிவிட, நாலுபேரும் மேலே இழுத்தார்கள்.

ஓரளவு உயரம் வந்ததும் ஒரு பக்கம் நின்ற இரண்டு பேர் தமது கயிற்றை சற்று தளர்த்த மற்ற இருவரும் தமது பக்கம் கடகத்தை இழுத்தார்கள். நீருடன் கடகம் ஒரு பக்கம் வந்ததும் மேலே நின்ற இன்னொருவன் கடகத்தை பிடித்து, சரித்து நீரை வெளியே ஊற்றினான். கடகத்தின் மற்ற மூலை, நாலு மூலைக்கும் நடுவாக கடகத்தின் அடியில் இருந்தது.

இவ்வாறு ஆறு பேர் சேர்ந்து ஒரு கிணற்றிலிருந்து நீரை இறைத்தார்கள். இறைக்கும் போது களைப்பு தெரியாதிருக்க கிராமியப் பாடல்களைப் பாடினார்கள். இவ்வாறு எல்லாரது கிணறுகளும் இறைத்து முடிக்கப்பட்டது.

பின்னர் பூவரச மரங்களின் கிளைகளை இரண்டு பேர் மரத்தில் ஏறி வெட்டி விழுத்த, கீழே நின்றவர்கள் பூவரசம் கிளைகளை கட்டாக கட்டி வயல்களுக்கு கொண்டு சென்று பரவினார்கள். சிலர் காட்டிலே சருகுகளை ஏத்தி வயல்களில் பறித்து பரவினார்கள். இன்னும் சிலர் மில்லிலிருந்து உமியை ஏத்தி வந்து வயல்களில் கொட்டினார்கள். மற்றும் சிலர் காட்டுக்குள் சென்று அலம்பல்களை வெட்ட, மற்றவர்கள் அலம்பல்களை ஏற்றிக் கொண்டு வந்து பறித்தார்கள். வேறு சிலர் அலம்பலால் தட்டிகளைக் கட்டத் தொடங்கினார்கள்.

தேனீக்களை போல ஆண்கள் ஓடி ஓடி உழைத்தார்கள். எருதுகள் யார் யாருக்கு தப்பி நின்றனவோ அவர்கள் மற்றவர்களுக்கும் ஏற்றிக் கொடுத்தார்கள். சிறுவர்களான சுந்தரமும் சுப்பையாவும் உற்சாகமாக எல்லா விவசாயிகளுக்கும் உதவி செய்தார்கள்.

கட்டிய தட்டிகளால் வயல்களில் ‘பட்டி’ களை அமைத்தபின்னர், எல்லாருமாக தீவுக்கு போய் தப்பி நின்ற ஆடுகளையும் மாடுகளையும் எருமைகளையும் கலைத்துக்கொண்டு வந்தார்கள். மாடுகள் ‘காலையில்’ அடைந்து பழகியவை என்பதால், தாங்கள் வழமையாக அடையும் ‘காலையில்’ போய் அடைந்தன, மாடுகளை பிரித்தெடுக்கும் தேவை ஏற்படவில்லை. பின்னர் விவசாயிகள் அவற்றை சாய்ச்சுக் கொண்டு போய் தமது ‘பட்டி’ களில் அடைத்தனர்.

சிலருக்கு மூண்டிலொரு பங்கு மாடுகள் தப்பியிருந்தன. மற்றும் சிலருக்கு அதைவிட குறைவாகவே தப்பியிருந்தன. கூடுதலான எருமைகளையும் மாடுகளையும் வைத்திருந்த பேரம்பலத்தாருக்கு எல்லாரையும் விட இழப்பு அதிகமாகவே இருந்தது.

முரசுமோட்டையில் ஒரு விவசாயியிடம் வேலை செய்த ‘மந்திரம்’ என்ற கிழவர் வேலை தேடி பூனகரி நோக்கி சென்றவர், தண்ணீர் குடிக்க கணபதியாரிடம் வந்தார். கணபதியார் அவரது நிலைமையைப் பார்த்து, “நீ, வயல் வேலை எல்லாம் செய்வாய் என்றால் என்னுடன் நிண்டு வேலை செய்கிறாயா?” என்று கேட்க மந்திரமும் சந்தோசமாக சம்மதித்தார்.

