‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை உலக நாயகன்’ கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.
ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ கருமேகங்கள் கலைகின்றன’. இதில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ‘ஸ்டைலிஷ் இயக்குநர்’ கௌதம் வாசுதேவ் மேனன், ‘நகைச்சுவை அரசன்’ யோகி பாபு, ‘தென்னிந்திய நந்திதா தாஸ்’ அதிதி பாலன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் எஸ். ஏ. சந்திரசேகர், ஆர். வி. உதயகுமார், பிரமிட் நடராஜன், டெல்லி கணேஷ், நடிகை மஹானா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மண் மணம் கமழும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஏயு மீடியா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தொப்பி அணிந்த பாரதிராஜாவின் அர்த்தமுள்ள பார்வை, கௌதம் வாசுதேவ் மேனன்- யோகி பாபு- அதிதி பாலன் ஆகியோரின் பார்வை வித்தியாசமாக இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.