செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பகுதி 3 | சமுதாய அமைப்பில் நீதியின் முன் பெண்களின் நிலை | ஒரு கண்ணோட்டம்

பகுதி 3 | சமுதாய அமைப்பில் நீதியின் முன் பெண்களின் நிலை | ஒரு கண்ணோட்டம்

4 minutes read

சமுதாய அமைப்பிலே பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். பெண்களுக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் அமையப் பெற்றுள்ளதா? இன்றைய நோக்கில் பெண்ணுக்குரிய உரிமைகள் அளிக்கப்பட்டனவா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயமாகும்.

 

நீதியின் கண்முன் பெண்களின் நிலையை ஆராயுமிடத்து, பெண்களின் தொழிற்சங்க ஈடுபாட்டுக்குத் தடையாக நிற்கும் கலாசாரப் பண்புகளை நோக்குவோம்.

1) தாய்மையின் பொறுப்புக்கள், வேலை நேரத்தின் பின்னரேயே கூட்டங்கள் நிகழுகின்றமை, நாள் முழுதும் வேலை செய்யும் அவள் குழந்தையிடம் இருந்து பிரிகிறாள். உணவு தயாரித்தல், வீட்டு வேலை செய்தல் போன்ற பளுக்களும் அவளைத் திக்குமுக்காடச் செய்கின்றன.

2.) குடும்பம் என்ற வட்டமும் அதற்குள் சென்ற கணவன், பிள்ளைகள், முதியோரைக் கவனிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அவளை ஆட்டிப் படைக்கின்றன.

3) வீட்டுக்குரியவள் வெளியே ஊதியத்திற்காக மாத்திரமே செல்லலாம். அதற்கு மிஞ்சி படி தாண்டக்கூடாது என்ற கருத்தியல் நிலவுகின்றமை.

இத்தகைய நிலைப்பாடுகளே பெண்களின் தொழிற்சங்க ஈடுபாடுகளுக்கு ஒருங்கிசைவு பெறுவதற்குத் தடைக்கல்லாக அமைகின்றன.

மேலும், இலங்கையைப் பொறுத்தவரை கல்வி முன்னேற்றத்தை ஏற்படுத்திய பேரறிஞர் சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் தான் நிறுவிய சேர். பொன். இராமநாதன் இந்துக் கல்லூரியிலே விதித்திருந்த சில கற்கை விதிமுறைகள் கூட குறுகிய வட்டத்திற்குட்பட்டதாயிருந்தது. உதாரணமாக, இக்கல்லூரியிற் கற்கும் பெண்கள் எல்லாவகையிலும் சிறந்த இந்துக்களாக வளர வேண்டுமென்ற நோக்கங்களையும் சமயக் கல்விக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டமையும் குறிப்பிடலாம்.

1920 களில் அளிக்கப்பட்ட சர்வ சன வாக்குரிமையில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டமையினை சேர். பொன்னம்பலம் இராமநாதன் எதிர்த்தார். பெண்கள் வாக்குரிமை பெறுவதனால் குடும்ப அமைதி குறையும் என வாதிட்டமை, கல்விகற்ற அறிஞர்கள்கூட பெண்களின் உரிமைகளுக்குத் தடைக்கல்லாக இருந்தனர் என்பதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும்.

எனவே, இவற்றுக்கெல்லாம் தீர்வுகாண வேண்டுமெனில் பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பெண்கள் முன்வரவேண்டும்.

வீரப்பெண்ணும் தீரப்பெண்ணும் பாரதிகண்ட புதுமைப் பெண்ணும் தமிழ் இலக்கியத்துடன் நின்றுவிட்டனரா? யுத்தங்களுக்கு வீரஉணர்வுடன் மறப்பண்புடன் தன் ஒரே மகனை அனுப்பிவைத்த பெண்ணும், போர்க்களத்தில் மார்புக் காயம் கண்டு மகிழ்ந்த தமிழ்த்தாயும், வழக்குரைத்து தன் கணவன் குற்றவாளியல்ல என்று நிரூபித்த கண்ணகியும் ஏட்டை அலங்கரிக்கும் பெண்களாகவே உள்ளனர்.

சமுதாயப் பெண்கள் அச்சம் கொண்டவர்களாக, மடமை பொருந்தியவர்களாக, நாணமுடையவர்களாக, அநீதிகளைக் கண்டு வாய்மூடி மௌனிகளாகக் கண்ணீர் சிந்தும் பதுமைகளாகவே இருக்கின்றனர்.