கடல் தண்ணீர் உட்புகாத கிணறுகள் உவராக மாறவில்லை. பேரம்பலத்தார், வல்லிபுரத்தார் ஆகியோரின் கிணறுகளுக்குள் கடல் நீர் போகவில்லை. பாடசாலைக் கிணற்றில் கடல்நீர் போய் விட்டது. பூனகரி வீதிக்கு தெற்கு பக்கமாக இருந்த பூவல்களுக்குள் வெள்ளம் வந்தாலும் கடல்நீர் போகவில்லை. பூனகரி வீதி அரணாக நின்று கடல் நீரை தடுத்து விட்டது.

பூவல்களில் இருந்த தண்ணீரை குளிக்கவும் உடுப்பு துவைக்கவும் பயன்படுத்திய பெண்கள், குடிக்க, சமைக்க தேவையான தண்ணீரை கடல்நீர் போகாத கிணறுகளில் அள்ள வேண்டி வந்தது. காலை நேரத்தில் பெண்கள் இடுப்பில் ஒரு சருவக்குடத்தையும் தலையில் ஒரு சருவக்குடத்தையும் வைத்துக் கொண்டு வரிசையாக தண்ணீர் அள்ளிக் கொண்டு வரும் காட்சி பெரிய பரந்தன் மக்களை கவலை கொள்ள வைத்தது.

சனிக்கிழமை அதிகாலை நாலு வண்டில்கள் பெரிய பரந்தனில் இருந்து அரிசி மூட்டைகளுடன் புறப்பட்டன. இரண்டு வண்டில்கள் கணபதியார் வீட்டிலிருந்தும் ஏனைய இரண்டு வண்டில்களும் சின்னையா கடையிலிருந்தும் வெளிக்கிட்டு அணிவகுத்து சென்றன.

மீனாட்சியின் வண்டிலை மந்திரம் ஓட்ட, இன்னொரு வண்டிலை அந்த பெண்ணின் மகன் ஓட்ட, மற்ற வண்டில்களை அந்த பெண்களின் கணவன்மார்களே ஓட்டி வந்தார்கள். ஏழு பெண்கள் சந்தையில் எப்படி அரிசியை விக்கப்போறம் என்று ஒருவித பதட்டத்துடன் கிளிநொச்சியில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தை அடைந்தார்கள்.

முதல் முறையாக பெண்கள் வியாபாரத்திற்கு வந்தபடியால் வண்டிலை ஓட்டி வந்தவர்கள், அவர்களுக்கு அரிசி மூட்டைகளை இறக்கி கொடுத்து, ஒழுங்குபடுத்திய பின்னரே எருதுகளை அவிட்டு மேய விட சென்றார்கள். அவர்கள் நாலு பேரும் எருதுகளை அவிட்டு றெயில்வே றோட்டுக்கரையிலை மேயக் கட்டி விட்டு, மரநிழலில் ஆறியிருந்தனர்.

சந்தையில் கட்டிடங்கள் வராத காலமது. கிழக்கு மேற்காக இரண்டு நீளக் கொட்டில்களும் ஒரு கரையில் சிறிய கடைக் கொட்டில்கள் மூன்றும் இருந்தன.

ஒரு நீளக் கொட்டிலின் அரைவாசியில் மரக்கறி வியாபாரம் நடந்தது. வரி வசூலிப்பாளர் அரிசி விற்க சென்ற பெண்களை மற்ற அரைவாசியில் இருந்து வியாபாரம் செய்ய அனுமதித்தார்.

மற்ற நீளக்கொட்டிலில் ஒரு பகுதியில் மீன் வியாபாரமும், சற்று இடம் விட்டு ஒரு பகுதியில் இறைச்சி வியாபாரமும் நடைபெற்றன. எல்லோரிடமும் ஒரு சிறிய தொகை வரியாக அறவிடப்பட்டது.

பெண்கள் ஒவ்வொருவரும் இருந்து வியாபாரம் செய்ய இருக்கை பலகைகளையும் கொண்டு வந்திருந்தனர். அவர்களது இருக்கைகளுக்கு முன்னால் அரிசி சாக்குகளை நிமிர்த்தி வைத்து சாக்குகளை அரிசியுடன் விரித்து வைத்தனர். ஒவ்வொரு பித்தளைக் கொத்துகளை அரிசியின் மேல் வைத்திருந்தனர். சிலர் குத்தரிசியுடன் பச்சை அரிசியையும் கொண்டு வந்திருந்தனர். ஒரு பெண் கறுப்பன் நெல் அரிசியுடனும், மற்ற ஆறு பேரும் பச்சைப் பெருமாள் நெல்லை குற்றிய அரிசியுடனும் காத்திருந்தனர்.

