புதுடெல்லி: ‘நம்மிடம் உண்மை உள்ளது, பயப்பட வேண்டாம், ஊழல் பாஜ.வுக்கு எதிராக போராடுவோம்,’ என்று காங்கிரசாசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் ேபாது இந்திய ராணுவத்துக்கு 126 நடுத்தர பல்திறன் போர் விமானம் கொள்முதல் செய்ய பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சி அமைந்த பிறகு 2016ம் ஆண்டு அதே டசால்ட் நிறுவனத்துடன் ஒரு விமானத்தின் விலை ரூ.1670 கோடி என்ற வகையில் 36 ரபேல் ஜெட் விமானம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் பாஜ முறைகேடு செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில், பிரான்ஸ் புலனாய்வு இதழான ‘மீடியாபார்ட்’, ‘ரபேல் போர் விமானம் கொள்முதலில் போலி ஆவணங்கள் மூலமக எஸ்.எம்.குப்தா என்ற இடைத்தரகருக்கு ரூ.65 கோடி கமிஷன் கைமாறியுள்ளது. இந்தப் பணம் மொரிசீயசில் 2007-2012ம் ஆண்டு அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அவரிடம் வழங்கப்பட்டுள்ளது,’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரசை பாஜ கடுமையாக விமர்சித்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஊழல் பாஜ அரசை எதிர்க்கும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தக் கூடாது. பயப்படக் கூடாது. நமது ஒவ்வொரு முயற்சியிலும் உண்மை உள்ளது. எனவே, கவலைப்பட தேவையில்லை. சோர்ந்து விடாதீர்கள்,’ என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
மூடி மறைக்க பாஜ முயற்சி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, ‘‘பாஜ அரசு தேசிய பாதுகாப்பை தியாகம் செய்து விட்டது. இந்திய விமானப்படை வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்துள்ளது. அரசு கருவூலத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி விட்டது. இந்திய பேச்சுவார்த்தை குழுவிடம் இருந்து ராணுவ அமைச்சகத்தின் ரகசிய ஆவணங்களை 2015ம் ஆண்டு இடைத்தரகரான சுஷன் குப்தா எவ்வாறு கைப்பற்றினார் என்பதையும் புலனாய்வு இதழ் வெளிப்படுத்தியுள்ளது.
இதில் போர் விமானத்தின் விலை எப்படி கணக்கிடப்பட்டது, எப்படி குறைக்கப்பட்டது போன்ற விவரங்கள் உள்ளன. டசால்ட் நிறுவனத்தை காப்பாற்றும் நோக்கில் ஊழலை மூடிமறைக்க மோடி அரசு மேற்கொண்ட ஆபரேஷன்தான் இது என்பதில் ஐயமில்லை. ரேபல் ஒப்பந்த ஊழலை புதைத்து விட மோடி அரசு-சிபிஐ-அமலாக்கத்துறை இடையே ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த ஆபரேஷன் கவர் அப்,’’ என்றார்.