பெண்ணுரிமை, பெண்ணுக்குச் சமசந்தர்ப்பம் என்பன போன்ற தத்துவங்களில் பல விடயங்கள் அடங்கியுள்ளன. சமுதாயத்தின் பல்வேறு அம்சங்கள் இதில் தொக்கியுள்ளன. பல பெண்களுக்கு எப்படித் தாம் அடிமைப்பட்டுவிட்டோம் என்பது தெரியவில்லையோ, அதேபோல பல ஆண்களுக்கும் தாம் அவர்களை அடிமைப்படுத்துகிறோம் என்பது தெரியவில்லை. பண்பாடு, வழிவழிவந்த பரம்பரைக் கோட்பாடு என்ற போர்வையில் இவ் ஆண்டான் – அடிமைநிலை தொடர்கிறது.

இதனால் ஆண் வர்க்கத்திற்கு சலுகைகள் அதிகம். தட்டிக்கேட்க ஆளின்றி இச்சமுதாயப் போக்கு தொடர்கிறது. ஆகவே, பெண்ணினத்தைத் தட்டியெழுப்பி அவர்களின் துன்பகரமான வாழ்க்கை முறைகளை உணர்த்த வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்.

இன்றைய நிலையில் சமுதாய அமைப்பிலே பெண்ணின் உரிமைக்காகக் குரல் எழுப்பும் பல இயக்கங்கள் உருவாகி வருகின்றன. இன்றைய பெண் சுதந்திர இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளை வழிமைப்படுத்தினால் அவை சமசந்தர்ப்பம், அரசியல், பொருளாதார சமூகப் பிரச்சினைகளில் ஆணுக்குரிய பங்கு பெண்ணுக்கும் தரப்படவேண்டும் எனத் தொடருகின்றன.

சமுதாயக் கோப்பு ஒன்று எப்படி பழம்பெரும் பண்பாடு என்ற அடிப்படையில் பெண்களின் நியாயமான கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் நிராகரித்து பெண்களைப் பின்நின்று இயங்கும் சக்தியாக வைத்திருப்பதைப் பெண்கள் அறிந்து, அதற்கு மாற்றங்காண விழைய வேண்டும். கதைகளும் கட்டுரைகளும் மாத இதழ்களும் பெண்களைக் கவர்ச்சிச் சின்னமாக உபயோகித்து ஒரு விற்பனைப் பண்டமாக வைத்து வியாபாரம் செய்வது நிறுத்தப்பட வேண்டும்.

குடும்பம் என்ற சமூக அமைப்பில் பெண்ணும் வேலைக்குப் போவதால் ஏற்படும் பிரச்சினைகளையும் ஒழுங்கீனங்களையும் பெண்ணொருத்தியே தாங்கவேண்டிய அநீதி அகற்றப்பட வேண்டும். ஆண்கள் கைகொடுத்துதவி வீட்டுவேலை, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் தாமும் சமபங்கு ஏற்கவேண்டும் என்ற மனப்பான்மை அவர்களிடத்தில் தோன்ற வேண்டும்.

பெண்ணுரிமைப் போராட்டம் நடாத்தும் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எமது நாட்டைப் பொறுத்தமட்டில், பால் சமத்துவ நிலைக்கு சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தைக் கோடிட்டுக் காட்டலாம். இதில், மனித உரிமை பற்றிக் கூறும் ஒரு கூற்று சமுதாயத்தில் பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆணித்தரமாக வலியுறுத்தி நிற்கின்றது.

அதாவது, மனித உரிமைப் பிரகடனத்தின் தலைப்பு வாசகம் உறுப்புரை இரண்டில், ‘பின்வரும் மனித உரிமைப் பிரகடனத்தால் வழங்கப்படும் உரிமைகளும் சலுகைகளும் கடப்பாடுகளும் சகலருக்கும் பால், இனம், சமயம், பிராந்தியம் ஆகிய எல்லைகளுக்கப்பால் உரியதாகும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 20 ஆம் நூற்றாண்டளவில் இலத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பங்கு பற்றியும் இங்கு மேற்கோள் காட்டத்தக்கது. இவற்றுடன் இன்றைய நிலையில் இளைஞர் இயக்கத்தில் பெண்கள் பிரிவு தோன்றி, பெண்களின் சம அந்தஸ்து, கல்வியறிவு பற்றி அறைகூவல் விடுக்கிறது.