மரக்கறி வாங்க வந்தவர்களும் மீன், இறைச்சி வாங்க வந்தவர்களும் பெரிய பரந்தன் பெண்களின் அரிசியை திரும்பி திரும்பி பார்த்தனர். அப்போது சின்னப்பிள்ளை “என்ன தம்பி பாக்கிறீங்கள், இது பெரிய பரந்தன் பொம்பிளையள் பக்குவமாக அவிச்சு, முறுகாமல் காய வைச்சு, குத்திய அரிசி. முத்துப்போல இருக்கும், மனுசிமாரிட்டை கொண்டு போய் குடுங்கோ. பிறகு ஒவ்வொரு கிழமையும் வேண்டி வரச்சொல்லி ஆய்க்கினைப் படுத்துவாளவை.” என்று சத்தமாக கூறினா.

சின்னப்பிள்ளை இவ்வாறு சத்தமாக சொல்ல மீனாட்சி “மச்சாள், சும்மா இருங்கோ. தேவையானவை வாங்குவினம் தானே.” என்றா. ஆனால் அவ சத்தமாக சொல்லியது கேட்டு சிரித்தவர்கள் ஒவ்வொருவராக வந்து, அரிசி உண்மையாகவே முத்து போல இருப்பதைக் கண்டு அவர்களிடம் அரிசியை வாங்கத் தொடங்கினார்கள்.

பெண்கள் எதிர்பாராத விதமாய் அரிசிகள் எல்லாம் விலைப்பட்டுவிட்டன. பக்கத்திலை இருக்கிற ‘கோழிப்பண்ணை’ என்று முதலில் அழைக்கப்பட்ட கனகபுரம் கிராமத்து இளைஞர்கள் தாங்கள் பயிரிட்ட காய் கறிகளை கொண்டு வந்து வித்து விட்டு, இவர்களிடம் அரிசியை வாங்கிச் சென்றார்கள். எஞ்சியிருந்த சிறிதளவு அரிசியையும் சந்தைக்கு அருகே சாப்பாட்டுக் கடை வைத்திருந்த ஒருவர் வாங்கிக் கொண்டார்.

பெண்கள் முகத்தில் அளவு கடந்த சந்தோசம். தொடர்ந்து அரிசியை விக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தேவையான மரக்கறிகளை வாங்கிக் கொண்டு, மத்தியானம் ஒரு மணிக்கு சாப்பாட்டு நேரத்திற்கு பெண்கள் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள்.

1959 ஆண்டு தைமாதம் மகாலிங்கம் தனது ஒரே மகளையும், படிப்பதற்காக கொட்டடி நமசிவாய வித்தியாசாலையில் சேர்த்து விட்டார். கமலா படிப்பு முடிந்து யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற வைத்தியரான சிற்றம்பலம் டொக்டரின் டிஸ்பென்சரியில் (Dispensary) வேலை செய்ய, இங்கிலிஸ் பாடத்தில் திறமையுள்ள தவம், பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து ரியூசன் (Tution) கொடுத்தா. மணியை படிப்பிக்கும் பொறுப்பை இருவரும் ஏற்றார்கள்.

மகாலிங்கம் விதானை வேலை கிடைத்த காலம் தொடக்கம் தனது நிர்வாக எல்லைக்குள் இருந்த எல்லா கோவில்களின் அபிவிருத்திக்கு தன்னாலான உதவிகளைச் செய்வது வழக்கம். 1959 ஆம் ஆண்டு உருத்திரபுரம் சிவன்கொவிலின் பரிபாலனசபையில் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயத்தின் அதிபர் திரு ச. அம்பிகைபாகன் செயலாளராக இருந்த போது கிராம விதானை என்ற படியால் மகாலிங்கம் ஒரு பரிபாலன சபை உறுப்பினராக இருந்தார்.

உருத்திரபுரம் சிவன் கோயில்

கோவில் ஐயருக்கு குளக்கரையில் ஒரு பெரிய மண்வீடு கட்டி, கிடுகுகளால் வேய்ந்து கொடுத்திருந்தார்கள். வீட்டைக் சுற்றி அலம்பல் வேலி அமைத்து கொடுத்திருந்தார்கள். ஐயர் குடும்பத்துடன் அந்த வீட்டிலிருந்து பூசை செய்து வந்தார்.

உருத்திரபுரம் சிவன் கோயிலுக்கு அருகேயுள்ள குளம்

வேலாயுதசுவாமி குளக்கரையில் ஒரு பிள்ளையார் கோவிலைக்கட்டி அதற்கு பூசை செய்து வந்தார். கோவிலுக்கு அருகில் ஒரு கொட்டிலைப் போட்டு அதில் வசித்து வந்தார். சின்னத்துரை என்னும் பெயருடைய தொண்டர் அவருக்கு உதவியாக அங்கு அவருடன் தங்கியிருந்தார்.

