அதிவிசேட பாதுகாப்புடன் வடக்கு மாகாணத்துக்கு நான்கு நாட்கள் விஜயம் செய்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து மாலை 7 மணி முதல் 9.30 வரை தனியார் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கவுள்ளார்.
நாளை (05) காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகரமயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
மாலை 6 மணி முதல் 8 மணி வரை யாழ்ப்பாணத்தில உள்ள தனியார் விடுதியில் இளைஞர் சமூகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
6 ஆம் திகதி முற்பகல் 9 மணிமுதல் 10 மணிவரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி அறிவியல் நகர் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட விரிவுரையாளர்களைச் சந்திக்கவுள்ளார். அதையடுத்து முற்பகல் 10 மணிமுதல் 11.30 வரையில் சர்வ மதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்கள் ஆகியவற்றுடனும், போதனா வைத்தியசாலையின் நலன்புரி சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிமுதல் 5 மணிவரை மாவட்டச் செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும் நடைபெறவுள்ளது.
7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதுடன், பயணத்தின் நிறைவாக ஐனாதிபதி கொழும்புக்கு பயணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.