இலங்கைப் பெண்களின் தொழிற்சங்க ஈடுபாடுகள் பெண்களின் உரிமைக்காக நியாயப் போராட்டங்கள் நிகழ்த்துகின்றன. இன்றைய அறிவியல் உலகமானது பல்வேறு விதங்களில் பெண் நீதிக்காகக் கோஷம் இடுகின்றது. இன்றைய அறிவியல் உலகமானது ‘உணர்ச்சிபூர்வமாகவோ, புத்திநிலையிலோ ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை. கருத்தரிப்பதும் பிரசவிப்பதும் சிசுவுக்கு அத்தியாவசியமாகிய முதன் முதல் உணவை- தன் முலைப்பாலை- ஊட்டுவதும் பெண்ணின் சிறப்புப் பணிகள். இதனை ஆண் சாதிக்க முடியாது. ‘அந்த வேலையை நீ சிறப்புறச் செய்ய வேண்டும் என்று அவளை நிர்ப்பந்திக்க ஆண்மகன் தயங்கவில்லை’ எனக் கூறுகிறது.

பாலடிப்படையில் அமைந்த இந்த வேறுபாடே வேலைப்பாகுபாட்டுக்கு அனுகூலமாக வாய்த்தது. இதன் அடிப்படையில் ஒரு கருத்தியலே தோன்றியது. இதனடிப்படையிலேயே பெண்ணிலைவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இக்கருத்தியலைக் கருவாகக் கொண்டு தோற்றம் பெற்ற லிபரல் (விடுதலைப்) பெண்ணிலைவாதம் பெண்ணுக்கு அரசியல், பொருளாதாரத் துறைகளில் சம உரிமை அளிக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறது.

தீவிரப் பெண்விடுதலைவாதம், ஆணின் உடற்பலம், ஆதிக்க வெறி, பலாத்காரம், வல்லுறவு ஆற்றல் போன்ற ஆண்வர்க்கப் பண்புகளால் பெண் அடிமையாக்கப்படுகின்றாள் என்று கூறுகின்றது.

சோஷலிசப் பெண்விடுதலைவாதம், மாக்ஸியவாதிகள் பெண்விடுதலையைத் தள்ளிப்போடுவது அவர்களது ஆண் ஆதிக்கத்தையே புலப்படுத்துகின்றது என்கிறது.

இன்றைய கலைவடிவங்களில்கூட பெண்ணடிமை பரவலாகக் காணப்படுகின்றது. சிறுகதை, நாவல், திரைப்படம், தொலைக்காட்சி போன்ற வெகுசன தொடர்புசாதனங்களில் பெண்ணடிமைத்தனத்தைக் கருப்பொருளாகக்கொண்ட கதையமைப்புகளை, காட்சிகளைத் தவிர்க்க வேண்டும். திரைப்படங்களை நோக்குமிடத்து தாலி பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம், மக்களைப் பெற்ற மகராசி, மாமியார் மெச்சிய மருமகள் போன்ற பெண்ணடிமை சாயல் கொண்ட படங்கள் தடுக்கப்படவேண்டும்.

பெண்ணுக்கு சகல துறைகளிலும் நீதியும் சமவாய்ப்பும் அளிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுப்பின், அது மேலைநாட்டு நாகரிகப் பண்பு என ஆப்பு வைக்கும் அக்கிரமக்காரர்களின் கோஷம் அடக்கப்பட வேண்டும்.

நடுநிலை நின்று பெண் நீதி உரிமை பற்றி இயம்புமிடத்து, பெண் உரிமையற்ற இரண்டாம்பட்ச புத்திஜீவி என்பன போன்ற கருத்தியல்கள் அகற்றப்பட வேண்டும். இவை தேசங்களையும் நாடுகளையும் மொழிகளையும் பண்பாடுகளையும் கடந்த ஒரு சர்வதேசக் கருத்தியலாக மாறவேண்டும் என்ற கருத்தைத் தெளியலாம்.

வாழ்க பெண்சமத்துவம்!

ஒழிக பெண்ணடிமை!

 

 

நிறைவு பெற்றது…

 

 

நன்றி : ஷர்மிலா ஜெயினுலாப்டீன் | நீதிமுரசு 1995 | நிலாப்பெண்  இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.