குளத்திற்கு அருகேயிருந்த ஐயரின் வீட்டையும் வேலாயுதசுவாமியின் கோவிலையும் ஒரு வேலி பிரித்தது. ஐயரும் வேலாயுதசுவாமியும் பெரிதாக பேச்சு வார்த்தை இல்லை. பிள்ளையார் இருவரையும் ஒற்றுமைப்படுத்த திருவுளம் கொண்டாரோ தெரியாது, ஒரு நாள் இரவு யானைகள் கோவில் வளாகத்திற்குள் புகுந்து விட்டன. ஐயர் மனைவி பிள்ளைகளுடன் வேலியை பிரித்துக் கொண்டு வேலாயுதசுவாமியின் பிள்ளையார் கோவிலில் தஞ்சமடைந்தார். அன்று தொடக்கம் இருவருக்குமிடையே நல்லிணக்கம் தோன்றியது.

ஒரு முறை ஐயர், செயலாளரான அம்பிகைபாகன் வந்த போது “ஐயா, எனக்கு சம்பளம் ஒழுங்காய் கிடைக்கிறேல்லை. எனக்கு சம்பளத்தை மாதாமாதம் பெற ஒழுங்கு செய்து தாருங்கோ.” என்று கேட்டுக் கொண்டார். அம்பிகைபாகன் ஐயரை மகாலிங்கம் வீட்டிற்கு சைக்கிளில் வரச்சொல்லி விட்டு, தான் காரில் வந்து கணபதியார் வீட்டில் காத்திருந்தார்.

ஐயரும் வந்து சேர, மகாலிங்கமும் தியாகர்வயலிலிருந்து வந்து சேர்ந்தார். அம்பிகைபாகன் ஐயருக்கு அந்த மாத சம்பளத்தைக் கொடுத்து விட்டு, மகாலிங்கத்திடம் “விதானையார் நான் மாதாமாதம் யாழ்ப்பாணத்தில் சேரும் காசில் ஐயரின் சம்பளத்தை உமக்கு அனுப்பி விடுவேன். அவரிடம் ஒழுங்காய் சேர்ப்பிப்பது உமது பொறுப்பு.” என்று கேட்டுக் கொண்டார். ஐயரும் தானே வந்து வாங்கிச் செல்வதாகக் கூறி விடை பெற்றார். அன்றிலிருந்து அம்பிகைபாகன் அடிக்கடி விதானையார் வீட்டிற்கு வருவது வழக்கமாகி விட்டது.

கணபதியாரின் தலைவாசலுக்கு வைத்தீஸ்வரா அதிபர் அம்பிகைபாகன், சாவகச்சேரி எம்பி (அப்போது கிளிநொச்சியும் சாவகச்சேரி தொகுதியில் அடங்கியிருந்தது) குமாரசாமி,      டீ. ஆர் .ஓ. முருகேசம்பிள்ளை ஆகியோர் விதானையாரை சந்திக்க அடிக்கடி வந்து போனார்கள்.

ஒரு முறை மகாலிங்கத்தை சந்திக்க அம்பிகைபாகன் வந்திருந்த போது நாதனையும் நாபனையும் பார்த்து விட்டு “பொடியள் எங்கை படிக்கிறாங்கள்?” என்று கேட்டார். மகாலிங்கம் “கொட்டடியில் பெரியாச்சி வீட்டில் தங்கி நின்று நமசிவாய வித்தியாசாலையில் படிக்கிறாங்கள்” என்றார். “பார்த்தால் படிப்பாங்கள் போல இருக்குது. நீர் அடுத்த வருஷம் வைத்தீஸ்வராவில் கொண்டு வந்து சேருமன். இந்த வருஷம் ‘அப்பிளிக்கேஷன்’ (application) போட்டால் வருஷ கடைசியிலை ஒரு அனுமதிப்பரீட்சை (admission test) வைப்பம். பாஸ் பண்ணினாங்கள் என்றால் நாங்கள் சேர்ப்பம்.” என்றார்.

