அமராவதி: தென் மண்டல கவுன்சில் கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருப்பதியில் நாளை கூடுகிறது. தென் மண்டல கவுன்சிலின் 29வது கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா 2வது அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தென் மண்டல கவுன்சிலின் கூட்டம் திருப்பதியில் நாளை நடக்க உள்ளது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில முதல்வர்கள், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், லட்சுத்தீவு நிர்வாகி ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பில் மட்டுமே உறுதிபடுத்தப்பட்டுள்ளது. . இதில், இந்த மாநிலங்கள் சம்பந்தப்பட்ட 26 அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற ஒன்றிய அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆந்திரா அரசு வலியுறுத்த உள்ளது. மெட்ரோ ரயில்வே திட்டத்திற்காக ரயில்வே நிலங்களை நிரந்தரமாக மாற்றுவது மற்றும் ரயில்வே நிலங்கள், தண்டவாளங்களை கடக்க அனுமதிப்பது போன்ற கொள்கையை மறுஆய்வு செய்ய தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது.