நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 26 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். இவ்வளவு காலம் அவர்கள் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பது கொடுமையானது. சுப்ரீம் கோர்ட்டு இந்த 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டிருந்தது. அப்போது, அரசு விரும்பினால் 435-வது பிரிவின் கீழ் இவர்களை விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து மாநில அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டது.
ஆனால் மத்திய அரசு அதற்கு உடன்படவில்லை. இதனால் விடுதலையில் முட்டுக் கட்டை ஏற்பட்டது. 2 அரசுகளும் ஒருமித்த கருத்துடன் இருந்திருந்தால் அவர்கள் விடுதலை ஆகி இருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த நல்ல நேரத்தில் அந்த 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க 161-வது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதனை பயன்படுத்தி தமிழக அமைச்சரவையை கூட்டி விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பவேண்டும். இதை செய்வதன் மூலம் 7 பேரும் விடுதலையாக வழி ஏற்படும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், திரைப்பட தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டு உள்ளோம். முதல்-அமைச்சருக்கு அதற்கான நேரம் ஒதுக்கி தருமாறு கடிதம் எழுதப்படும். அவர் ஒதுக்கும் தேதியில் ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தின் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவனமும் ஈர்க்கப்படும்.