அனுமதிப்பரீட்சையில் பொடியங்கள் பாஸ் பண்ண, மகாலிங்கம் 1960 ஆம் ஆண்டு தை மாதம் நாதனை பிறெப் எஸ்.எஸ்.சியிலும் (prep S.S.C – ஒன்பதாம் வகுப்பை அப்பிடி தான் அழைத்தார்கள். Prep— prepare something) நாபனை ஏழாம் வகுப்பிலும் கொண்டு போய் வைத்தீஸ்வராவில் சேர்த்து விட்டார்.

பரமர் மட்டுமல்ல, பாஸ்கரன் ரெயிலரும் கட்டாடியாரும் பொடியங்களின் பாடசாலை வாழ்க்கையை மறக்க முடியாமல் செய்து விட்டார்கள். பராமரின் தலைமயிர் வெட்டு யாழ்ப்பாண நாகரீகத்திற்கு ஏற்றதாயில்லை. ரெயிலர் துணியை வீணாக்காமல் விசுவாசமாக தைத்திருந்தார். கட்டாடியார் விதானையாரின் பொடியங்களுக்கென உடுப்புகளுக்கு விஷேசமாக வெள்ளாவி போட்டு, வஞ்சகமின்றி கஞ்சி போட்டு காய வைத்து, மினுக்கி (iron பண்ணல்) இருந்தார்.

கட்டாடியாரின் வெள்ளாவியினால் நீலக்காற்சட்டைகள் நிறம் மங்கி (fade), வெளிறி இருந்தன. கஞ்சி போட்டு அயன்பண்ணியதால் மடிப்புகள் விறைப்பாக (stiff) இருந்தன. நாபன் ஏழாம் வகுப்பிற்குப் போய் பின் வரிசையில் இருந்து கொண்டான். இடைவேளை வரை எல்லாம் சுமுகமாக போனது. இடைவேளையின் போது பொடியன்கள் புதிதாக சேர்ந்த நாபனை சூழ்ந்து கொண்டார்கள்.

ஒருவன் தலைமயிரை தடவி பார்த்து “சட்டியை கவிழ்த்த மாதிரி வடிவாயிருக்குது” என்றான்.  இன்னொருவன் விறைப்பாக முன்னுக்கு தள்ளி கொண்டு இருந்த கால்சட்டை மடிப்பை தடவி விட்டு “ஐயோ, வெட்டி விட்டது” என்று அலறினான். வழக்கமாக சேர்ட்டை வெளியில் விட்டு பழகியிருந்த நாபனிடம் கமலா “இஞ்சை பார், வைத்தீஸ்வரா நான் படிச்ச பள்ளிக்கூடம். மாஸ்டர்மாருக்கும் ரீச்சர்மாருக்கும் நீ, என்ரை அண்ணையின்ரை மகன் எண்டு தெரிஞ்சிருக்கும். சேர்ட்டை காற்சட்டைக்குள் விட்டு (in பண்ணி) ஸ்மார்ட்டாய் (smart) போ. இல்லாட்டில் எனக்கு தான் வெக்கம்” என்று சொன்னதால் நாபன் சேர்ட்டை in பண்ணி கொண்டு போனான்.

நீளம் கூடியதால் சிறிதளவு சேர்ட்டின் நுனி காற்சட்டைக்கு கீழாக தெரிந்ததை ஒருவன் கண்டு விட்டு, அதனை பிடித்து இழுத்தான். இழுத்தபடி “மச்சான், சேர்ட் இவ்வளவு தூரத்திற்கு மறைக்குது தானே, பிறகு நீ ஏன் காற்சட்டையையும் போடுறாய்” என்றான். நாபன் கௌரவர்கள் படையினால் சூழப்பட்ட அபிமன்யு போல செய்வதறியாது திகைத்து நின்றான்.

(இது 1960 ஆம் ஆண்டு நடந்ததால் நாபன் தவித்து தான் போனான். இன்னும் அறுபது ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டாக இருந்திருந்தால், வெளிறி (fade), முழம் காலுக்கு கீழே நீண்ட காற்சட்டை நாகரிகமாக கருதப்பட்டிருக்கும். காதாவடியிலிருந்து ஒரு அங்குல உயரம் வரை கட்டையாக வெட்டப்பட்ட தலைமயிரைக் கண்டு நாபன் நாகரிகம் மிக்கவனாக மதிக்கப்பட்டிருப்பான்.)

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/

பகுதி 36 –  https://vanakkamlondon.com/stories/2021/05/111664/

பகுதி 37 –   https://vanakkamlondon.com/stories/2021/05/112697/

பகுதி 38 –   https://vanakkamlondon.com/stories/2021/05/113713/

பகுதி 39 –   https://vanakkamlondon.com/stories/2021/06/114747/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More