சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும் வடக்கு மாகாணத்திலும் தமிழர்கள் வாழ்விலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை என்று பட்டியல் போட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபததில் இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
‘இன்றைய நிலையை நாம் எடுத்துப் பார்த்தால் எமது வடமாகாணம் அதன் அவலங்களிலும் ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை,தனியார் காணிகளும் மக்கள் நலம் சார்ந்த கட்டிடங்களும் விடுவிக்கப்படவில்லை, காணமற்போனார் விபரங்களை அவர்களின் சுற்றத்தார் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
முன்னாள் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னமும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை, மாகாணத்தின் அலுவல்களில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு குறைந்தபாடில்லை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படவில்லை,மீனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை,விதவைகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படவில்லை.
இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவல நிலையைப் பட்டியல் இட்டுக் கூறிக் கொண்டே போக முடியும்.
எம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட இந்த அரசாங்கம் ஜனநாயக சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எனினும் மூன்று விடயங்கள் இன்று மிக முக்கிய நிலையைப் பெற்றுள்ளன.
ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் மாற்றம் ஏற்படுத்தல், தமிழ் மக்களின் பிரச்சினையை ஐ.நா. உரிமை சாசனங்களின் அடிப்படையில் நிரந்தரமாகத் தீர்த்து வைத்தல், போர்க்குற்ற விசாரணைகளை 2015 செப்ரெம்பர் மாத ஐ.நா. இணைந்த பிரேரணையின் அடிப்படையில் முறையாக நடத்துவித்து நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியனவையே அவை.
இவற்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது எமக்குத் தெரிந்ததே. ஆனால் எவ்வாறான அரசியல் மாற்றம் நடைபெறும், எவ்வாறான தீர்வு எமக்குக் கிடைக்கும், போர்க் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவார்களா என்பதில் எமக்கு மயக்கநிலையே இருந்து வருகின்றது என குறிப்பிட்டார்.